Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நல்லாயனின் மந்தைகளாய் வாழ்ந்திடத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection
பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு
I :தி ப :13:14,43-52
II : தி பா:99:1-3,5
III:திருவெளி7:9,14-17
IV : யோவான் 10:27-30
பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு நல்லாயன் ஞாயிறு என்று அழைக்கப்படுகின்றது. இந்த நல்லாயன் ஞாயிறு நமக்கெல்லாம் ஆயனாக விளங்கும் கடவுளின் மந்தையில் இணைந்து அவர் அளிக்கும் அன்பையும் பாதுகாப்பையும் நிலைவாழ்வையும் நிறைவாகப் பெற்றிட நம்மை அழைக்கின்றது.அவற்றை ஆழமாகச் சிந்திப்போம்.
இன்றைய நற்செய்தி வாசகம் ஆயனுக்குரிய சிறந்த பண்புகளை நமக்கு எடுத்துரைப்பதாக உள்ளன.முதலாவதாக ஆயனின் அன்பு. "
என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும்." ஒருவர்மீது கொண்டுள்ள அன்பு அவரைப்பற்றி அறிந்து கொள்வதற்கான ஆர்வத்தைத் தூண்டும். இங்கே இயேசு "எனக்கும் அவற்றைத் தெரியும் "என்று கூறுவதன் மூலம் வெளிப்படுத்துவது அவர் தன் ஆடுகளை எந்த அளவுக்கு அன்பு செய்கிறார் என்பதையே. தாயின் கருவிலேயே நான் உன்னை அறிந்திருந்தேன் என்ற யாவே இறைவனின் வார்த்தைகளின் மறுபிரதியாக இவ்வாக்கு அமைந்துள்ளது.ஆம் நம்மை கடவுள் அவருடைய அன்பின் மிகுதியால் பெயர் பெயராய் அறிந்துள்ளார். அவரிடமிருந்து நாம் எதையும் மறைக்க இயலாது. அவருடைய அன்பை நாம் உணர்ந்திருந்தோமேயானால் நாம் அவருக்கு செவிசாய்க்கும் மக்களாக வாழ்வோம் என்பதில் ஐயமில்லை.
இரண்டாவதாக ஆயன் தரும் பாதுகாப்பு. "என்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஆடுகளை என்னிடமிருந்து யாரும் பறித்துச் செல்ல முடியாது என இயேசு கூறுகிறார்.ஆடுகளை ஓநாய் போன்ற கொடிய விலங்குககளிடமிருந்து பாதுகாப்பதே ஒரு ஆயனின் கடமை.அதைப்போல நம் ஆண்டவர் சாத்தானின் சூழ்ச்சிகளும் உலக மாயக் கவர்ச்சிகளும் நம்மை அவரிடமிருந்து பறித்துச் செல்ல இயலாத அளவுக்கு காத்துக்கொள்வார் என்பதை உறுதிப்படுத்துகிறார். அவ்வாறே பாவத்தால் நாம் அவரிடமிருந்து விலகினாலும் நம்மைத் தேடிவந்து மீட்கும் நல்லாயன் அவரே.
மூன்றாவதாக நிலைவாழ்வு. " நான் அவற்றிற்கு நிலைவாழ்வு அளிக்கிறேன்" என்று இயேசு கூறுகிறார். நிலைவாழ்வு என்பது என்ன? பாவக்கறைகள் நீக்கப்பட்டு தூய ஆன்மாவுடன் ஆண்டவருடைய பிள்ளைகளாக வாழ்வதே உண்மையான நிலைவாழ்வு. தந்தையாம் கடவுள் நம் ஆண்டவர் இயேசுவின் வழியாக இந்த நிலைவாழ்வை உலகனைத்திற்கும் வழங்கியுள்ளார்.
இவ்வாறாக நல்லாயனாய் விளங்கும் நம் ஆண்டவர் அவருடைய மந்தையாகிய நமக்கு தன் முழு அன்பையும் பாதுகாப்பையும் நிலைவாழ்வையும் வழங்குகிறார். இதை அனுபவித்து மகிழ நமக்குத் தேவையானது எது? நல்லாயன் ஆண்டவரின் மந்தையைச் சேர்ந்த ஆடு நான் என்கிற உள்ளார்ந்த உணர்வும் அனுபவமும். ஆம் கடவுளுடைய மக்களாக நம்மை நாம் உணரவில்லை எனில் நம்மால் அவருடைய அன்பை உணரமுடியாது. உலகத்தின் பின்னால் செல்பவர்களாய் நாம் வாழ்ந்தால் கடவுள் தரும் பாதுகாப்பை நம்மால் அனுபவிக்க முடியாது. அவர் வழங்கும் நிலைவாழ்வையும் பெற முடியாது. ஆகவே கடவுள் அருளும் அன்பையும் பாதுகாப்பையும் நிலைவாழ்வையும் பெற அவருடைய மந்தையின் ஆடுகளாய் மகிழ்வுடன் வாழத் தயாராவோம்.
இறைவேண்டல்
நல்லாயனே இறைவா! உமது மந்தையின் ஆடுகளாய் உம் அன்பையும் பாதுகாப்பையும் நிலைவாழ்வையும் பெற்றிடும் மக்களாய் வாழ்ந்திடத் துணைபுரியும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment