நன்றியுணர்வோடு வாழ்வோமா! | குழந்தைஇயேசு பாபு


Gratefulness

பொதுக்காலத்தின் 32 ஆம் புதன் - I. தீத்து: 3:1-7; !!. திபா: 23:1-3.3-4.5.6; II. லூக்: 17:11-19

ஒரு ஊருக்கு ஒரு மாவட்ட ஆட்சியர் வருகை தருவதாய் அறிவித்திருந்தார். அனைவரும் ஆட்சியர் வருகைக்காகக் காத்திருந்தனர். அந்த ஊரில் உள்ள பெரிய தலைவர்கள் எல்லாம் தங்களை  தான் ஆட்சியர் பார்க்க வருகிறார் என்று தங்களைத் தயார்படுத்திக் கொண்டனர். தங்கள் வீடுகளையெல்லாம் அலங்கரித்துக் கொண்டனர். ஆட்சியர் அந்த ஊருக்கு வருகை தந்தார். அனைவரும் யார் வீட்டிற்கு வரப் போகிறார் என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். அந்த ஆட்சியர் ஒரு வயதான முதியவர் பெயரைக் கூறி 'அவருடைய வீடு எங்கே?' என்று வினவ, இவர் ஏன் அந்த முதியவரின் வீட்டை  கேட்கிறார்' என்று வியப்போடு பார்த்தனர்.  இருந்த போதிலும் அந்த வீட்டிற்கான வழியை காண்பித்தனர்.

மாவட்ட ஆட்சியர் அந்த முதியவரின் குடிசைக்குள் சென்று அந்த முதியவரை வெளியில் அழைத்து வந்தார். முதியவர் குடிசையை விட்டு வெளியே வந்தவுடன் அவரின் காலில் விழுந்து மாவட்ட ஆட்சியர் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டார். அனைவருக்கும் வியப்பாகவும் குழப்பமாகவும் இருந்தது. அப்போது மாவட்ட ஆட்சியர் அந்த ஊர் மக்களை பார்த்து "நான் என் தாய் தந்தையை இழந்தவன். எனக்கு ஐந்து வயது இருக்கும் பொழுது எனக்கு எந்த உறவினர்களும் உதவி செய்ய முன்வரவில்லை. உண்ண உணவு இல்லாமல் சாலை ஓரத்தில் படுத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது இந்த முதியவர் தான் என்னை தூக்கி வளர்த்தார். மூன்று வேளையும் உண்ண உணவு கொடுத்தார். 10 வயது வரை என்னை நன்முறையில் வளர்த்தார். அதன்பின்பு தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் ஒரு விடுதியில் கொடுத்து இக்குழந்தையை நல்ல முறையில் படிக்க வைத்து பெரிய ஆளாக மாற்றுங்கள் என்று சொல்லி விட்டுச் சென்றார். அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் அந்த விடுதிக்கு எனக்கு தேவையான பணத்தை அனுப்பி வைத்தார். அவர் செய்த இந்த தியாகம்தான் என்னை ஒரு  மாவட்ட ஆட்சியராக உருவாகியுள்ளது. நான் இவரை தேடி அலைந்தபோது இவர் எங்கே இருக்கிறார் என்ற உண்மை தெரியவில்லை. இப்பொழுதுதான் என்னுடைய விடுதி கண்காணிப்பாளர் வழியாக அறிந்து கொண்டேன். அவர் செய்த தியாகத்திற்கு எத்தனை முறை அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றாலும் போதாது. இவர் என்னை எவ்வாறு படிக்க வைத்தாரோ, அதேபோல நானும் பல குழந்தைகளை உருவாக்குவேன்" என்று மனதுருகி கண்ணீர்விட்டு பதிலளித்தார். இதைக் கேட்ட அந்த முதியவர் அந்த மாவட்ட ஆட்சியரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இதுதான் உண்மையான நன்றி உணர்வு.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பல நபர்களிடமிருந்து நன்மைகளைப் பெறுகின்றோம். கடவுள் படைத்த இந்த இயற்கைப் படைப்புகள் யாவும் நமக்குப் பற்பல நன்மைகளைத் தருகின்றன. நமக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகினன்றன. ஒவ்வொரு நாளும்   நாம் காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை பற்பல நன்மைகளை மனிதர்கள் மூலமாகவும், இயற்கையின் மூலமாகவும் பெறுகிறோம். நாம் என்றைக்காவது அவற்றைக் குறித்து நன்றி உணர்வோடு இருந்திருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க அழைக்கப்பட்டுள்ளோம். உதாரணமாக, நாம் உணவை உட்கொள்கிறோம். அந்த உணவை உட்கொள்வதற்கு பல நபர்கள் உழைத்திருக்கிறார்கள். குறிப்பாக அதை விதைத்து அறுவடை செய்த விவசாயிகள், விளைவித்த நிலம் மற்றும் இயற்கை வளங்கள், அறுவடை செய்தவற்றை உணவுப் பொருளாக மாற்றியவர்கள், மாற்றப்பட்ட உணவுப்பொருட்களைச் சமைத்தவர்கள் எனப் பல நபர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

நன்றி உணர்வு என்பது ஒரு உணர்வு மட்டும் அல்ல;மாறாக அது ஒரு செயல்பாடு. மேற்காணும் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தம்மை உருவாக்கிய அந்த முதியவருக்குத் தான் உயர்ந்த இடத்திற்கு சென்றாலும் நன்றியை செலுத்த முன் வருகின்றார். இப்படிப்பட்ட மன நிலையைத் தான் நாம் வளர்த்துக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். நாம் எந்த அளவுக்கு நன்றி சொல்லுகின்றோமோ, அந்தளவுக்கு நம்முடைய உறவையும் நம்முடைய அன்பையும் வெளிப்படுத்த முடியும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஒரு வல்லச்செயலை செய்கிறார்.  ''பத்து தொழுநோயாளர்கள்...'ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்' என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்'' (லூக்கா 17:13). அப்போது இயேசு அவர்கள் மீது பரிவு கொண்டு அவர்களுக்கு நலம் அளித்தார். தொழுநோய் என்பது இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் மிகக் கொடூரமான நோயாக கருதப்பட்டது. அதுவும் அந்த நோய் கடவுளின் சாபமாக கருதப்பட்டது. இத்தகைய பின்னணியில் தான் தொழுநோயாளர்கள் இயேசு வாழ்ந்த காலக்கட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்களாகவும் ஓரங்கட்டப்பட்டவர்களாகவும் தீண்டத்தகாதவர்களாகவும் கருதப்பட்டனர். அவர்களுக்கு புது வாழ்வு அளிக்க வேண்டும் என்ற மனநிலையில் ஆண்டவர் இயேசு இந்த வல்ல செயலைச் செய்து  சமூகத்தில் ஒரு அங்கீகாரத்தை கொடுக்கின்றார்.

பத்து தொழுநோயாளர்களும் தொழுநோயிலிருந்து குணம் பெற்றுவிட்டார்கள் என்பதை அங்கீகரிக்கும் விதமாகவும் சமூகத்தில் ஒரு மதிப்பை கொடுக்கும் விதமாகவும் குணமடைந்த தொழுநோயாளர்களை   தங்கள் குருவிடம் காட்டுமாறு அறிவுறுத்தினார். இயேசுவின் வழியாக நன்மைகளைப் பெற்றுக் கொண்ட தொழுநோயாளர்களுள் ஒன்பது பேர் குணமடைந்த பிறகு தாங்கள்  கடந்து வந்த பாதையை நினைத்துப் பார்க்காமல்,  இயேசுவிடம் திரும்பி வராமல் சென்றனர். ஒரே ஒரு குணமடைந்த  சமாரிய தொழுநோயாளர் மட்டும்தான் இயேசுவிடம் நன்றி சொல்வதற்காக திரும்பி வந்தார். ''பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?'' (லூக்கா 17:17) என்று இயேசு குணமடைந்து நன்றி சொல்ல வந்த அந்த  தொழுநோயாளரைப் பார்த்து கேட்டார். 

இந்தக் கேள்வியை நாம் காணும் பொழுது நமக்கு ஒரு ஐயம் எழலாம். நேற்றைய நற்செய்தியில் நம்முடைய கடமைகளை மட்டும் செய்து பலனை எதிர்பார்க்க கூடாது என்று இயேசு கூறினார். ஆனால் இயேசு இதே நாளில் நன்மை பெற்றவர்களை நன்றி சொல்லவில்லை என கேள்வி எழுப்புகிறார் என்ற ஐயம் எழலாம். நேற்றைய நாளின் நற்செய்தி நன்மை செய்பவர்களின் மன நிலை எப்படி இருக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டியது. இன்றைய நற்செய்தியானது நன்மையைப் பெற்றுக் கொள்பவரின்  மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளது.  நன்மையைப் பெற்றுக் கொள்பவர்கள் அனைவருமே நன்றி உணர்வு உள்ளவர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளனர். "கோழிகூட தண்ணீர் பருகும் போது வானத்தை அண்ணார்ந்து பார்த்து இறைவனுக்கு நன்றி கூறுகிறது" என்கிறது துருக்கியப் பழமொழி .எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே நாம் பெற்றுக் கொள்ளும் நன்மைகளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். ஒவ்வொருநாளும் இறைவன் உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இடமும் கொடுத்து வருகிறார். அந்தப் பெரிய காரியங்களை எண்ணிப்பார்த்து கடவுளுக்கு நன்றி செலுத்துவோம். அப்பொழுது ஆண்டவர் இயேசு எதிர்பார்க்கும் நல்ல நன்றியுணர்வுள்ள வாழ்வை வாழ முடியும். இன்றைய நாளில் சிறப்பான விதத்தில் நாம் பிறந்தது முதல் இந்த நொடி பொழுது வரை நமக்கு கடவுளும் ஏராளமான மனிதர்களும் இயற்கை வளங்களும் பற்பல நன்மைகளைச் செய்துள்ளனர் . அனைத்தையும் நினைத்து பார்த்து நன்றி செலுத்துவோம். நன்றி உணர்வு உள்ளவர்களாக இறைவனை எந்நாளும்  புகழ்வோம். அதற்குத் தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் 
"நன்றியுணர்வு கடந்த காலத்திற்கு அர்த்தம் கொடுக்கிறது; நிகழ்காலத்தில் அமைதியைத் தருகிறது; எதிர்காலத்திற்கு வெளிச்சம் தருகிறது" என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப கடந்த காலத்தில் நாங்கள் பெற்ற நன்மைகளுக்காக நன்றி செலுத்துகிறோம். அந்த நன்மையின் வழியாக நாங்கள் பெற்ற அமைதியான வாழ்வையும் வளமான வாழ்வையும் பிறரும் பெறும் பொருட்டு நாங்கள் உழைக்க தேவையான அருளைத் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 16 =