நம் வாழ்வுப் பாதையை சீர்ப்படுத்துவோமா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


Road of Life

திருவருகைக் காலத்தின் இரண்டாம் சனி - I. சீராக் 48:1-4,9-11; II. தி.பா: 80:1,2,14-15,17-18; III. மத்தேயு: 17:9,10-13

இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு மீண்டுமாய் இறைவாக்கினர் எலியாவையும் அவருடைய மறுபிறப்பை போல கருதப்படுகிற திருமுழுக்கு யோவானையும் பற்றிக் கூறுகின்றன. முதல் வாசகமானது எலியா இறைவாக்கினரின் சிறப்பை எடுத்துக்கூறுவதாய் உள்ளது. அவர் நெருப்புக்கு ஒப்பிடப்படுகிறார். அவருடைய சொற்கள் தீவட்டிக்கு ஒப்பிடப்படுகிறது. நெருப்பு சுட்டெரிப்பதைப் போல ஆண்டவருடைய வார்த்தைகளை வல்லமையுடன் போதித்து போலி தெய்வங்களை வணங்கும் மக்களின் மனத்தைச் சுட்டெரித்து அவர்களை மனந்திருப்பச் செய்ய பெரிதும் உழைத்த இறைவாக்கினராய்த் திகழ்ந்தவர் எலியா. இறைவனிடம் கொண்டிருந்த பற்றுறுதியால் இயற்கையைக் கூட கட்டுப்படுத்தும் அளவுக்கு ஆற்றல் கொண்டிருந்தார் அவர். உண்மையான கடவுளிடமிருந்து விலகிச் சென்ற மக்களை மனம் மாறச்செய்து அவர்களின் வாழ்க்கைப் பாதையை செம்மையாக்கியவர். மனம் மாறிய தன் மகனை நோக்கி தந்தையின் மனம் திரும்பி வருவதைப் போல, கடவுள் அருளிய நாவன்மையால் பாவத்தில் வீழ்ந்து கிடந்த தன் மக்களை கடிந்து அவர்களை மனம்திருந்தச் செய்து கடவுளின் இரக்கத்தை மக்கள் பால் கொணர உழைத்தவர் தான் எலியா என அவருடைய புகழ் கூறப்ட்டுள்ளது.

திருவருகைக் காலத்தின் இரண்டாம் வாரத்தில் திருமுழுக்கு யோவானுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த திருமுழுக்கு யோவான் எலியாவின் அவதாரமாக கருதப்படுகிறார். மெசியாவாகிய இயேசுவின்  வருகைக்காக மக்களின் மனத்தை, வாழ்வுப்பாதையை சீர்படுத்தும் உன்னதமான பணியை ஏற்று அதைச் சிறப்பாகச் செய்தவர்தான் திருமுழுக்கு யோவான். எலியாவைப் போன்ற வலிமையான பேச்சாற்றலால் மெத்தனப்போக்கில் வாழ்ந்த மக்களிடம் மனமாற்றத்தைத்  தூண்டி பாவ மன்னிப்புக்கான திருமுழுக்கைப் பெறத் தூண்டியவர் அவர். ஆனால் அவர் எலியாவின் மறுபிறப்பு என்பதை மக்கள் அறிந்து கொள்ளவில்லை. ஏன் மெசியா பெத்லகேமில் பிறப்பார், தாவீதின் வழிமரபில் பிறப்பார் என்று கணிக்க முடிந்த மறைநூல் வல்லுநர்களால் கூட இவர்தம் எலியா என்பதை உணர முடியவில்லை.

இவ்விருவரின் வாழ்க்கையும் நமக்குக் கூறும் செய்தி என்ன என்பதை இன்னும் சற்று ஆழமாகச் சிந்திப்போம். இருதினங்களுக்கு முன்புதான் இவர்களைப் போல துணிச்சலோடு தவறுகளைச் சுட்டிக்காட்டும் குணத்தையும் கடவுள் முன் தாழ்மையும் கொண்டு விண்ணரசில் பெரியவர்களாக வேண்டும் எனச் சிந்தித்தோம். இன்னும் ஆழமாகச் சென்று அவர்கள் இறைவனுக்காக பாதையைச் சீர்படுத்தியதைப் போல நாமும் அவருடைய வருகைக்காக நம் பாதையைச் செம்மையாக்குவதோடல்லாமல் நம்முடைய முன்மாதிரியான வாழ்க்கையால் மற்றவரின் வாழ்வுப்பாதையையும் சீர்படுத்த முயல வேண்டும். கடவுளின் பிள்ளைகளாக இயேசுவின் சீடர்களாக நமக்கு அளிக்கப்பட்டுள்ள மிகவும் சவாலான பணி இது.

இப்பணியைச் செய்ய முதலில் நாம் கடவுளோடு ஒன்றித்திருக்க வேண்டும். நம்முடைய வார்த்தைகள் கடவுளின் வார்த்தைகளாக மாற வேண்டும். பிறருக்கு ஆறுதல் அளிப்பதாக, நல்வழி காட்டுவதாக தேவைப்பட்டால்  நெருப்பு அனைத்தையும் புனிதமாக்குவதைப்போல புனிதமாக்கும் வார்த்தைகளாக மாற வேண்டும். வெறும் வார்த்தை ஜாலமாக இல்லாமல் கடவுளின் கனிவையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துவதாக அவை இருக்க வேண்டும். அது கடவுளிடம் இறைவேண்டலால் ஒன்றித்திருந்தால் மட்டுமே இயலும்.

இரண்டாவதாக நம் வாழ்வுப் பாதை சீர்மிகுந்ததாக இருக்க வேண்டும். கடவுளுக்கு முன்னுரிமை அளித்து, உலக மாயைகளான பணம்,பதவி,சுயநலம்,சிற்றின்ப ஆசைகள், நேரத்தை வீணாக்கும் பொழுது போக்குகள் இவற்றை எல்லாம் விலக்கி எடுத்துக்காட்டான வாழ்வு வாழ வேண்டும். உண்மை, நீதியை நம் சொல்லும் செயலும் எடுத்தியம்ப வேண்டும்.  நம் வாழ்வு கடவுன் பால் மற்றவரையும் ஈர்க்க வேண்டும்.

இவ்வகையான நம் வாழ்வுக்கு இவ்வுலகம் அங்கீகாரம் அளிக்காது. திருமுழுக்கு யோவானை உணராத இவ்வுலகம் , இயேசுவை ஏற்றுக்கொள்ளாத இவ்வுலகம், இன்னும் பல தலைவர்களையும் நல்லவர்களையும் ஏற்றுக்கொள்ளாத இவ்வுலகம் நிச்சயம் நம்மையும் ஏற்றுக்கொள்ளாது. அவற்றைப் பொருட்படுத்தாது வாழப் பழகிக்கொள்ள வேண்டும். நம்முடைய இக்கிறிஸ்தவ வாழ்வு ஒரு எதிர்நீச்சல் தான். இதை உணர்த்தியவர்கள் தான் எலியாவும் திருமுழுக்கு யோவானும். எனவே இறைமகனின் வருகைக்காக காத்திருக்கும் நாம் நம் வாழ்வுப்பாதையை சீர்ப்படுத்தும் பணியில் முழுமுயற்சியுடன் ஈடுபடுவோம். கடவுள் நம் வாழ்வில் நிச்சயம் பயணிப்பார்.

இறைவேண்டல்

நீதியின் ஆண்டவரே!உம்மை நம்பிய அடியவர்களுக்கு வல்லமையைத் தருபவரே! நாங்களும் உம்மேல் பற்றுறுதி கொண்டு வாழ்ந்து, தேவையற்ற அனைத்தையும் வெறுத்து எம் வாழ்வுப் பாதையைச் சீரமைக்க வரம் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

8 + 8 =