நண்பர்களைச் சம்பாதிக்கக் கற்றுக்கொள்வோம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 31 ஆம்  சனி; I: உரோ: 16: 3-9, 16, 22-27; II : திபா: 145: 2-3. 4-5. 10-11; III : லூக்:  16: 9-15

நேற்றைய நாளில் உறவா ? செல்வமா ? என்ற சிந்தனையோடு இயேசு கூறிய உவமையை சிந்தித்ததன் தொடர்ச்சியாக மீண்டுமாக நம்முடைய செல்வங்களைக் கொண்டு நல்ல நண்பர்களைச் சம்பாதிக்க அழைக்கிறார்  இயேசு. 

இன்றைய காலத்தில் நண்பர்களைச் சம்பாதிப்பதற்கு  என்ன செய்கிறார்கள் தெரியுமா?  அவர்களுக்காக நிறைய பணம் செலவழிப்பது, அவர்கள் விரும்புவதையெல்லாம் வாங்கிக் கொடுப்பது, பணத்தை விரயம் செய்து ஊர்சுற்றுவது , உண்பது குடிப்பது என துச்சமாக பணத்தை செலவழிப்பது என தன்னைச் சுற்றி ஒருகூட்டத்தைக் கூட்டிச் சேர்ப்பதுதான் " நண்பர்கள் ".

இயேசு செல்வத்தைக் கொண்டு நண்பர்களைச் சேர்க்கச்சொன்னது இப்படியல்ல. " ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் "என்பது ஒரு பழமொழி. எவனொருவன் துன்பத்திலும் தேவையிலும் ஆபத்திலும் இருப்பவருக்கு உதவுகிறானோ அவனே உண்மையான நண்பனாகிறான். இயேசு இதைத்தான் நம்மிடம் எதிர்பார்க்கிறார். நம்மிடம் இருக்கும் செல்வத்தை நம்மோடு சும்மா சுத்திக்கொண்டிருப்பவர்களுக்கு செலவழிக்காமல் உதவு தேவைப்படும் ஏழை எளியோருக்கு செலவழிக்கும் போது நாம் அவர்களின் நண்பர்களாகிறோம். நாம் சேர்த்து வைக்கின்ற இந்த நட்பு ஏதாவது ஒரு வகையில் நம் துன்ப நேரத்தில் உடனிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அன்புக்குரியவர்களே செல்வம் எனக் கூறும் போது உடைமைகள் மட்டுமல்ல. நம் உடனிருப்பு, நல்லெண்ணங்கள் , அன்பு,  திறமைகள் அனைத்தும் தான். நம்மிடம் உள்ள இத்கைய செல்வங்களை  நேர்மையோடு பயன்படுத்தி, நம்மோடு பயணிக்க நல் உறவுகளையும் நண்பர்களையும் சம்பாதித்துக் கொள்ள முயற்சிசெய்வோம். அவ்வாறு நாம் வாழும் போது தனிமை என்பதே நம் வாழ்வில் இல்லாமல் போகும். அதற்கான வரம் வேண்டுவோம்.

இறைவேண்டல்

அன்பு இயேசுவே ! கடவுள் எங்களுக்குக் கொடுத்த செல்வங்களை உண்மையற்ற நண்ப ப் கூட்டத்திற்கு செலவழித்து வீணாக்காமல் , அவற்றை நேர்மையோடு பயன்படுத்தவும் ,
தேவையிலிருப்போருக்கு உதவவும் அதன்மூலம் நல்ல நண்பர்களைச் சம்பாதிக்கவும் அருள் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

6 + 2 =