நம்பிக்கையால் நம்மை பிடித்துள்ள விலங்குகள் கழன்று விழும்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம் - ஆறாம் செவ்வாய்
I: திப:16: 22-34
II: தி.பா: 138: 1-2a. 2bc-3. 7c-8
III : யோவான்:  16: 5-11

பாஸ்கா காலத்தின் ஆறாம் வாரத்தில் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இக்காலம் நமக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்துவது நம்பிக்கையையே. நாம் ஏற்கனவே பலமுறை தியானித்தது போல நம்பிக்கை ஒரே நாளில் வளர்ந்துவிடாது. நம்பிக்கை காலமெல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும். அதுபோல நம்பிக்கை இருப்பதால் நமக்கு துன்பமே வராது என்பது அல்ல. மாறாக துன்பத்தைத் தாங்கக் கூடிய துணிவு வரும். இதைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் வரும் நிகழ்வுகள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன.

பவுலும் சீலாவும் தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்ட்டனர். அவர்கள் விலங்குகளால் பிடிக்கப்பட்டிருந்த நிலையிலும் கூட சிறையில் அவர்கள் கடவுளைப்  பாடி புகழ்ந்தனர் என்று கூறப்பட்டுள்ளது. இச்செயல் அவர்களின் நம்பிக்கையின் வலிமையை நமக்கு எடுத்துரைக்கிறது. அந்நம்பிக்கையின் ஆழமே அவர்கள் கையிலிருந்த விலங்குகளைக் கூட கழன்று விழச் செய்தது. இந்நிகழ்வு நமக்குணர்த்தும் செய்தி யாதெனில் நம்பிக்கை நம்மிடம் இருக்கும் போது நம்மைப் பிடித்துள்ள விலங்குகள் தானாக கழன்று விழும்.  நாமும் நற்செய்தியை அறிவிக்கும் வல்லமை மிக்க திருத்தூதர்களைப் போல் ஆவோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தம் சீடர்களுக்குப் பாவம், நீதி, தீர்ப்பு போன்றவற்றை பற்றிய சரியான புரிதலை அவர்கள் பெற அவர் சென்று துணையாளரை அனுப்புவதாகக் கூறியுள்ளார். ஏனென்றால் சீடர்கள் இயேசு போவதாகச் சொன்னவுடன் நம்பிக்கை இழந்தவர்களாய் துயரத்தில் ஆழ்ந்துவிட்டார்கள். அவர்களைத் திடப்படுத்த துணையாளரை அனுப்புவதாக வாக்களிக்கிறார் இயேசு.

ஆம்,  நம்பிக்கையின்மை நம்மை துயரத்தில் ஆழ்த்திவிடும்.  நம்பிக்கையோ துயர் மிகுந்த நேரத்திலும் கடவுளைப் பாடித் துதிக்கும் மனதைத் தரும். நம்மைச் சூழ்ந்து இருக்கும் அடிமைத் தனத்தின் சங்கிலிகளை அடித்து நொறுக்கி நம்மை துணிச்சலுள்ளவர்களாக மாற்றும். அத்தகைய நம்பிக்கை உள்ளவர்களாக மாற இறையருள் வேண்டுவோம்.

 இறைவேண்டல் 
அன்பு ஆண்டவரே! நம்பிக்கை என்னும் ஆயுதத்தால் எங்களைப் பிணைத்துள்ள விலங்களை அறுத்தெறிய வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
த.சூசையப்பட்டிணம்

 

Add new comment

1 + 1 =