தேடி வரும் இறைவன் | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


God meet human

திருவருகைக் காலத்தின் நான்காம் வியாழன் - I. 2சாமு 7:1-5,8-12,16; II. திபா: 89:1-2,3-4,26,28; III. லூக்: 1:67-79

மற்ற சமயத்திற்கும் கிறிஸ்தவ சமயத்திற்கும் உள்ள ஒரே வேறுபாடு என்னவென்றால், பிற தெய்வங்களைத் தேடி பக்தர்கள் செல்வார்கள். ஆனால் நம்மைத் தேடி நம் இறைவன் வந்தார். பாவம் செய்து ஒளிந்து கொண்டிருந்த ஆதாமை நோக்கி ஆதாம் நீ எங்கே இருக்கிறாய் என்று தேடியவர் தான் நம் தந்தைக் கடவுள். தந்தையை விட்டு விலகிச் சென்ற பின்னும் தன் மகன் தன்னை நோக்கி வருவான் என வழிமேல் விழிவைத்துக் காக்கும் தந்தையின் அன்பை ஊதாரி மகன் உவமையின் வழியாய் விளக்குகிறார் இயேசு. காணமல் போன ஆட்டை ஆயன் தேடுவதைப் போல, காணமல் போன நாணயத்தை விளக்கேற்றி பெண்ணாவள் தேடுவதைப் போல இறைவன் நம்மைத் தேடுகிறார். மீட்பளிக்கிறார். இத்தகைய தந்தையின் அன்பைத்தான் சக்கரியாவும் தன் பாடலில் விளக்குகிறார் "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடி வந்து மீட்டருளினார்."

படைத்த கடவுள் நம்மைத் தேடி வந்தார். நாம் அவரைத் தேடுகிறோமா?.... 

கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு மிக அருகில் இருக்கும் நாம் இதை சற்று ஆழமாகச் சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். தேடல் என்பது வாழ்வில் அத்தியாவசியமான தேவை. தேடலின்றி நாம் எதையும் பெற இயலாது. கல்வி என்பது அறிவுக்கான தேடல். நட்பும் உறவும் அன்புகான தேடல். வேலை அதனால் கிடைக்கும் செல்வம் வாழ்வின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு தேடல். இசைக்கான தேடல் பாடலாகிறது. பயணத்திற்கான தேடல் பாதையாகிறது. மொழியின் தேடல் கவிதையாகிறது. அறிவியல் தேடல் கண்டுபிடிப்பாகிறது. ஆண்டவனைத் தேடினால் வாழ்வு அர்த்தம் பெறுகிறது. 

இறைவன் நம்மைத் தேடினார். மனிதனானார். மீட்புத்தந்தார். நாம் அவரை உண்மையில் தேடினால் அவரைப் போல வாழ்வோம் என்பதில் ஐயமில்லை. ஆனால் நம்மைத் தேடிவந்த இறைவனை நம் அருகில் வைத்துக்கொண்டு உலகத் தேடலில் வீழ்ந்து இறைவன் நம்மைக் கண்டடையாதவாறும் நாம் இறைவனைக் கண்டடையாதவாறும் தொலைந்துவிடும் அனுபவம் நம் வாழ்வில் ஏராளம்.

நாம் வாழும் இவ்வுலகில் பொதுவாக அனைவரும் தேடக்கூடியவை என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் எல்லாத் தேவைகளும் நிறைவேற்றப்படக்கூடிய எளிதான வாழ்க்கை. அதற்காக நாம் பணம், பதவி, புகழ், பட்டம் இவற்றைத் தேடுகிறோம். நிலையான மகிழ்ச்சிக்கும் நிலையற்ற இன்பங்களுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைக் கண்டறியாமல் உலக மாயைகளும், பொழுது போக்குகளும் நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் என எண்ணி அவற்றைத் தேடி ஓடி இறுதியில் வெறுமையே வாழ்வில் மிஞ்சுகிறது. இறைவனை நம் உள்ளத்தில், வாழ்வில், சொல்லில், செயலில்,எண்ணத்தில் நாம் தேடிக்கண்டடைய முயற்சிப்போம். நாம் அவரைக் கண்டடையும் முன்பே அவர் நம்மைத் தேடிக் கண்டடைவார். நம் வாழ்வும் முழுமை பெறும்.

இறைவேண்டல், இறைவார்த்தை வாசித்தல், பிறருக்கு நற்செயல் செய்தல் போன்ற செயல்கள் நம்மைத் தேடி வரும் இறைவனைக் கண்டடையவும், நம்முள் இறைத்தேடலை அதிகரிக்கவும் நமக்கு உதவுகிறது. அன்றாட வாழ்வில் கிடைக்கின்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்தி நம்மைத் தேடி வரும் இறைவனை நாமும் விரும்பித்தேடும் வரம் கேட்போம். 

இறைவேண்டல்

பாவிகளாகிய எம்மைத் தேடி மீட்க மனுஉருவான இறைவா உம்மைத் தவிர மற்றெல்லாவற்றையும் தேடி அலைந்து வெறுமையாகிறோம். இத்தகைய வாழ்வைக் களைந்து உம்மை தேடி புது வாழ்வு பெறும் வரம் தாரும். ஆமென்.

Add new comment

8 + 3 =