நல்ல எண்ணம் கொண்டவர்களா நாம் | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம் 16 ஆம் சனி ; I: வி.பா:   24: 3-8; II  : தி.பா: 50: 1-2. 5-6. 14-15; III:  மத்:  13: 24-30

நல்ல எண்ணம் கொண்டவர்கள் எப்போதும் வாழ்க்கையில் முன்னேற முடியும். நமது எண்ணம் நல்லதாக இல்லையென்றால் தீமையில் போய் முடியும். நல்லெண்ணத்தோடு வாழ்வை நடத்த இன்றைய நற்செய்தி நமக்கு அழைப்பு விடுக்கின்றது. எண்ணங்களை தூய்மையாய் வைத்துக்கொள்வது நம் வாழ்வுக்கு நல்லது. ஏனெனில் தூய எண்ணம் மட்டுமே நம்மைத் தூய வாழ்வுக்கு இட்டுச் செல்லும். நம் எண்ணம் தூய்மையற்றதாக இருந்தால் நம் வாழ்வும் தூய்மையற்றதாக மாறிவிடும். இதைத்தான் இன்றைய நற்செய்தியின்  வழியாக ஆண்டவர் இயேசு நமக்கு சுட்டிக்காட்டுகிறார்.

இன்றைய நற்செய்தியில் நல்ல விதைகள் விதைக்கப்பட்ட நிலத்தில் களைகளும் சேர்ந்து வளரும் வண்ணம் அலகை சூழ்ச்சி செய்வதைக் கூறும் உவமையை நாம் தியானிக்கிறோம். இவ்வுவமை நமக்கு தரும் செய்தி என்னவென்றால் இவ்வுலகில் நன்மையும் தீமையும் ஒருங்கே வாழ்கின்றன். ஒளியிருக்கும் இடத்தில் இருளும் இருக்கின்றது. இதுவே எதார்த்தம். அதைப்போல நற்சிந்தனைகள் உள்ள மனதனின் மனதிலேதான் தீய எண்ணங்களும் உதிக்கின்றது. இரண்டும் வளர்கின்றன. ஆனால் எதை மனிதன் அறுவடை செய்து சேமிக்கப்போகிறான் என்பதில்தான் வாழ்வு செழிக்குமா இல்லை அழியுமா என்பது அடங்கி இருக்கிறது.

நம்முடைய அன்றாட வாழ்வில் நன்மை தீமை இரண்டுமே இருக்கின்றது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நன்மை தீமை இரண்டையுமே சந்தித்தாக வேண்டும். ஆனால் தீமையையும் நன்மையையும்கையாளும் சுதந்திரம் நமக்கு உண்டு.தீமையை தெரிவு செய்தோமென்றால்   நம் வாழ்வு கேள்விக்குறியாக மாறிவிடும். நன்மையைத் தெரிவு செய்தோமென்றால் நம் வாழ்வு மகிழ்ச்சி நிறைந்ததாக மாறும். நாம் எதை தெரிவு செய்ய இருக்கிறோம் என்பதை  இன்றைய நாளில் சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகிறோம். 

இயேசுவை பேதுரு மற்றும் யூதாசு ஆகிய இருவரும் மறுதலித்தனர். ஆனால் பேதுரு மனமாற்றம் என்ற நல்ல பங்கை தெரிந்து கொண்டார். யூதாசு அழிவு என்ற தீயப் பங்கைத் தேர்ந்து கொண்டார்.  இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் பொழுது இரண்டு கள்வர்கள் இயேசுவோடு தொங்கவிடப்பட்டிருந்தனர். நல்ல கள்வன் மனமாற்றம் அடைந்து நல்ல எண்ணத்தோடு இயேசுவிடம் மன்னிப்பு கேட்டார். எனவே விண்ணக பேரின்ப வாழ்வைப் பெற்றார். கெட்ட கள்வனோ தன்னுடைய குற்றத்தை உணராது இயேசுவையே பரிகசித்தான். எனவே அவர் விண்ணக பேரின்ப வாழ்வைப் பெறுவதற்கு வாய்ப்பினை இழந்தார்.

நம் வாழ்க்கையில் வெற்றி பெறுவதும் வாழ்க்கை இழப்பதும்   நமது கையில் தான் இருக்கின்றது. நல்ல எண்ணங்களும் தீய எண்ணங்களும் நம் வாழ்வில் வரலாம். ஆனால் எதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற தெளிவான பார்வை மட்டுமே முக்கியம். தீய எண்ணங்கள் வருகின்ற பொழுது நம்முடைய நல்ல எண்ணங்களால் அவற்றை வெல்ல முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு தீய எண்ணங்களை வெல்லுகின்ற பொழுது, நம் வாழ்வில் நிறைவையும் மகிழ்வையும் வெற்றியையும் காணமுடியும்.

ஆண்டவர் இயேசு நாற்பது நாள் சோதிக்கப்பட்டார்.தீய சிந்தனைகள் சாத்தான் வழியாக கொடுக்கப்பட்டது.
ஆனால் ஆண்டவர் இயேசு தன்னுடைய  நல்ல எண்ணத்தால் அனைத்தையும் வென்றார். மிகச்சிறந்த எழுச்சி மிகு இறையாட்சி பணியை அதற்குப்பிறகு செய்தார்.

நம்முடைய அன்றாட வாழ்விலும் மனிதர்களாகிய நாம் எண்ணற்ற தீய எண்ணங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அவற்றை வெல்வதற்கு ஒரே வழி கடவுளிடம் நம்மையே ஒப்படைத்து, நல்ல எண்ணத்தோடு வாழ முயற்சி செய்வது ஆகும். நல்ல எண்ணங்கள் நம் வாழ்விலே அதிகரிக்கும்போது,  தீய எண்ணங்கள் தானாகவே போய்விடும். நல்ல எண்ணங்களை அதிகமாக கொண்டிருக்க முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர். காரணம் நல்ல  எண்ணங்கள் மட்டுமே நம் வாழ்வில் வளமையையும் நிறைவையும் கொடுக்க முடியும். நல்ல எண்ணங்களைக் கொண்டவர்கள் தான் வாழ்வில் மிகப்பெரிய சாதனைகளை உலக வரலாற்றில் செய்திருக்கின்றனர். தீய எண்ணங்கள் கொண்டிருந்தவர்கள் இந்த உலகத்திலே மிகப்பெரிய இழிவுகளை தந்துள்ளனர்.

எனவே இப்படி அன்றாட வாழ்வில் தீய எண்ணங்களும் சூழ்நிலைகள் வரும் பொழுது,  அவற்றைக் கண்டு துவண்டுவிடாமல் நேர்மறை எண்ணங்களின் வழியாக வாழ்வில் வெற்றி அடைய நம்மையே முழுவதும் கடவுளிடம் ஒப்படைப்போம். அப்பொழுது கடவுளின் ஆசீரும் ஆற்றலும் நமக்கு நிறைவாகக் கிடைக்கும். பிறர் நன்றாக இருக்க வேண்டும் என்று நமக்கு தீங்கு செய்பவர்களையும் நல்லெண்ணத்தோடு வாழ்த்தும் பொழுது கடவுளின் ஆசீரை நிறைவாகப் பெற்றுக் கொள்ள முடியும். கடவுளின் ஆசியை பெற்றுக்கொள்ள வேண்டுமா? அப்படியானால் நல்லெண்ணத்தோடு வாழ முயற்சி செய்வோம்.

இறைவேண்டல் : 
நன்மைகளின் நாயகனே எம் இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் நல்லெண்ணத்தோடு வாழ்ந்து தீமையை வென்றெடுக்க அருளைத் தாரும். ஆமென்.

 

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

5 + 4 =