திறந்த மனநிலையோடு கேட்கத்தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


ஆண்டின் பொதுக்காலத்தின் ஐந்தாம் வெள்ளி 
I: 1அர:   11: 29-32; 12: 19
II :   திபா 81: 9-10ய. 11-12. 13-14
III:  மாற்:  7: 31-37
 

ஒரு பள்ளி விழாவில் சிறப்பு விருந்தினர் உரையாற்றிக் கொண்டிருந்தார். மாணவர்கள் அனைவரும் கவனித்துக்கொண்டிருந்தனர். அவர் மிகவும் சிறப்பானக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார். அச்சமயத்தில் பேசிக்கொண்டிருந்தவாறே மாணவர்களையும் கவனித்துக் கொண்டிருந்த அவர் குறிப்பிட்ட ஒரு மாணவனைக் கண்டு சற்று தொந்தரவு அடைந்தார். ஏனெனில் அம்மாணவன் தன் இரு கரங்களையும் கட்டிக்கொண்டு சொகுசாக அமர்ந்துகொண்டு உரையைக் கவனிப்பதைப் போல பாசாங்கு செய்தவாறே தலையை ஆட்டிக்கொண்டிருந்தார். அதைக் கவனித்த சிறப்பு விருந்தினர் தன் உரையை நிறுத்தி அம்மாணவனை எழுப்பி தான்  கூறியவற்றை வினவினார். அம்மாணவனோ சொல்லத் தெரியாமல் விழி பிதுங்கி நின்றான். உடனே சிறப்பு விருந்தினர் காதுகள் திறந்திருந்தால் மட்டும் போதாது. உள்ளமும் திறக்க வேண்டும். அப்போதுதான் நல்லவை உள்ளே செல்லும். நல்லவை உள்ளே செல்லும் போதுதான் நல்லவை வெளியேயும் வரும் எனக் கூறினார். அம்மாணவனோ தலைகுனிந்தவாறே அமர்ந்தான்.

இந்நிகழ்வு நமக்கு மிகப்பெரும் பாடத்தைச் சுட்டிக்காட்டுகிறது. நம் உடலிலே உள்ள ஐம்புலன்களாலேயே நாம் தகவல்களைப் பெறுகிறோம். கேட்டல் திறனும் அவ்வைம்புலன்களில் மிக முக்கியமானதுதான். அதிலும் மொழிவளர்ச்சிக்கு செவித்திறன் மிக அவசியமாகிறது. கேட்கும் திறன் இல்லாத போது பேச்சுத்திறனும் வளர்ச்சிபெறுவதில்லை. ஏனெனில் காதுகளால் ஒலி அல்லது சப்தம் உள்வாங்கப்படும் போதுதான் அதேபோன்ற ஒலியை வாயும் எழுப்ப முயற்சிக்கும்.
இது அறிவியல் உண்மை. 

இன்றைய நற்செய்தியில் நாம் காணும் காது கேளாத மனிதருக்கும் இதே பிரச்சனைதான். அவரால் காது கேட்கவும் முடியவில்லை. வாய் பேசவும் இயலவில்லை. அவரை இயேசு குணப்படுத்துகிறார். எப்பாத்தா அதாவது திறந்திடு எனக் கூறுகிறார். இந்நிகழ்வை நம் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்து நம் காதுகளை மட்டும் அல்ல மனதினையும் திறந்திட வேண்டும் என்ற அழைப்பை நமக்கு வழங்குகிறார் இயேசு. 

நம்முடைய காதுகள் நல்ல நிலையில் கேட்கும் திறனுடன் இருக்கின்றதல்லவா. ஆனால் அத்திறனை நாம் எவ்வகையில் பயன்படுத்துகிறோம் என ஆய்ந்ததுண்டா? .
இறைவார்த்தைகளை, திருப்பலியில் மறையுரைகளை,மூத்தோர்களின் அறிவுரைகளை நாம் திறந்த மனநிலையோடு கேட்டிருக்கின்றோமா? பலவேளைகளில் அவற்றை " போர்" என்று சொல்லி அசட்டையாக இருந்துவிடுகிறோம் நாம். ஒருவேளை நாம் திறந்த மனநிலையோடு கூர்ந்து கவனித்தால் நிச்சயம் ஏதாவது ஒரு நல்ல சிந்தனை அதில் கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும்.

அன்புக்குரியவர்களே 
ஏனோதானோ என்றோ "waste or bore" என்ற மனநிலையிலோ  கேட்பது கேட்காமல் இருப்பதற்குச் சமம். இதையே அன்றைய காலத்தில் பழமொழியாகக் கூறுவார்கள் "செவிடன் காதில் சங்கூதுதல் " என்று. மாறாக நாம் திறந்த மனநிலையில் ஆர்வத்தோடு கேட்கும் போது நல்ல சிந்தனைகளால் நாம் பயன்பெறுவதோடு அதை பிறருக்கும் கூற இயலும். எனவே திறந்த மனநிலையோடு இறைவார்த்தையைக் கேட்போம் அதை பிறருக்கு நம் வாயாலும் வாழ்வாலும்  அறிவிப்போம். நல்ல அறிவுரைகளைக்  கேட்போம். பிறர் பயன்பெற பகிர்ந்து கொள்வோம். ஆண்டவர் இயேசு கூறிய " எப்பாத்தா "என்ற அவருடைய வார்த்தை நம் காதுகள் வழிச்சென்று நம் மனதைத் திறந்து நம் இதழ்களையும் அவருடைய வார்த்தைகளால் நிரப்பட்டும்.

 இன்று நாம் லூர்து அன்னை விழாவைக் கொண்டாடுகிறோம்.நம் அன்னை மரியா இறைவனுடைய வார்த்தைகளைத் திறந்த மனதோடு கேட்டவர். அதனால்தான் ஆண்டவரின் விருப்பத்தை அவரால் நிறைவேற்ற முடிந்தது. மேலும் கானாவூர் திருமணவிழாவில் இரசம் தீர்ந்தபோது பணியாளர்களை நோக்கி " அவர் சொல்வதைச் செய்யுங்கள் " என்று கூறி, இயேசுவின் வார்த்தைகளை திறந்த மனநிலையோடு ஏற்று அதன்படி வாழ நம்மையும் தூண்டுகிறார். நம் அன்னையின் பிள்ளைகளாய் திறந்த மனநிலையோடு இறைவார்த்தையையும் இறைவிருப்பத்தையும் கேட்டு, ஏற்றுக்கொண்டு வாழ முயற்சிப்போம்.

 இறைவேண்டல் 
அன்பு இறைவா! எம் உள்ளத்தைத் திறந்து உம் வார்த்தைகளை ஏற்கக் கூடியவர்களாகவும் அதையே பேசக்கூடியவர்களாகவும் எம்மை மாற்றும்.ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

7 + 5 =