நல்ல மரங்களாவோமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம் சனி; I: 1 திமோ: 1: 15-17; II: தி.பா: 113: 1-2, 3-4, 5-7; III: லூக்:  6: 43-49

பொதுவாக கனிகளை விரும்பாதோர் உலகில் யாருமில்லை எனலாம். கனிகள் என்பவை உடலுக்கு மிகுந்த ஆரோக்கியமளிக்கின்ற உணவு. எல்லா கனிகளுமே தன்னுள்ளே ஏதாவது ஒருவகை சத்துக்களை கொண்டதாக இருக்கும். நோய்நீக்கும் மருத்துவ குணம் கொண்டதாக இருக்கும். பல மரங்களை உருவாக்கும் சக்தியுள்ள விதைகளைக் கொண்டதாகவும் இருக்கும். இவ்வாறு கனிகளை பற்றி நாம் பேசிக்கொண்டே போகலாம். ஆனால் இந்தக் கனிகளை நமக்குத் தரும் மரங்களை நாம் பல சமயங்களில் கண்டுகொள்வதில்லை. 

நாம் மரம் நட திட்டமிடுகின்ற போது காண்கின்ற மரங்களையெல்லாம் நடுவதில்லை. மாறாக பலன் அதிகம் தரும் மரங்களை மட்டுமே நட்டுவைக்கிறோம். யாராவது நமம்வீட்டுத்தோட்டத்தில் மரக்கன்றுகளைப் பெற விரும்பினால் " இந்த மரம் நல்லா காய்க்குமா? " என்ற கேள்வியைத்தானே கேட்பார்கள். ஆம் ஒருமரம் நல்லதா கெட்டதா என்பதை அதன் கனியை வைத்துதான் மதிப்பிட முடியும். அதுபோலத்தான் மனிதரும் அவர்களுடைய நல்ல செயல்களை வைத்தே மதிப்பிடப் படுவர்.

யாரேனும் நம்மைக் கடந்து செல்கையில் அல்லது நம்மை விட்டுப் பிரிந்து செல்கையில் நாம் அவர்களைப்பற்றி மற்றவரிடம் பேசுவது வழக்கம். ஒரு சிலரைப்பற்றி நல்ல கருத்துக்களைப் பகிர்வதுண்டு. காரணம் அவருடைய நற்செயல்கள். " இவர் பாசமாய் இருப்பார். புரிந்து கொள்வார். மன்னிப்பார். அமைதியாய் இருப்பார். கடமைகளை நிறைவேற்றுவார் " என்று அவருடைய செயல்களின் அடிப்படையிலேதான் அம்மனிதரை நாம் மதிப்பீடு செய்கிறோம்.

அதேசமயத்தில் வேறு சிலரை நோக்கி " இவர் கோபக்காரர். எரிந்து விழுவார். பாவி. நல்ல மனசில்லை. அதிகமாக பொய்பேசுவார். தீயவர் " என்று அவர்களுடைய செயல்களை கொண்டே தீயவர் என மதிப்பிடுகிறோம்.

ஏனெனில்  ஒருவருடைய செயல்கள் அவருடைய உட்புறத்தை படம் போட்டுக் காட்டுகிறது. ஆம் எவ்வாறு மரம் கனிகளால் அறியப்படுக்கிறதோ அவ்வாறே மனிதன் அவன் செயல்களால் அறியப்படுகிறான்.மரம் நல்ல மரம் கெட்ட மரம் என்று கூறப்படுவதைப் போல மனிதனும் நல்லவன் என்றும் கெட்டவன் என்றும் அறியப்படுகிறான்.
எனவே நம்மைப் பிறர் மதிப்பிடுவதற்கு ஏதுவாக நமது செயல்பாடுகள் அமைகின்றன.

நற்செயல்களை வெளிப்படுத்தும் மனிதர்களாக வாழ நாம் என்ன செய்யவேண்டும்? 
நற்கனி தரும் மரமானது மண்ணில் ஆழமாக வேரூன்றி இருந்து, வெயிலையும், மமழையையும், காற்றையும் தாங்கி, தன் சொந்த இலைகளே உதிரும் போதும், தன் கிளைகள் வெட்டப்படும் போதும் பொறுமையாய் இருப்பது போல,  இறைவனில் அவருடைய வார்த்தையில் ஆழமாக வேரூன்றி இடர்கள், துயர்களுக்கு மத்தியிலும் பொறுமையாக இருந்து நம்செயல்களில் நன்மையை வெளிப்படுத்தும் போது நாம் நல்ல மனிதர்களாக மாற 
முடியும்.

இறைவனின் அன்பையும் அவரின் வார்த்தையையும் பிறருக்கு வழங்கும் நல்லவர்களாக,  கனிதரும் நல்ல மரங்களாக வாழும் வரம் வேண்டி அவரிடம் மன்றாடுவோம். 

இறைவேண்டல் 

அன்பு இறைவா உம்மிலே ஆழமாக வேரூன்றி நற்செயல்கள் புரியும் நல்ல மனிதர்களாக வாழ வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

11 + 8 =