நல்ல நட்பு நன்மை செய்யும் | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


 பாஸ்கா காலம் -ஐந்தாம் வெள்ளி
I : திப: 15: 22-31
II : தி.பா: 57: 7-8. 9-11
III : யோவான்:   15: 12-17

நட்பு என்ற வார்த்தை உன்னதமான உணர்வைத் தருகின்றது. ஜாதி மதம் மொழி இனம் பாகுபாடுகள் அனைத்தையும் தாண்டி நல்ல உறவை வலுப்படுத்த வழிகாட்டுவது நட்பு என்கிற உன்னதமான உணர்வு. "உன் நண்பன் யாரென்று சொல் நீர் யாரென நான் சொல்கிறேன்" என்று புனித தொன்போஸ்கோ அடிக்கடி கூறுவார். நல்ல நண்பர்கள் நல்ல வழியை காண்பிப்பார்கள். தீய நண்பர்கள் தீய வழியை காண்பிப்பார்கள். எனவே நமது நட்பு வட்டாரத்தை சற்று ஆழமாக அறிந்து கொள்ள வேண்டும். உலக காரியங்களில் மகிழ்ச்சி கொள்வதற்காக நமது நட்பு இருக்கக்கூடாது. மாறாக, அது இறைவனை நோக்கி இன்னும் ஆழமாக அழைத்துச் செல்லும் ஒன்றாக இருக்க வேண்டும். ஏனெனில் உண்மையான நண்பர்கள் தன் நண்பருக்காக உயிரையும் கொடுக்க தயங்கமாட்டார்கள்.

ஒரு முறை ஒரு ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. நீச்சல் தெரியாத நண்பருடன் ஒருவர் சென்றார். அறியாத விதமாக தெரியாதவர் நீச்சல் தெரியாத அந்த நண்பர் பெருவெள்ளம் ஏற்பட்ட ஆற்றில் தவறி விழுந்து விட்டார். பெரு வெள்ளம் இழுத்துச் சென்றது. நீச்சல் தெரிந்த அவரின் நண்பர் ஒரு இதய நோயாளி. இருந்தபோதிலும் அதைப் பொருட்படுத்தாமல் என்னுடைய உயிர் நண்பனை நீச்சலடித்து காப்பாற்றினார். நீச்சல் தெரியாது நண்பரை கரையில் விட்ட கொஞ்ச நேரத்தில் இதய அடைப்பு ஏற்பட்டது இறந்துவிட்டார். 

"தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள். இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்" என்ற இயேசுவின் வார்த்தை நட்பின் மேன்மையை சுட்டிக்காட்டுகிறது. மேற்கூறிய நிகழ்வு நண்பனுக்காக உயிரைக் கொடுக்கும் தியாகத்தின் அன்பை சுட்டிக்காட்டுகிறது. இப்படிப்பட்ட அன்பை தான் நம் ஆண்டவர் இயேசு தன் வாழ்வில் வெளிப்படுத்தினார். நம்மை இப்படிப்பட்ட அன்போடு வாழவும் நம் நட்பினை வளர்த்துக் கொள்ள அழைப்பு விடுக்கிறார்.

இன்றைய நாளில் நல்ல நண்பர் கூறிய பண்புகளை அறிந்து கொள்வோம். முதலாவதாக, நல்ல நண்பர் தன் உயிரை பொருட்படுத்தாது நண்பனுக்காக உயிரை கொடுப்பவர். இது தியாகத்தின் உச்சத்தை சுட்டிக்காட்டுகிறார். இப்படிப்பட்ட நட்பை நம் ஆண்டவர் இயேசுவினிடத்திலும் அறிய வருகிறோம்.

இரண்டாவதாக, நல்ல நண்பர் என்பவர் திறந்த உள்ளத்தோடு இருப்பார். வீட்டு முதலாளி எல்லாவற்றையும் தன் பணியாளருக்கு தெரிவிப்பதில்லை. முதலாளி என்ன செய்யப்போகிறார் என்பது கடைநிலை பணியாளர்கள் தெரியாது. ஆனால் ஆண்டவர் இயேசு இந்த உலகத்திற்கு தலைவராக இருந்த போதிலும் தான் அழைத்த சீடர்களை தன் நண்பர்களைப் போல போல அரவணைத்தார். எந்தவொரு ஒளிவு மறைவும் இல்லாமல் இறை திட்டத்தை திறந்த இதயத்தோடு வெளிப்படுத்தினார். இப்படிப்பட்ட மன நிலையை ஒவ்வொரு நண்பர்களும் கொண்டிருக்கும்பொழுது நட்பின் மேன்மையை உணர முடியும்.

மூன்றாவதாக, உண்மையான நண்பர் என்பவர் தூய வழியில் வழி நடத்த வேண்டும். ஆண்டவர் இயேசு ஒரு நண்பரைப் போல தம் சீடர்களைத் தூய வழியில் வழிநடத்தி மீட்பின் கனியைச் சுவைக்கும் பாதையை காட்டினார்.

எனவே இயேசு இறையாட்சியில் பயணிக்கும் நாம் நல்ல நண்பர்களை பெற்று கொள்வோம்.  அதற்கு நம் ஆண்டவர் இயேசுவை முன்னுதாரணமாகக் கொண்டு, தன் நண்பனுக்காக உயிரைக் கொடுக்கும் அளவிற்கு தியாக உள்ளத்தோடு வாழ முன் வருவோம். நல்ல நண்பர்களைப் பெற்று நன்மைகள் பல செய்திட தேவையான அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! நல்ல நண்பர்களை உமது வழியில் பெற்று, நன்மைகள் பல செய்திட அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
த.சூசையப்பட்டிணம்

Add new comment

14 + 2 =