நம்மை சரி செய்வோமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


இன்றைய வாசகங்கள் (27.02.2022)
பொதுக்காலம், வாரம் 08 ஞாயிறு
மு.வா: சீரா:  27: 4-7
ப.பா :  திபா 92: 1-2. 12-13. 14-15 
இ.வா: 1 கொரி: 15: 54-58
ந.வா:  லூக்:  6: 39-45

 "நம்மை சரி செய்வோமா! "

பல நேரங்களில் நம்முடைய அன்றாட வாழ்வில் பிறருடைய வாழ்வை சரி செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம்.  பல பிரச்சினைகளுக்கு காரணம் இந்த சமூகம்தான் என்று கருதுகின்றோம். ஆனால் பல நேரங்களில் நம்முடைய தவற்றை ஏற்றுக்கொள்ளத் தவறிவிடுகிறோம். நாம் நம்மை சரி செய்யும் பொழுதுதான் இந்தச் சமூகம் மாறும். இல்லையென்றால் நாம் இந்த சமூகத்தை விமர்சனம் செய்வோமே தவிர,  சமூக மாற்றத்திற்கு எதையும் செய்ய மாட்டோம். மாற்றம் பிறரிலிருந்து தொடங்குவதை விட நம்மிலிருந்து தொடங்க வேண்டும். அதற்கு நம்முடைய வாழ்வையும் பாதையையும் சீரமைக்க வேண்டும்.

இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு "பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? " என்று கேள்வி எழுப்பியுள்ளார். பிறருக்கு வழிகாட்ட வேண்டுமென்றால் நமக்குக் கண் தெளிவாகத் தெரிய வேண்டும். இல்லையெனில் நாம் சிறப்பாக வழிநடத்த முடியாது. அதே போல தான் இறைவார்த்தையின் ஒளியிலும் வழியிலும் நாம் பிறருக்கு வழிகாட்ட வேண்டும் என்றால் , நம்முடைய வாழ்வு கடவுளுக்கு உகந்த வாழ்வாக இருக்க வேண்டும். இறைவார்த்தையின் ஒளியிலும் வழியிலும் வழிநடக்கக்கூடிய வாழ்வாக இருக்க வேண்டும். இதில்தான் நம்முடைய நம்பிக்கை வாழ்வின் நிறைவும் முழுமையும் இருக்கின்றது. ஆண்டவர் இயேசு சிறப்பாக தன்னுடைய இறையாட்சி பணியை மூன்று ஆண்டுகள் செய்தார். எண்ணற்ற மக்களை வழிநடத்தி மீட்புக்கான வழியைக் காட்டினார். பாவிகளையெல்லாம் மன்னித்துத், தூய வாழ்வில் நெறிப்படுத்தினார். எப்படி அவரால் முடிந்தது?  ஆண்டவர் இயேசுவின் உள்ளமும் வாழ்வும் தூய்மை நிறைந்ததாகவும் தந்தையின் திருவுளத்திற்கு உகந்ததாகவும்   இருந்தது.  எனவே தான் அவரால் படித்தவர் முதல் பாமரர் வரை சிறப்பாக வழிநடத்த முடிந்தது.

எனவே நாம் வாழுகின்ற இந்த கிறிஸ்தவ வாழ்வில் பிறருக்கு வழியாக ஒளியாக இருக்க வேண்டுமென்றால், நம்முடைய வாழ்வு ஆண்டவர்  இயேசுவைப் போல தூய்மை நிறைந்ததாகவும் உண்மையானதாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் சான்றுள்ள கிறிஸ்தவ வாழ்வை சிறப்பாக வாழ முடியும். இப்படிப்பட்ட மனநிலையோடு வாழத்தான், ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தியின் வழியாக சிறப்பாக  அழைப்பு விடுக்கிறார்.

பிறருடைய குறைகளைப் பெரிதாகப் பொருட்படுத்தி நம்முடைய குறைகளை மறைக்கும் மனநிலையைக் கைவிடவேண்டும். பல நேரங்களில் இன்றைய நற்செய்தியில் வருவதைப்போல, நமது கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் நம்முடைய சகோதர சகோதரிகள் கண்ணிலிருக்கும் மரக்கட்டையைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் கடவுளின் ஆசிர்வாதத்தை முழுமையாகப் பெற வேண்டுமென்றால், நம்முடைய  குறைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுது மட்டும்தான் பிறரை ஒளி நிறைந்த பாதைக்கு வழிநடத்த முடியும். 

"கெட்ட கனிதரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும்" என்ற இயேசுவின் வார்த்தைக்கு ஏற்ப நல்ல மரங்களாக நாம் மாற வேண்டும். மரங்கள் எவ்வாறு சுயநலம் இல்லாமல் பிறருக்கு பலன் கொடுக்கிறதோ  அதைப்போல,  நம்முடைய வாழ்வும் பிறர் நலத்தோடு பலன் கொடுப்பதாகவே இருக்க வேண்டும். "உள்ளத்தின் நிறைவையே  வாய் பேசும்" என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப, நம்முடைய உள்ளம் சுய ஆய்வுக்கு உட்பட்ட தூய உள்ளமாக இருக்க வேண்டும். நம் உள்ளம் தூய்மையாக இருக்கும் பொழுது, நம்முடைய சொல்லும் செயல்பாடுகளும் தூய்மையாக இருக்கும். எனவே நம்மையே சுய ஆய்வுக்கு உட்படுத்தி முதலில் சரிசெய்து, அதன் பிறகு பிறருக்கு சிறப்பாக வழிகாட்டும் ஒளியாக மாறிடத் தேவையான அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! பிறருக்கு வழிகாட்டும் அளவுக்கு எங்களுடைய குறைகளையும் பலவீனங்களையும் ஏற்று எங்களையே சரி செய்ய   ஞானத்தைத் தாரும்.  நன்மை தீமையை பகுத்தறியும் ஞானத்தைத் தாரும்.  பிறருக்கு பலன் கொடுக்கும் நல்ல மரங்களாக வாழ்ந்திட அருளைத் தாரும்.  ஆமென்.

Add new comment

3 + 0 =