Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
துன்பத்திலும் இறைவனை முழுவதும் நம்ப வேண்டும்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
ஆண்டின் பொதுக்காலத்தின் மூன்றாம் சனி
I: 2 சாமு: 12: 1-7.10-17
II : திபா: 51: 10-11. 12-13. 14-15
III: மாற்: 4: 35-41
ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருடைய வாழ்க்கையில் துன்பத்தை விட இன்பத்தையே அதிகமாகப் பெற்றார். எனவே கடவுள் நல்லவர் என்று கூறிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டது. எனவே அவர் தன்னிடம் இருந்த சொத்துக்களை இழக்க நேரிட்டது. சொத்துக்களை இழக்கத் தொடங்கும் பொழுது அவருடைய வாழ்வில் இறை நம்பிக்கையும் குறைந்து வந்தது. எந்தளவுக்கு கடவுளைப் போற்றிப் புகழ்ந்தாரோ, அதே அளவுக்கு கடவுளை இகழத் தொடங்கினார்.
இவ்வாறாக கடவுளின் ஆசீரைப் படிப்படியாக இழக்கத் தொடங்கினார்.
நம்முடைய அன்றாட வாழ்வில் நாமும் இப்படித்தான். பல நேரங்களில் இன்பம் வருகின்ற பொழுது கடவுளைப் போற்றி புகழ்கின்றோம். சிறிய துன்பம் நம்முடைய அன்றாட வாழ்வில் வந்தாலும் கடவுளைப் பழித்து பேசக் கூடியவர்களாக மாறி விடுகின்றோம். இத்தகைய நிலை மாறி கடவுளை முழுமையாக நம்ப வேண்டும் என்ற ஆழமான சிந்தனையை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குத் தருகிறது.
"தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்" என்ற இறைவசனம் இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொள்ளச் சிறப்பான விதத்தில் அழைப்பு விடுகின்றது. சீடர்கள் இயேசுவோடு படகில் சென்ற போதிலும், பெரும் புயல் அடித்த பொழுது அஞ்சினார்கள். இயேசு தங்களோடு உடனிருக்கிறார் என்பதை மறந்து "போதகரே, சாகப் போகிறோமே! உமக்குக் கவலை இல்லையா " என்று அவலக் குரல் எழுப்பினார்கள். ஆண்டவர் இயேசு "ஏன் அஞ்சுகிறார்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா? " என்று கேட்டார். காற்றையும் கடலையும் கடிந்து அமைதியை ஏற்படுத்தினார். சீடர்களின் அவநம்பிக்கையை கண்டு இயேசு கடிந்து கொண்டார். இயேசு தன்னோடு இருந்தால் எந்த தீங்கும் வராது என்பதை புரிந்து கொள்ளாதவர்களாய் சீடர்கள் இருந்தனர்.
நம்முடைய வாழ்க்கைச் சூழல்களில் இயேசுவின் உடனிருப்பை மறந்து, துன்பம் வருகின்ற பொழுது கடவுளை மறுதலிக்கின்றோம். இத்தகைய மனநிலை மாறும் பொழுதுதான், கடவுள் தரும் அமைதியை நாம் நிறைவாகப் பெற முடியும். நாம் இன்பத்தில் இருக்கின்ற பொழுது கடவுளைப் போற்றிப் புகழ வேண்டும். துன்பத்தில் இருக்கின்ற பொழுது அவருக்கு நன்றி செலுத்த வேண்டும். அவரை முழுமையாக நம்ப வேண்டும். என்னை அழைத்து வழிநடத்தும் இறைவன் என்னை ஒருபோதும் கைவிடமாட்டார் என்று ஆழமான நம்பிக்கை நம் ஒவ்வொருவரிலும் வேரூன்ற வேண்டும். அப்படிப்பட்ட நம்பிக்கையால்தான் ஆபிரகாம் சாராவுக்கு முதிர்ந்த வயதில் குழந்தை பாக்கியத்தை கொடுத்தார். தாவீது கோலியாத்தை இறை நம்பிக்கையைக் கொண்டே வென்றார். எனவே நம்முடைய வாழ்விலும் எல்லாச் சூழலிலும் இறைவனை நம்பி இன்பத்திலும் துன்பத்திலும் இறைவனை மகிமை செய்வோம். அதன் வழியாக இறையாற்றலை பெறுவோம். அதற்குத் தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள ஆண்டவரே! எங்களுக்குத் துன்பம் வருகின்ற பொழுது துவண்டுவிடாமல், துணிவோடு பயணிக்க இறை நம்பிக்கையைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment