நம்மில் பிறர் கிறிஸ்துவைக் காண்கின்றனரா? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


 பாஸ்கா காலம் -நான்காம் புதன்
I: திப: 12:24-13:5
II: தி.பா: 66:2-3,5-6,8
III : யோவான்  12:44-50

நம்மில் பிறர் கிறிஸ்துவைக் காண்கின்றனரா?

ஒரு அருட்பணியாளர் என்னிடம் பகிர்ந்து கொண்ட செய்தி இது.ஒருமுறை அவர்  இறைவனடி சேர்ந்த அவருடைய பங்கைச் சார்ந்த ஒருவரின் வீட்டிற்கு செபிப்பதற்காகச் சென்றார். அப்பகுதியில் வாழ்ந்தவர்களில் பெரும்பாலானோர் பிற சமயத்தைத் தழுவியர்கள். குருவானாவர் அப்பகுதிக்குள் நுழைந்த உடன் அங்கே விளையாடிக்கொண்டிருந்த ஒருசிறுமி "இயேசப்பா வர்ராங்க" என்று சப்தமாகக் கூறினாள். அதைக் கேட்ட அந்த அந்த அருட்பணியாளர் மிகவும் வியப்படைந்தவராய் இக்கூற்றுக்குத் தான் தகுதியானவரா என யோசித்துக்கொண்டே தன்னைத் தகுதிப்படுத்த முடிவு
செய்தார். 

இன்றைய நற்செய்தியில் இயேசு "என்னைக் காண்கின்றவர் என் தந்தையைக் காண்கின்றார் " எனக் கூறுகிறார். இவ்வார்த்தைகள் இயேசு கடவுளோடு ஒன்றாய் இருப்பதையும், தன்னுடைய வாழ்வாலும் போதனையாலும் தன்னை அனுப்பிய தந்தையை முழுமையாக அவர் வெளிப்படுத்தினார் என்பதையும் குறிக்கிறது.

இன்று நம்மைக் காண்பவர்கள் நம்மிலே கிறிஸ்துவை காண்கிறார்களா என சோதித்து அறிய நாம் அழைக்கப்ட்டுள்ளோம். கிறிஸ்துவின் பண்புகளான அன்பு, பரிவு,இரக்கம்,மன்னனிப்பு, துன்புறுவோர் உடனிருத்தல்,கேட்காமலேயே உதவுதல் போன்றவற்றை நம் வாழ்வில் வெளிப்படுத்தினால் நாமும் இவ்வுலகில் கிறிஸ்துகளாக வாழ முடியும். 

நேற்றைய தினம் இயேசுவை ஏற்றுக்
கொண்டவர்கள் அந்தியோக்கியாவில் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்டனர் என்று தியானித்தோம். கிறிஸ்தவன் என்றால் கிறிஸ்து அவன் எனப் பொருள். கிறிஸ்துவின் மறு உருவம் என அர்த்தம். நம்மைக் காண்பவர்கள் கிறிஸ்துவைக் காண்கின்றனரா? இல்லை நம்மைக் காணக்கூடாது என வெறுக்கத்தக்க வகையில் நாம் வாழ்கிறோமா? சிந்திப்போம்.

இறைவேண்டல்

அன்பு இயேசுவே எம்மைக் காண்பவர் உம்மை எம்மில் காணும் வண்ணம் எங்கள் வாழ்வு அமைய உதவி புரியும்.  ஆமென்.

Add new comment

2 + 0 =