துன்பங்களைப்பற்றிய தெளிவான பார்வை உடையவர்களா நாம்? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 25 ஆம்  சனி; I: செக்:  2: 1-5,10-11; II : தி.பா: 31: 10. 11-12. 13; III: லூக்: 9: 43-45

சமீபத்தில் இணையத்தில் ஒருவரின் உரையைக் கேட்க நேர்ந்தது. அதில் அவர் இவ்வாறு கூறுகிறார். நாம் மேடான இடத்தில்  மிதிவண்டி ஓட்டும் போது நம்முடைய சக்தியை முழுவதும் செலவழித்து உடலை வருத்தி ஓட்டுகிறோம். அப்போது ஒரு பள்ளமான பகுதியைக் 
கண்டவுடன்  நாம் நம்முடைய சக்தியை அதிகம் செலவழிக்கத் தேவையில்லை என்பதை உணர்கிறோம். மகிழ்கிறோம். ஏன் நமது இரு கைகளையும் விரித்துக்கொண்டு மிதிவண்டியின் கைப்பிடியை பிடிக்காமல் கூட ஓட்டுகிறோம். ஆனால் இந்தப்பள்ளத்திற்குப் பின் மீண்டும் ஒரு மேடு வரும் என்பதை உணரத் தவறிவிடுகிறோம். 

ஆம் நண்பர்களே வாழ்க்கையில் இன்பம் இருந்தால் துன்பமும் இருக்கும். அலைகளே இல்லாத கடலை நாம் காணக் காத்திருந்தால் நம் வாழ்வில் அது நடக்காது. அப்படியே அலைகளில்லாத கடலை நாம் காண்கிறோமெனில் அது உயிரில்லாத சவக்கடலாகத் தான் இருக்கமுடியும். இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகின்ற போதுதான் நாம் வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளமுடியும். துன்பத்தைத் தாங்கினால் தான் துணிச்சலும் ஞானமும் நம்மிலே வளரும். இச்செய்தியை நன்கு உணர்ந்து வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

இன்றைய நற்செய்திப் பகுதியானது மிகச் சிறிய வாசகமாக இருந்தாலும் ஆழமான கருத்தை நமக்கு எடுத்துரைக்கிறது. இவ்வாசகத்தில் சீடர்களின் மனநிலையை நாம் நன்கு உணரமுடிகிறது.  இயேசுவின் வல்ல செயல்களைக் கண்ட சீடர்கள் மகிழ்ச்சியிலும் வியப்பபிலும் இருக்கிறார்கள். மெசியா நமக்கு விடுதலை தருவார் என்ற இன்பத்தின் நிலையில் இருந்தனர். 

அவ்வாறு இன்பத்தின் வியப்பில் இருந்த அவர்களுக்கு இயேசு தான் படப்போகும் துன்பத்தை முன்னறிவித்தது புரியாத புதிராகவே இருந்தது. அதைப்பற்றி விளக்கம் கேட்கக்கூட அவர்களுக்கு துணிச்சல் இல்லை. துன்பத்தைப் பற்றிய தெளிவான பார்வை அவர்களுக்கு இல்லாமல் போனது. இதுபோலத்தான் நமது வாழ்க்கையிலும் துன்பங்களைப் பற்றிய தெளிவான பார்வை இன்றி வாழத் துணிச்சல் இல்லாதவர்களாய் நாம் இருக்கிறோம்.

நம் ஆண்டவர் இயேசு துன்பங்கள் வழியாக வெற்றி அடைய முடியும் என்ற தெளிவான பார்வை பெற்றிருந்ததால்தான் சிலுவையை துணிச்சலுடன் சுமந்தார். நாமும் அத்தகையதொரு தெளிவான பார்வை வேண்டி அவரிடம் அருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்

இயேசுவே! துன்பத்தை துணிச்சலுடன் ஏற்றவரே!  வாழ்வில் வரும் துயரங்களையும் சவால்களையும் தெளிவான பார்வையோடு அணுக வரம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

3 + 14 =