நம் வாழ்வின் பொருளை உணர்வோமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


ஆண்டின் பொதுக்காலத்தின் மூன்றாம் வியாழன்
I: 2 சாமு: 7: 18-19, 24-29
II : திபா: 132: 1-2. 3-5. 11. 12. 13-14
III: மாற்: 4: 21-25

மண்ணிலே வாழும் நாம் அனைவரும் பல சமயங்களில் நம் வாழ்வைத் திருப்பிப் பார்க்கும் போது "நான் எதற்காகப் பிறந்தேன்? நான் செய்யும் காரியங்களையெல்லாம் எதற்காகச் செய்கிறேன்? நான் பிறவாமல் இருந்திருந்தால் நலமாயிருந்திருக்குமோ? " என்றெல்லாம் நம்மையே கேட்டுக்கொள்வது உண்டு. இவ்வாறு நம்மையே அலசி ஆராயும் போது பல வேளைகளில் நம் வாழ்வு மாறுபடும். உயர்வை நோக்கி முன்னேறும். சில வேளைகளில் ஏமாற்றமும் விரக்தியும் மிஞ்சும். எதுவாக இருந்தாலும் நம் வாழ்வின் அர்த்தத்தை முழுமையாக உணர்ந்து கொள்ள நம் இருத்தலின் நோக்கத்தை நாம் அறிவது மிக அவசியம். அதாவது நம் வாழ்வின் அல்லது நமது இருத்தலின் நோக்கத்தை அறிந்து அதைச் செய்ய முயலும் போதுதான் நமது வாழ்வு பொருள்பெறும். 

இன்றைய முதல் வாசகத்தில் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு இஸ்ரயேலின் அரசராக அருட்பொழிவு செய்யப்பட்ட தாவீது அரசன் தன்னிலையை ஆராய்கிறார். கடவுளால் அன்பு செய்யப்படவும், அவருடைய உடன்படிக்கையை தம் குடும்பத்தின் மூலம் நிலைப்படுத்தவும் தான் யார்?  என்ற கேள்வியை எழுப்புகிறார். இக்கேள்விகள் கடவுளின் அன்பில் மேல் உள்ள சந்தேகத்தால் அல்ல. மாறாக கடவுள் தன் அன்பால் தாவீதின் வாழ்வின் நோக்கத்தை வெளிப்படுத்தி   அவருடைய வாழ்வின் பொருளை உணரச் செய்ததன் வெளிப்பாடாய் இக்கேள்விகள் அமைகின்றன.

இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு "விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின்மீது வைப்பதற்காக அல்லவா?"  என்ற அழகிய உவமையில் நம் வாழ்வின் முழுப்பொருளையும் விளக்குகிறார். விளக்கைக் கொளுத்தி கட்டிலுக்கு அடியிலோ, மரக்காலின் உள்ளேயோ வைப்பதால் யாருக்கும் வெளிச்சம் கிடைக்காது. விளக்கு என்பதன் நோக்கமே பிறருக்கு வெளிச்சம் கொடுப்பதற்காக. அதை கொளுத்தி மறைவாக வைத்தால், அதனால் பயனில்லை. அச்செயலுக்கு அர்த்தமில்லை. 

நம் வாழ்வும் அத்தகையதே.  நம் வார்த்தைகளும், செயல்களும், திறமைகளும், பணிகளும் அவற்றிற்கான முழு நோக்கத்தையும் பயன்பாட்டையும் பிறருக்கு கொடுப்பதாக அமைந்தால் நமது வாழ்வு பொருளுள்ளதாகவும் அர்ரத்தமுள்ளதாகவும் நம்மாலும் நம்முடன் வாழ்பவர்களாலும் உணரப்படும் என்பதில் ஐயமில்லை. எனவே நம் வாழ்வை மிகக் கவனத்துடனும் பொறுப்புடனும் வாழ வேண்டிய கடமை நமக்கு உண்டு. அதுவே நம்மைப் படைத்த இறைவனுக்கும் புகழ் சேர்ப்பதாக அமையும்.  ஏனெனில் அவை வெளிப்படாமல் மறைந்து இருப்பதில்லை. எனவே இறைவனிடம் நம்முடைய வேண்டுதலை எழுப்பி நாம் படைக்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து அதை நிறைவேற்றி நம் வாழ்விற்கு பொருள்சேர்க்கவும் இறைவனுக்குப் புகழ் சேர்க்கவும் வரம் வேண்டுவோம்.

 இறைவேண்டல் 

வாழ்வின் நாயகனே! இறைவா! எம்மை உயர் நோக்கத்திற்காகப் படைத்துள்ளீர் என்பதை நாங்கள் அறிகிறோம். அந்நோக்கத்தை பூர்த்தி செய்யவும் அதன்மூலம் எம் வாழ்வின் பொருளை உணர்ந்து உம்மைப் புகழவும் வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 0 =