Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நல்ல மீன்கள் | அருட்தந்தை அருண்
இன்றைய வாசகங்கள் (30.07.2020)-பொதுக்காலத்தின் 17 ஆம் வியாழன் - I. எரே: 18: 1-6;II.திபா:146: 1-2, 3-4; III.ந.வா : மத்: 13: 47-53
இறை இயேசுவில் அன்புக்குரியவர்களே, 'மனம் திருந்தி இறைவனின் பிள்ளையாக வாழ்ந்திட' என்பதை கருப்பொருளாகக் கொண்டு இன்றைய முதல் வாசகமும் , நற்செய்தியும் அமைந்துள்ளது.
பழைய ஏற்பாட்டு நூலில் விடுதலைப்பயண புத்தகத்தில் இஸ்ரயேல் மக்கள் மோயீசனுக்கு எதிராக பேசினார்கள், முணுமுணுத்தார்கள் என்று வாசிக்க கேட்கின்றோம். மிகப்பெரிய இறைவாக்கினர், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், இஸ்ரயேல் மக்களின் துன்பத்தை கண்டு, அடிமை தளத்திலிருந்து மீட்டுக் கொண்டு வரும்போது, பாலைவனத்தில் இந்த இஸ்ரேல் மக்கள் மோயீசனுக்கு எதிராக பேசிய உடன் இறைவன் அவர்களை இஸ்ரயேல் மக்களை உடனே தண்டிக்கின்றார். இவ்வாறு கடவுள் சினம் கொண்டு அவர்களை தண்டிக்கின்றபோது அந்த மக்கள் 'மனம் திரும்புகின்றனர்'. எனவே, இறைவனும் தனது சினத்தை மாற்றிக் கொண்டு, இரக்கத்தை வெளிப்படுத்தி தனது பிள்ளைகளாக ஏற்றுக் கொள்கிறார்.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் தனது சினத்தை வெளிப்படுத்துகிறார். ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள் ஏன் தனது குழந்தையிடம் கண்டிப்பாக இருக்கின்றார்கள்? ஏன் குழந்தைகள் தவறு செய்யும் போது கோபம் கொள்கிறார்கள்? தனது குழந்தை தீய வழியில் சென்றுவிடக்கூடாது, எப்போதும் எனது குழந்தைகள் நல்லவர்களாகவே இந்த சமுதாயம் போற்றும் மனிதர்களாக இருக்க வேண்டும் என்கிற நல்ல மனது உடையவர்களாக பெற்றோர்கள், குழந்தைகள் தவறு செய்யும் போது கண்டித்து திருப்புகிறார்கள். ஆக, எரேமியா 18 : 4 - 6ல் எனது மக்களே நீங்கள் இந்த குயவன் கையில் உள்ள களிமண்ணைப் போல, நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள் குயவன் களிமண்ணைக் கொண்டு மண்கலம் சரியாக அமையாத போதெல்லாம் அவன் விருப்பப்படி வேறு ஒரு களமாக மாற்றிக் கொண்டிருந்தான் என்று வாசிக்கக்கேட்கின்றோம். எனவே, நாம் கடவுளின் விருப்பப்படி வாழாமல், தவறு செய்து கொண்டு, மனம் திரும்பாமல் இருந்தால், அந்த குயவனைப் போன்று இறைவன் தனது விருப்பப்படி நம்மை தண்டிப்பார் என்று எரேமியா இறைவாக்கினர் கூறுகின்றார்.
இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு மீண்டும், விண்ணரசு எப்படி இருக்கும் என்பதற்கு உவமையாக கடலில் வீசப்பட்ட வலையில் கிடைக்கும் எல்லா வகையான மீன்களைப் போன்று இருந்தாலும் இறுதியில் (நல்லவற்றை மட்டுமே நல்ல மீன்கள் சேகரித்து) நல்ல மனிதர்களை இறைவனுக்கு ஏற்றார்ப்போல் வாழ்ந்தவர்களை தன்னுடன் சேர்த்துக் கொள்வார் என்று நமக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இன்றைய நற்செய்தி உவமை ஏறக்குறைய வயலில் நடப்பட்ட கோதுமை கதிர்களின் மத்தியில் வளர்ந்த களைகளைப் போன்று எவ்வாறு அந்த வயலில் கோதுமை கதிர்களையும் களைகளையும் அனுமதித்து இறுதியில் கோதுமை கதிர்களை மட்டும் சேகரித்தும் களைகளை தேவையில்லை என்றும் அகற்றுகிறார்களோ, அதைப்போன்றே இறைவனின் தீர்ப்பு நாளில் நல்ல மனிதர்களை வானதூதர்கள், புனிதர்கள், அன்னைமரியாள் மத்தியில் அவருடன் சேர்ந்து கொள்வார், தனது விண்ணக அரியணையில், தீயவர்களை எரி நரகத்தில் தள்ளி அணையாத நெருப்பில் வெந்து, கஷ்டப்பட்டு வாழ்ந்திட நரக தண்டனை கொடுத்திடுவார் என்று விவிலிய அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்
இவ்வுலகில் இறைவன் எல்லா மனிதர்களுக்கும் நல்லவர், தீயவர் என்று பாகுபாடில்லாமல் வாழ்ந்திட வாய்ப்பினை கொடுத்திருக்கிறார். நாம் தீயவர்களாக இருந்தாலும், அவரிடம் மனம் வருந்தி நமது பாவங்களுக்காக முழுமையாக மனம் மாறினால் இறைவன் நம்மை ஏற்றுக் கொள்வார். ஆகவே, இவ்வுலகில் வாழும்போது தீமைகளை களைந்து நல்லவற்றை நோக்கி பயணித்து இறைவனின் தண்டனை தீர்ப்பிலிருந்து நம்மையே காத்துக்கொள்ள நல்லவர்களாக, இறைவனுக்கு ஏற்ற மக்களாக வாழ்ந்திட தொடர்ந்து ஜெபிப்போம். -ஆமென்.
அருட்தந்தை அருண் sdc.
ஸ்பெயின்..
Add new comment