நம் நம்பிக்கையை ஆழமாக்க மீண்டும் மீண்டும் தேடி வருகிறார் இயேசு! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா எண் கிழமை -வெள்ளி 
I: தி. ப : 4: 1-12
II :  தி பா: 118: 1-2,4. 22-24. 25-27a
III: யோவான் 21: 1-14

கடவுள் ஒருபோதும் நம்மைத் திக்கற்றவர்களாக விடுவதில்லை. அவருடைய அன்பை நாம் அனுபவிக்கவும் அவரை நம்பவும் அவரோடு நாம் இணைந்து வாழவும் நம்மைத் தேடி பின்னால் வந்துகொண்டே இருக்கிறார். இதற்கு இன்றைய வாசகங்கள் சிறந்த எடுத்துக்காட்டாய் இருக்கின்றன.
முதல் வாசகத்தில் பேதுரு இயேசுவைப்பற்றி ஆற்றலுடன் போதித்து இதற்கு முன்பு இயேசுவை நம்பாத யூதர்களை இயேசுவின்பால் நம்பிக்கை கொள்ளச் செய்ததை நாம் வாசிக்கிறோம். அவருக்கு இந்த நம்பிக்கை எங்கிருந்து வந்தது ? மிக எளிதில் அவர் இயேசுவை நம்பிவிட்டாரா?  இல்லை. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பேதுரு தான் மீன்பிடிக்க போவதாக பிற சீடர்களிடம் கூற அவர்களும் நாங்களும் வருகிறோம் என பேதுருவோடு சென்றார்கள். ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் கழித்து அவர்கள் மீன்பிடிக்கச் செல்கிறார்கள்.மூன்று ஆண்டுகள் இயேசுவோடு அவருடைய சீடராக பெருமிதத்தோடு வலம் வந்தவர்கள், அதே பதவியும் பெருமிதமும் இயேசு ஆட்சிக்கு வரும்போது தங்களுக்குக் கிடைக்கும் என நம்பியவர்கள்  அவருடைய இறப்புக்கு பின் தங்களுக்கு கிடைக்கப்போவது ஒன்றுமில்லை என எண்ணி தங்களின் பழைய வாழ்க்கைக்குத் திரும்புகிறார்கள். அங்கும் பயனில்லை. வெறுமையை சந்திக்கிறார்கள். அவர்கள் இயேசுவைக் கைவிட்டு பழைய நிலைக்குச் சென்றாலும் இயேசு அவர்களை கைவிடவில்லை.

இயேசு அவர்களைத் தேடி வருகிறார். இது உயிர்த்தபின் இயேசு கொடுத்த மூன்றாவது காட்சி என நமக்குக் கூறப்பட்டுள்ளது.வலப்பக்கம் வலைவீசுங்கள் என்று ,உழைத்து சோர்ந்தவகளிடத்தில் கூறினார். அவர்களும் வலை வீசினர். மிகுதியாகப் பெற்றனர். அங்குதான் இயேசுவின் உடனிருப்பை அவர்கள் மீண்டும் உணர்ந்தனர்.பேதுரு ஆடைகளைக் களைந்திருந்தார் எனக் கூறப்பட்டுள்ளது. அதன் பொருள் என்னவெனில் சீடர்கள்  நம்பிக்கை எனும் ஆடையை ,இயேசுவின் சீடர்களுக்கான தகுதி எனும் ஆடையை களைந்திருந்தார்கள். இயேசுவைக் கண்டபின் அந்த ஆடையை மீண்டும் அணிந்து கொண்டார்கள்.அங்கே கரையில் இயேசு சீடர்களுக்காக உணவுடன் காத்திருந்தார். நான் என்னையே தந்து உங்களுடன் என்றும் இருக்கிறேன் என மீண்டுமாக நம்பிக்கையூட்டுகிறார் இயேசு.

அன்புக்குரியவர்களே, நாம் நம்பிக்கையை இழந்து இருக்கலாம். ஆனால் இயேசு நம்மைவிட்டு நீங்காதவராக இருக்கிறார். நம்பிக்கை இன்மை என்பது அவருடைய உடனிருப்பை நாம் உணராத தருணம்.ஆனால் அவரோ நான் உன்னோடு இருக்கிறேன் என்று நம் பின்னே உரக்கக் கத்திக்கொண்டே வருகிறார். அக்குரலைக் கேட்போம். அவர் நமக்குத் தந்துள்ள நம்பிக்கை எனும் ஆடையை உடுத்தியவர்களாய் எல்லாச் சூழலிலும் குறிப்பாக திக்கற்றவராய் உணரும் தருணத்தில் நம்பிக்கையோடு அவரைக் கண்டுணர்வோம். என்ன நேர்ந்தாலும் பழைய நிலைக்குத் திரும்பாமல் இருக்க முயற்சிப்போம்.

இறைவேண்டல் 
எமைத் தேடி வந்து நம்பிக்கை ஊட்டும் இயேசுவே! உமது உடனிருப்பில் எந்நாளும் நம்பிக்கை கொண்டவர்களாய் வாழும் வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

6 + 0 =