நமது பார்வை நல்லதையும் தேவயானதையும் தேடட்டும்! | குழந்தைஇயேசு பாபு | DailyReflection


தவக்காலம் நான்காம் செவ்வாய்
I: எசேக்கியேல் 47:1-9,12
II :  திபா 45:2-3,5-6,8-9
III : யோவான் 5:1-3,5-16

ஒரு ஆசிரியர் வகுப்பில் ஒரு வெள்ளைத்தாளில் ஒரு கருப்பு புள்ளிவைத்து அதை அனைவரிடமும்  காட்டி மாணவர்களிடம் என்ன தெரிகிறது என்று கேட்டார்.  அதற்கு பெரும்பாலானோர் கருப்பு புள்ளி தெரிகிறது எனப் பதிலளித்தனர். ஆனால் ஒரே ஒரு மாணவர் மட்டும் சற்று வித்தியாசமாக வெள்ளை நிறம் அதிகமாவும் ஒரு சிறிய  கருப்புப் புள்ளியும்  தெரிகிறது.  வெள்ளை நிறத்தை மட்டும் கவனித்தால் கருப்புப் புள்ளி நம் கண்ளுக்குத் தெரிவது கடினம் என பதிலளித்தான்.
அப்பதிலைக் கேட்ட ஆசிரியர் மாணவனைக் கண்டு வியந்தார். நல்லவற்றை மட்டும் காணும் அவன் மனநிலையைப் புகழ்ந்தார்.

ஆம். அன்புக்குரியவர்களே நம்மைச் சுற்றி பல நல்லவைகள் நடந்தாலும் நமது கண்கள் பல வேளைகளில் தேவையில்லாதவற்றையும் எதிர்மறையான காரியங்களையுமே பார்க்கின்றன. அவற்றை பற்றியே யோசிக்கின்றன. அவைகளைப் பற்றி மட்டுமே பேசுகின்றன. இத்தகைய நமது மனநிலை இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த பரிசேயர்களுடைய மனநிலையை சுட்டிக்காட்டுவதாக உள்ளது.

இன்றைய நற்செய்தி அதற்கு சிறந்த உதாரணம். முப்பத்தெட்டு ஆண்டுகளாய் இருந்த இடத்தைவிட்டு நகரமுடியாமல்,வானதூததரால் கலக்கப்பட்ட  குளத்தில் இறங்கி சுகமடைய இயலாமல் இருந்த ஒருவரை இயேசு தாமாகச் சென்று சுகமாக்கினர். இத்தனை வருடங்களாக உடல் மன வேதனைகளால்  அவதிப்பட்ட அம்மனிதனின் வாழ்வை நலமானதாக மாற்றினார் இயேசு. ஆனால் அந்நற்செயலைக் காணாமல் ஓய்வு நாளில் படுக்கையைத் தூக்கி கொண்டு எப்படி நடக்கச்சொல்லலாம்? என்பது தான் பரிசேயர்களின் வாதமாக இருந்தது. மிகப்பெரிய வெள்ளைத்தாளில் உள்ள வெண்மையைக் காணாமல் அதிலிருக்கும் ஒருசிறு கரும்புள்ளியை காணுவதைப்போன்றதல்லவா இப்பண்பு.

ஆகவே நம்முடைய அன்றாட வாழ்க்கைச் சூழலில் நமக்குப் பிடிக்காதவர்களே ஆயினும் அவர் ஏதேனும் நன்மை செய்தால் அதிலுள்ள நன்மையை மட்டும் காணக்கற்றுக்கொள்வோம். தேவையற்றவை, எதிர்மறையானவை போன்றவற்றில் கவனம் செலுத்துவதைத் தவிர்ப்போம். நம் வாழ்விலும் நன்மைகளின் எண்ணிக்கை பெருகும்.நலம் கிடைக்கும். மேலும் இயேசுவைப் போல யார் என்ன சொன்னாலும் மமற்றருக்கு நன்மையை மட்டுமே செய்யவும் கற்றுக்கொள்வோம். நம்மைச் சுற்றி எத்தனையோ ஆசிகளை கடவுள் வைத்துள்ளார். பலன் தரும் இயற்கையை தந்துள்ளார். நல்ல மனிதர்களைத் தந்துள்ளார். அதிசயங்களையும் நிகழ்த்துகிறார். அவற்றை நோக்கி நம் மனம் செல்லட்டும்.

 இறைவேண்டல் 
நன்மையின் இறைவா! எமது கண்களும், உள்ளங்களும் தேவையானவற்றையும் நல்லவற்றையும் நோக்கி இருக்கவும் குறைகளை கவனிக்காத மனநிலையும் கொண்டதாக இருக்கவும் வேண்டிய அருள் புரியும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 0 =