நம்புவோர் நலம் பெறுவர்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


ஆண்டின் பொதுக்காலத்தின் ஐந்தாம் திங்கள்
மு.வா: 1,சாமு:   8: 1-7, 9-13
ப.பா :  திபா 132: 6-7. 8-10
ந.வா:  மாற்: 6: 53-56

 

ஒரு குடும்பத்தை என்னுடைய அருள்பணி தளத்தில் சந்தித்தேன். அப்பொழுது ஒரு குடும்பத்தில் குடும்பத்தலைவி "தந்தையே! எங்களுக்காக செபித்துக் கொள்ளுங்கள்.  எங்கள் குடும்பம் மிகவும் பிரச்சனைகள் இருக்கிறது. குறிப்பாக கடன் பிரச்சனை, உடல்நலக்குறைவு, அமைதியின்மை போன்ற பிரச்சனைகள் அதிகமாகவே இருக்கின்றது. எனவே தொடர்ந்து செபியுங்கள்" என்று கூறினார். அதற்கு நான் "நீங்கள் ஆலயத்துக்கு எப்போது வந்திருக்கிறீர்கள்? என்று கேட்டேன். அப்பொழுது அவர் "கிட்டத்தட்ட ஆறு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது "என்று கூறினார். "உங்கள் கணவர் ஆலயத்துக்கு வருவாரா?" என்று கேட்டேன். அதற்கு அவர் "அவரும் ஆலயத்திற்கு வர மாட்டார் "என்று கூறினார்.  "குடும்ப செபம் செபிக்கும் பழக்கம் இருக்கின்றதா?" என்று கேட்டேன். அதற்கு அவர் "ஒருபோதும் நாங்கள் செபம் செய்ததில்லை. அதற்காகத்தானே நீங்கள் இருக்கிறீர்கள் " என்று கூறினார்.  அப்பொழுது நான் புனித அகுஸ்தினார் வார்த்தைகளைக் கூறி "கடவுளே இறங்கி வந்தாலும் நாம் ஒத்துழைப்பு  கொடுக்கவில்லையென்றால் மீட்டுக் கொடுக்க முடியாது" என்பதை பதிவு செய்து "உங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் என்பது அரிதான ஒன்றாக இருக்கிறது "என்று கூறினேன்.

ஆம் அன்புக்குரியவர்களே!  பல நேரங்களில் கடவுளை ஊறுகாயாக பயன்படுத்துகிறோம். தேவைக்கு பயன்படுத்தும் மந்திரவாதியாக பயன்படுத்துகிறோம். ஆனால் அவரின் ஆசீர் மட்டும் வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். கடவுளின் ஆசீர்வாதம் வேண்டுமென்றால் நிச்சயமாக நம்முடைய வாழ்வில் கடவுளைத் தேட வேண்டும். கடவுள் மீது ஆழமான நம்பிக்கை கொள்ள வேண்டும். எந்நாளும் விழித்திருந்து   கடவுளை நோக்கி இறைவேண்டல் செய்ய வேண்டும். அப்பொழுது மட்டும்தான் கடவுளின் ஆசியை பெற முடியும்.

இன்றைய நற்செய்தியில் இயேசுவை தொட்டால் நலம் பெற முடியும் என்று ஆழமாக நம்பிய நோயாளர்கள் தொட்ட உடனே நலம் பெற்றார்கள். யாரெல்லாம் நம்பிக்கையோடு இயேசுவை நோக்கி வருகிறார்களோ, அவர்களை ஆண்டவர் இயேசு கனிவோடும் இரக்கத்தோடும் ஆசிர்வதிக்க கூடியவராக இருக்கிறார். எனவே நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கடவுளின் ஆசீர்வாதத்தை பெற வேண்டும் என்று விரும்பினால் கடவுளை நாம் தேட வேண்டும். கடவுளை மையப்படுத்திய வாழ்வு வாழவேண்டும். கடவுள் மட்டும் தான் ஒப்பற்ற செல்வம் என்பதை ஆழமாக நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே கடவுளை தேடி நலம் பெற்றிட தேவையான  அருளை வேண்டுவோம். 

 இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்க்கையில்   எப்பொழுதும் உம்மை தேட கூடிய மக்களாக வாழ தேவையான அருளைத் தாரும். ஆமென்.

Add new comment

3 + 9 =