நல்லதை செய்ய நான் முந்திக்கொள்கிறேனா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் பனிரெண்டாம் செவ்வாய்
I : 2அர19:9-11,14-21,31-36
II : திபா 47:2-4,10-11
III : மத்7:6,12-14

எல்லாவற்றிலும் முன்னுரிமை, முதன்மை இடம் பெறுவதற்காக உழைக்கும் மக்களாக நாம் இருந்து வருகிறோம். என் இடத்தில் நான் இருந்து கொள்வேன்.மற்றவர்கள் எனக்குச் செய்வதை சரியாகச் செய்ய வேண்டும். என்னை மதிக்க வேண்டும். என்னை உயர்த்த வேண்டும். எனக்கு செவி கொடுக்க வேண்டும். எனக்கு உதவ வேண்டும் என எல்லாரும் எண்ணிக்கொண்டு அவரவர் இடத்திலே இருந்தால் யார்தான் யாருக்கு நல்லவை செய்ய இயலும்?  இத்தகைய மனநிலை யை முற்றிலும் களைய வேண்டும் என்பதே நம் ஆண்டவர் இயேசுவின் விருப்பம்.

ஆம் அன்புக்குரியவர்களே இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு நமக்கு பொன்விதியைத் தந்துள்ளார். "பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்." என்பதே அப்பொன்விதி. இந்த வார்த்தைகளுக்கு விளக்கமே தேவையில்லை. மிகவும் தெளிவாக எதார்த்தமாக நம் ஆண்டவர் இயேசு இவ்வார்த்தைகளைக் கூறியுள்ளார்.

நாம் பிறரிடமிருந்து தீயவை எதையும் எதிர்பார்ப்பதில்லை. நன்மைகளை மட்டுமே எதிர்பார்க்கிறோம். அவ்வாறிருக்க நாம் எதிர்பார்க்கும் நன்மைகளை நாம் ஏன் பிறருக்குத் தரக்கூடாது?  

அசிசி நகர புனித பிரான்சிஸ் அமைதிக்கான தன்னுடைய இறைவேண்டலில் பிறர் என்னைப் புரிந்து கொள்வதை விட நான் பிறரைப் புரிந்து கொள்ளவும், அன்பு செய்யப்படுவதை விட அன்பு செய்யவும், ஆறுதல் அடைவதைவிட ஆறுதல் அளிக்கவும் தனக்கு வரமருள வேண்டுமென மன்றாடுகிறார். ஆம் நல்லவை செய்ய பிறரைவிட நாம் முந்திக்கொள்ள
வேண்டும். நாம் நன்மைகளை வழங்குவதற்கு முதலடி எடுத்து வைக்க வேண்டும். இதுவும் இடுக்கமான வாயிலில் பயணிப்பதற்கு சமமே. ஏனெனில் நாம் நன்மை புரிய முந்திக்கொள்ளும் போது நம்மை தீமையும் துன்பமும் தொடர பற்பல வாய்ப்புகள் உண்டு.

நம் ஆண்டவர் இயேசு அன்பு செய்வதிலும் நற்காரியங்கள் புரிவதிலும் மன்னிப்பதிலும் உறவாடுவதிலும் மற்றவரை எதிர்பார்க்காமல் அவரே முந்திக்கொண்டார். அவரைப் பின்பற்றி நாமும் அன்பு செய்வதிலும் கொடுப்பதிலும் மன்னிப்பதிலும் பிறருடைய முன்னெடுப்பை விரும்பாமல் நாம் முந்திக்கொள்ள கற்றுகொள்வோம். இயேசு தந்த பொன்விதியை அவருடைய சீடர்களாக வாழ்ந்து நிறைவேற்றுவோம்.

 இறைவேண்டல் 
அன்பு இயேசுவே!  நன்மைகளை பிறர் எனக்குச்  செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைக் களைந்து நானே முன்வந்து அவற்றை செய்யும் மனம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்கமங்கலம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

13 + 3 =