நற்செய்திப் பணியாளர்களாய்!


பொதுக்காலத்தின் 24 ஆம் வெள்ளி - I. 1 கொரி 15:12-20 - II. திபா: 17:1,6-7,8,15 - III. லூக்: 8:1-3

ஒரு பங்குத்தைக்கு கொடுக்கப்பட்ட பங்கிலே அவருடைய பணிக்காலம் முடிவடையவே அவர் வேறொரு பங்கிற்கு மாற்றப்பட்டார். அவருடைய பணிக்காலத்தில் இறை இயேசுவின் மதிப்பீடுகளை பின்பற்றியவராக வாழ்ந்தார். நற்செய்தி அறிவிப்பை தன் போதனையால் மட்டுமின்றி தன் வாழ்வாலும் ஆற்றிய அவரை வழியனுப்பி வைக்க மக்கள் விரும்பவில்லை. ஆயினும் இறுதி நாளில் பிரியாவிடையின் போது அவர் அவ்வூர் மக்களிடம் "நான் இங்கிருந்து செல்கிறேன் என வருந்தாதீர்கள். உங்களைப் போன்ற மக்களுடைய மற்றொரு தளத்தில் இதேபோல் நற்செய்தி பணி புரிய எனக்குக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி சிறப்பாகப் பணிபுரிய எனக்காக ஜெபியுங்கள்.மேலும் வரவிருக்கும் புதிய தந்தையின் நற்செய்தி பணியில் உதவுங்கள் "என்று அறிவுரை கூறிச்சென்றார்.

"இயேசு நகர் நகராய் ஊர் ஊராய் சென்று இறையாட்சியை பற்றிய நற்செய்தியை அறிவித்து வந்தார்". என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். நன்மையின் நாயகனாக, உண்மையின் முழுவடிவமாகத் திகழ்ந்த அவர் நற்செய்தியைக்  குறிப்பிட்ட ஊர்களுக்கு மட்டும்  பறைசாற்ற வில்லை.  மாறாக அந்த நற்செய்தி பல ஊர்களுக்கும் மனிதர்களுக்கும் சென்றடைய வேண்டும், அனைவரும் மனம் மாறி கடவுள் அருளும் நிலைவாழ்வை அடைய வேண்டும் என்ற ஆர்வத்தோடு செல்லும் நகர்களிலும் ஊர்களிலும் நற்செய்தியைப் பறைசாற்றி நற்செயல்கள் புரிந்துவந்தார்.இயேசுவைப் பின்பற்றி அவருடைய சீடர்களும் ஊர் ஊராகச்சென்று கிறிஸ்துவின் நற்செய்தியைப் பறைசாற்றியதை நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம்.அதைத்தொடர்ந்து பல புனிதர்கள், ஆதிகால கிறிஸ்தவர்கள் பலர் புலம் பெயர்ந்து வந்து கிறிஸ்துவின் நற்செய்திப் பணியை செய்தார்கள் என்பதையும்  நாம் அறிந்திருக்கிறோம். கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதை முதன்மையான கடனாக கொண்டுஊர் ஊராகவும், நகர் நகராகவும் சென்று நற்செய்தியை அறிவிக்காவிடினும் கூட  ,நம் அருகில் உள்ளவர்கள் உறவினர்கள் உடனுழைப்பவர்களிடமாவது நற்செய்தியைக் கொண்டு சேர்க்கிறோமா? 

போக்குவரத்து வசதிகள்,  ஊடகங்கள், அறிவியல் வளர்ச்சிகள் அற்ற, அக்காலத்திலேயே இயேசுவாலும் , அவரைப் பின்தொடர்ந்தவர்களாலும் நற்செய்தியை அறிவிக்க முடிந்தது. ஆனால், எல்லா வசதிகளும், அறிவியல் அதிசயங்களும் நிறைந்த காலக்கட்டத்தில் வாழும் நாம் நற்செய்தி அறிவிப்புப் பணியை செய்கிறோமா? சிந்திப்போம். "நற்செய்தியை அறிவிக்காவிடில் எனக்கு ஐயோ கேடு" (1கொரி 9:16) என்று கூறுகிறார் புனித பவுல்.  இயேசுவைப் போல செல்லுமிடமெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றி நன்மைகள் ஆற்றும் மக்களாக வாழ்வதே நமக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு என்பதை உணர்ந்து வாழ்வோம்.

அவ்வாறு நாம் பணிபுரியும் போது நமக்கு எதிர்ப்புகள் ஒருபுறமிருந்தாலும்  பலருடைய ஆதரவும் உடனுழைப்பும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இயேசுவோடு திருத்தூதர்கள் மட்டுமல்ல அன்றைய யூதர்களால் தாழ்வாகக் கருதப்பட்ட பெண்களும் உடனுழைத்தார்கள் என்பதையும் நாம் இன்றைய நற்செய்தியில் காண்கிறோம். ஆகவே, பாலின பாகுபாடின்றி நம் மத்தியில் பணிபுரியும் நற்செய்தி பணியாளர்களுக்கு உதவி செய்பவர்களாகவும், உடனுழைப்பவர்களாகவும் திகழ ஆண்டவர் நம்மையும் அழைக்கிறார் என்பதை நாம் உளமார உணரவேண்டும்.

அவ்வாறே நற்செய்தி பணிபுரிய நமக்கு ஆர்வமும், உண்மையைத் தெளிவாகப் புரிந்து அதை எடுத்துக்கூறி தவறுகளைச் சுட்டிக்காட்டும் துணிச்சலும் வேண்டும் என்பதை முதல்வாசகத்தில் நாம் வாசிக்கிறோம். உயிர்த்தெழுதலில் நம்பிக்கையில்லாதவர்களிடம் கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்பை முன்னுதாரணமாகக் காட்டி,"கிறிஸ்தவ நம்பிக்கையின் ஆணிவேர், இயேசுவின் உயிர்ப்பு" என்ற கருத்தைத் திண்ணமாக எடுத்துக்கூறுகிறார் புனித பவுல்.

இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் இந்த அழைப்பை ஏற்று நாமும் உயிர்த்த இயேசுவின் சீடர்களாய் செல்லுமிடமெல்லாம் நற்செய்தி பணியாற்றும் வரம் கேட்போம். நம் மத்தியில் பணிபுரியும் நற்செய்தி பணியாளர்களை இயேசுவின் பெயரால் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு உதவி புரிவோம்.

இறைவேண்டல்

அன்பான ஆண்டவரே, சென்ற இடங்களிலெல்லாம் உம்முடைய நற்செய்தியைப் பறைசாற்றி நன்மைகளையும், உண்மைகளையும் விதைத்துச் சென்ற உம்திருமகன் இயேசுவைப்போல நாங்களும்  ஊர் ஊராக,நகர் நகராகச் சென்று நற்செய்தியைப் பறைசாற்றாவிடினும் கூட, நாங்கள் வாழ்கின்ற பணிசெய்கின்ற இடங்களிலாவது நற்செய்தி தூதுவர்களாய் வாழவும், நற்செய்தி பணிபுரிபவர்களுக்கு உதவி ,அவர்களுக்கு உடனுழைப்பாளர்களாகத் திகழவும் அருளையும்,ஆசீரையும் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

5 + 3 =