Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
துணிந்து செய்வோமா நற்செயல்களை? | குழந்தைஇயேசு பாபு |Daily Reflection
பொதுக்காலத்தின் 30 ஆம் வெள்ளி
I: உரோ: 9: 1-5
II: திபா: 147: 12-13. 14-15. 19-20
III: லூக்: 14: 1-6
இன்றைய காலகட்டத்தில் நல்லவர்களாக வாழவும் நற்செயல் புரியவும் நமக்குத் துணிச்சல் தேவைப்படுகிறது. ஏனென்றால் நல்ல மனிதர்கள் இவ்வுலகைப் பொருத்தவரை ஏமாளிகளாகவே தென்படுகிறார்கள். விமர்சனங்களுக்கு நடுவே அமைதியாகச் சென்றுவிட்டால் தைரியமில்லை என்ற பட்டமும் கட்டிவிடுவார்கள். அப்படிப்பட்ட இன்றைய சமுதாயத்தில் நன்மை செய்ய நமக்குத் துணிச்சல் வேண்டும். இந்தச் துணிச்சல் நமது சொல்லிலும் செயலிலும் வெளிப்படவேண்டும் என்ற ஒரு கருத்தை நாம் ஆழமாக உள்வாங்கி செயல்பட அழைக்கப்பட்டுள்ளோம்.
தாய் தந்தை இரு குழந்தைகளோடு வாழ்கின்ற வீடு அது. தாயானவர் சற்று சட்டதிட்டங்களை விதித்து பிள்ளைகளை கட்டுப்படுத்துவார்.
தந்தையோ பிள்ளைகளை சற்று சுதந்திரமாக விட்டுவிடுவார். ஒருநாள் பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள கோவிலிலிருக்கும் சாமிக்குப் பாலபிஷேகம் செய்ய கொஞ்சம் பால் வாங்கி கோவில் அர்ச்சகரிடம் கொடுக்குமாறு குழந்தைகளிடம் சொல்லி அனுப்பி விட்டார். குழந்தைகள் வரும் வழியில் ஒரு ஏழைத் தாய் தானும் தன் குழந்தையும் சாப்பிட்டு இரு நாட்கள் ஆனதாகச் சொல்லி உதவி கேட்க அந்தப் பாலை அத்தாயிடம் குழந்தைகள் கொடுத்துவிட்டனர். அர்ச்சகரோ அபிஷேகம் செய்ய பால் வரவில்லை என்ற செய்தியைத் தாயிடம் சொல்ல,தாயானவள் கோபமடைந்தார். மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த குழந்தைகளிடம் மிகக் கோபமாக பாலை என்ன செய்தார்கள் என்று விசாரித்தார் தாய். அக்கோபத்தைக் கண்டு சற்றும் அஞ்சாமல் அக்குழந்தைகள் பசியாய் இருந்தவர்களுக்கு தானம் செய்ததாகச் சொல்லி இதைவிட பாலபிஷேகம் முக்கியமல்ல என்று கூறிச் சென்றனர்.
ஆம் அன்புக்குரியவர்களே நாம் செய்வது சரியானதாகவும் பிறருக்கு நன்மை தருவதாகவும் இருந்தால் யாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை. இன்றைய நற்செய்தியில் இயேசு நீர்க்கோவை நோயுடையவரை ஓய்வு நாளில் குணமாக்குகின்ற நிகழ்வு தரப்பட்டுள்ளது. வழக்கம் போல பரிசேயர்கள் அவருடைய இச்செயலை அங்கீகரிக்க மாட்டார்கள் என்பதை இயேசு உணர்ந்திருந்தார். ஆனால் தான் செய்யும் இச்செயலால் ஒருவருடைய வாழ்வு மேம்படுகிறது என்பதை திண்ணமாய் அறிந்திருந்ததால், இயேசு பரிசேயர்களுக்கும் அஞ்சவில்லை ;அவர்கள் தூக்கிப்பிடித்துக்கொண்டிருக்கும் சட்டத்திற்கும் அஞ்சவில்லை.
அதேவேளையில் தன்னுடைய துணிவுமிகுந்த அறிவார்ந்த பேச்சினால் பரிசேயர்கள் எதுவும் கூற முடியாதபடி அவர்களின் வாயடைக்கச் செய்தார்.
அன்பு நண்பர்களே நல்லனவற்றை செய்ய நமக்குப் பிறருடைய அங்கீகாரம் தேவை என நினைத்தால் நம்மால் நற்காரியங்கள் செய்யவே முடியாது. எனவே பிறருடைய அங்கீகாரத்தையும், விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல் மனத்துணிவோடு நற்செயல் புரிய கற்றுக்கொள்வோம். இயேசுவைப் போல ஞானத்துடன் நம் சொல்லிலும் செயலிலும் துணிவை வெளிப்படுத்தவும் முயல்வோம்.
இறைவேண்டல்
வல்லமையோடு நற்செயல்கள் ஆற்றிய இயேசுவே! பிறருடைய மனத் துணிவோடு பிறரின் வாழ்வை மேம்படுத்தும் நற்செயல்கள் புரிய அருள்தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment