Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நற்செயல்கள் வழியாக பலன் கொடுக்கத் தயாரா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் பனிரெண்டாம் புதன்; I: தொ.நூ: 15: 1-12,17-18; II: திபா: 105: 1-2. 3-4. 6-7. 8-9; III: மத்: 7: 15-20
நாம் வாழும் இந்த உலகம் விளம்பரங்களை நம்பி ஏமார்ந்து கொண்டிருக்கிறது. தரமற்ற பொருட்களைப் போலியாக சித்தரித்து கேவலம் இலாபத்திற்காக ஆரோக்கியத்தை கெடுத்து வருகின்றனர்.போலியான சிந்தனைகளை மக்கள் மத்தியில் விதைத்து, மக்களை தவறான வழிக்கு வழிகாட்டுகின்றனர். போலியான விளம்பரங்கள் தரமான பொருட்கள் விற்கப்படாமல் இருக்கச் சூழலை ஏற்படுத்துகின்றன. இத்தகைய நிலையை அறிந்து அதைத் தவிர்த்து உண்மையான வாழ்வை நோக்கிச் செல்ல இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கின்றது.
ஒரு விவசாயி தக்காளி விவசாயம் செய்தார். அவர் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. எனவே வேறு வழியில்லாமல் ஐந்து மூட்டை தக்காளியை சாலை வீதியில் கொட்டினார். இதைக்கண்ட தக்காளி சாறு தயாரிக்கும் கம்பெனியில் பணி செய்யும் நபர் கொட்டப்பட்ட தக்காளியை எடுத்து சென்றார். அந்த தக்காளியை தக்காளிச்சாறு செய்யும் கம்பெனியில் கொடுத்து தக்காளி சாறாக மாற்றினர். அந்த கம்பெனி அந்த தக்காளி சாறை பாட்டிலில் அடைத்து விளம்பரம் செய்தது. எனவே மக்கள் மத்தியில் இந்த விளம்பரம் பரவியது. அதன் பயனாக தக்காளிச்சாறு அதிகமான முறையில் விற்கப்பட்டது. உண்மையாக உழைத்து விற்க நினைத்தவன் ஒரு இலாபத்தையும் பெறவில்லை. ஆனால் போலியாக சாலையிலிருந்து எடுத்து தக்காளி சாறாகப் பிழிந்து போலியான முறையில் விளம்பரம் செய்த அந்த நபருக்கு இலாபம் அதிகம் கிடைத்தது . இத்தகைய மனநிலை தான் பெரும்பாலான மக்கள் இடத்தில் இருக்கின்றது.
போலியான போதனைகளையும் வாழ்வியல் தத்துவங்களையும் நம்பி ஏமாறாமல், உண்மையின் பாதையை நோக்கி பயணிக்க இன்று நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு "போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்" என்று கூறியுள்ளார். இன்றைய சூழலில் கத்தோலிக்க நம்பிக்கையில் வளர்ந்து வரும் நம்மைத் திசைதிருப்ப பணத்திற்காக இயேசுவின் பெயரால் சின்ன சின்ன திருச்சபைகளை நிறுவி போலி போதனைகளை செய்து வருகின்றனர் பலர். எண்ணற்ற மக்களும் அந்தப் போலி போதனைகளுக்கு மயங்கி, உண்மையான கத்தோலிக்க விசுவாசத்தை விட்டுச் செல்கின்றனர். இத்தகைய நிலையை குறித்துக் கவனமாய் இருக்க ஆண்டவர் இயேசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நம்முடைய உண்மையான சான்று பகர கூடிய கிறிஸ்தவ வாழ்வு நற்செயல்களில் வெளிப்பட வேண்டும். நல்ல மரங்கள் எவ்வாறு நல்ல கனிகளை கொடுக்கின்றதோ, அதேபோல நம்முடைய நற்செயல்களின் வழியாக நல்ல பலனைக் கொடுக்க முயற்சி செய்வோம். கெட்ட மரங்கள் கெட்ட கனிகளைக் கொடுக்கின்றது. இறுதியில் அது வெட்டப்பட்டு தீயினால் எரிக்கப்படுகிறது.நாமும் நம்முடைய கெட்ட செயல்களால் கெட்ட பலனைக் கொடுக்கும் பொழுது,நம்முடைய வாழ்வும் அழிவை நோக்கிச் செல்லும். எனவே போலி போதனைகளுக்கு மயங்காமல் கெட்ட எண்ணங்களை விட்டு விட்டு நல்ல எண்ணங்களோடு வாழ்வில் பலன் கொடுக்க தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல் :
நன்மை செய்யும் நல்ல இயேசுவே!உம்மைப் போல நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் நல்லதையே நாளும் செய்திடத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment