திருத்தூதர் யோவானின் நம்பிக்கை நமக்கு ஒரு முன்னுதாரணம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


திருத்தூதரான யோவான் விழா 
I : 1யோ: 1: 1-4
II: திபா 97: 1-2. 5-6. 11-12
III : யோவா: 20: 2-8

நம்முடைய தாய் திருஅவையோடு இணைந்து இன்றைய நாளில் திருத்தூதரான யோவானின் திருவிழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றோம். இரண்டு நாட்களுக்கு முன்பாக ஆண்டவர்   இயேசுவுடைய பிறப்பு விழாவைக் கொண்டாடினோம். இன்று அவரின் அன்பு சீடரான திருத்தூதர் யோவானின் விழாவினை மிகச் சிறப்பாக கொண்டாடுகிறோம்.திருத்தூதர் யோவான் இறைநம்பிக்கை வாழ்விற்கு முன்னுதாரணமாக இருக்கின்றார். அதற்கு மிகச்சிறந்த சான்று இன்றைய நற்செய்தி.

மகதலா மரியா உயிர்த்த ஆண்டவர் இயேசுவை பற்றிய செய்தியை அறிவித்தார். அவரின் உடல் கல்லறையில் இல்லை எனவும்  அவர் அறிவித்தார்.ஆனால் சீடர்களோ அதை நம்பவில்லை. இதற்கு காரணம் பெண்களின் சாட்சியத்தை யூதர்கள் நம்பமாட்டார்கள். எனவேதான் மகதலா மரியா கல்லறையில் இயேசுவைக் காணவில்லை என்று கூறினார். உடனே பேதுருவும் இயேசுவின் அன்பு சீடர் யோவானும் கல்லறையை நோக்கி விரைந்து சென்றனர். இளமையாக இருந்த யோவான் பேதுருவை விட மிக விரைவாக ஓடினார். கல்லறையை முதலில் அடைந்தார். ஆயினும் அவர் உள்நுழையவில்லை. அச்செயல் தன்னைவிட வயதிவே மூத்தவரும் இயேசுவால் திருச்சபைக்கு தலைவராக ஏற்படுத்தப்பட்டவருமான பேதுருவின் அவருக்குள்ள மரியாதையும் இயேசுவின் மேல் அவருக்குள்ள நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது. 

இச்செய்தியை பின்வரும் வார்த்தைகள் நமக்கு வெளிப்படுத்துகின்றன.  "அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார்.  
 அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார், நம்பினார்". இந்த நிகழ்வு யோவானின் ஆழமான நம்பிக்கையை சுட்டிக்காட்டுகிறது. யோவான் கல்லறையை குனிந்து பார்த்தவுடன் துணிகளை பார்க்கிறார். அந்த நொடிப் பொழுதே அவர் இயேசு உயிர்த்தெழுந்து விட்டார் என்று நம்பினார். ஆனால் பேதுரு உள்ளே சென்று பார்த்த பிறகுதான் நம்பினார். யோவானின் நம்பிக்கை மற்ற திருத்தூதர்களை விட உயர்ந்ததாக இருந்தது. இந்த நம்பிக்கைதான் இவருக்கு இறை அனுபவத்தைத் தந்தது. இந்த இறையனுபவம் தான் நற்செய்தியை எழுதும் அளவுக்கு உந்துதலாக இருந்தது.

 இவரின் நற்செய்தியில் "நிலைவாழ்வு " என்கிற வார்த்தையை அதிகமாகக் காண்கிறோம். உண்மையான வாழ்வு என்பது பிழைப்பு நடத்துவது அல்ல ; மாறாக,  உயிரோட்டத்துடன் வாழ்ந்து காட்டுவது. இருத்தலில் நிறைவையும் முழுமையையும் காண்பது. இத்தகைய நிலைவாழ்வை  வாழ்ந்திடத் தான் யோவான் தன்னுடைய நற்செய்தியின்  வழியாக நம்மை அழைக்கிறார். அவர் சுட்டிக் காட்டிய நிலைவாழ்வை பெற்றுக்கொள்வதற்கு இறை நம்பிக்கை மிகவும் அவசியமாக இருக்கிறது. அந்த இறை நம்பிக்கையை திருத்தூதர் யோவான்  போல நாம் அனைவரும் வளர்த்துக்கொள்ள முயல வேண்டும் . யோவானை போல இறை நம்பிக்கையுள்ளவர்களாக வாழும் பொழுது நாம் வாழ்வில் கடவுளின் அன்பையும் அருளையும் நிறைவாகப் பெற்று நிலையான முடிவில்லா வாழ்வைப் பெற முடியும். எனவே யோவானை போல இறை நம்பிக்கை உள்ளவர்களாக வாழத் தேவையான  அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! திருத்தூதர் யோவானைப் போல இறைநம்பிக்கைக்கு  சான்று பகர அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

4 + 3 =