Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நமது உடனிருப்பு பிறரை மகிழ்விக்கிறதா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection Primary
திருவருகைக் காலத்தின் நான்காம் திங்கள் - I. இனி.பா:2:8-14; II. தி.பா: 33:2-3,11-12,29-21; III. லூக்: 1:39-45
ஒரு அருட்சசோதரி பணியிட மாற்றத்தின் காரணமாக வேறொரு தளத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அவர் மூன்று ஆண்டுகளாக அந்த ஊரில் மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்குரிய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். புதிய பணித்தளத்திற்குச் செல்லும் முன்பு பெற்றோரை அழைத்துக் கூட்டம் நடத்திப் புதிதாக வந்துள்ள சகோதரியையும் அறிமுகம் செய்தார். அச்சமயம் பெற்றோர்களுக்கும் உடன் பணிபுரிபவர்களுக்கும் ஒருவித சோகம். அப்போது பணியாளர்களில் ஒருவர் எழுந்து நின்று "இச்சகோதரி புதிய தளத்திற்குச் செல்வது வருத்தத்தைத் தருகிறது. அவர் எங்களுக்கு உதவிகள் செய்திருக்கிறார். நல்ல தோழியாக இருந்திருக்கிறார். கவலையாய் இருக்கும் போது எங்கள் முகத்தைப் பார்த்து அதைக் கண்டுபிடித்து எங்களுக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறுவார். அவருடைய உடனிருப்பில் நாங்கள் முகத்தில் புன்னகையுடன் மட்டுமல்ல, மனதிலும் மகிழ்வை உணர்ந்திருக்கிறோம்" என்று கூறினார்.
பிறருக்கு மகிழ்ச்சியை நாம் எவ்வாறு தரமுடியும். அவர்களுக்கு விருப்பமானவற்றைச் செய்வது ,வேண்டிய பொருட்களை வாங்கித் தருவது, நிறைய நேரம் உடனிருந்து கதைபேசுவது போன்றவையெல்லாம் ஒருவித தற்காலிக மகிழ்ச்சி உணர்வைத் தரும். ஆனால் அதையும் தாண்டி துன்பத்தில் துணையாகவும் ,தவறும் போது வழிகாட்டியாகவும், உதவி தேவை என்ற நேரத்தில் கேட்காமலேயே உதவி செய்யும் போதும் நாம் பிறருக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தர முடியும். இவ்வவாறு செய்வதற்கு பிறருடைய சூழ்நிலையில் நம்மைப் பொறுத்திப் பார்ப்பது மிகமிக அவசியம்.
இன்றைய நற்செய்தியில் நாம் காணும் அன்னை மரியா அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வயது முதிர்ந்த தன் உறவினர் கருவுற்றதை அறிந்ததும் அவருடன் இருந்து பணிவிடை செய்ய விரைந்து சென்றார் அன்னை மரியா. தான் அச்சமயம் கருவுற்றிருப்தையும் பொருட்படுத்தாமல் கரடுமுரடான மலைப்பாங்கானப் பகுதிக்குக் கால்நடையாகச் சென்று எலிசபெத்துடைய வீட்டை அடைந்தார். கேட்கப்பபடாத போதும் உதவி செய்ய மனமுவந்தார் மரியா. நிச்சயமாக ஒரு பெண்ணாக மற்றொரு பெண் கற்பகாலத்தில் அடையும் உடல் உபாதைகளை அவர் தெரிந்திருப்பார். அதுவும் வயது முதிர்ந்த பெண்ணின் உடல் மனத் தளர்ச்சிகளை உணர்ந்திருப்பார். இத்தகைய அன்னை மரியாவின் ஒரு தன்னார்வ பிறர்நல செயல் எலிசபெத்தை மட்டுமல்ல அவருடைய வயிற்றிலுள்ள குழந்தைக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. குழந்தையும் மகிழ்ச்சியால் துள்ளியது என வாசிக்கிறோம்.
அன்னை மரியாவின் இத்தகைய உயரிய பண்பை நம்மிலே உருவாக்கி அதை வளர்த்துக்கொள்ள நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம். வாய் திறந்து கேட்டபிறகும் உதவி செய்யத் தயங்கும் தன்னலப்போக்கினை நாம் கொண்டிருந்தால் அதை நாம் இன்றே மாற்றிக்கொள்ள முயல வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் நம் உடனிருப்பு பிறருக்கு மகிழ்ச்சியைத் தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே அன்னை மரியாவைப் போல தேவையில் இருப்பவர்களைத் தேடிச்சென்று உடனிருந்து மகிழ்ச்சியைக் கொடுக்கும் மனிதர்களாக மாறும் வரம் கேட்போம். மகிழ்ச்சி தூய ஆவியார் வழங்கும் கனி. அக்கனியை நாமும் அடைந்து பிறருக்கும் வழங்கும் கருவிகளாக மாறும் வரம் கேட்போம்.
இறைவேண்டல்
மகிழ்ச்சியை ஏற்படுத்த மானிட உருவம் பூண்ட இறைவா, நிலையான மகிழ்ச்சியை நாடித்தேடவும் அம்மகிழ்ச்சியை இழந்து தவிப்பவர்களுக்கு எங்கள் உடனிருப்பால் உதவி செய்யும் மனதால், ஆறுதலால் அதை வழங்கவும் அருள் தாரும். ஆமென்.
Add new comment