தாழ்ச்சியோடு வாழ்வதே உயர்ந்த பண்பு! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


திருக்காட்சி விழாவுக்குப் பின் சனி
I: 1 யோ: 5: 14-21
II : திபா: 149: 1-2. 3-4. 5-6, 9
III: யோவா: 3: 22-30

தாழ்ச்சி என்ற பண்பை நாம் பல தடவை சிந்தித்திருக்கின்றோம். தாழ்ச்சி என்ற உடனேயே நம் நினைவில் பலர் தோன்றுவர். உதாரணமாக இதோ ஆண்டவரின் அடிமை என்ற அன்னை மரியா, கடவுள் தன்மையை வலிந்து பற்றிக்கொள்ளாமல் மனுஉரு எடுத்த நம் ஆண்டவர் இயேசு, மெசியாவிற்கு முன்னோடியாக வந்த இன்றைய நற்செய்தியில் நாம் காணும் திருமுழுக்கு யோவான், இன்னும் பல புனிதர்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் என்றாவது அப்பட்டியலில் நமது பெயரும் இடம்பெறும்படி நாம் நடந்திருக்கிறோமா என சிந்தித்ததுண்டா?

எல்லாவற்றிலும் நான் முதன்மையாக இருக்க வேண்டுமென்பதே நம் அனைவரின் ஆசை. அதிலே தவறில்லை. அதற்காக மற்றவரை நம்மை விட குறைவாக எடைபோடுவது தான் தவறு. அவ்வாறு நாம் செய்தால் யானைக்கும் அடி சறுக்குவதைப் போல நாமும் சறுக்கி விழுவோம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. 

தாழ்ச்சியுடன் நாம் வாழ இன்று திருமுழுக்கு யோவான் நமக்கு ஒரு வழியைக் கற்றுத்தருகிறார். "அவரது செல்வாக்கு பெருக வேண்டும்.  எனது செல்வாக்கு குறைய வேண்டும் " என்ற திருமுழுக்கு யோவானின் வரிகள் நமக்கெல்லாம் தாழ்ச்சியின் உண்மைப் பொருளை விளக்குவதாய் உள்ளது. இயேசுவும் திருமுழுக்கு கொடுக்கிறார் என்ற செய்தியை யோவானின் சீடர்கள் அவருக்குக் கூறினர். யோவான் இயேசு திருமுழுக்கு கொடுப்பதை தடுக்கச் சொல்வார் என  சாதாரண மனித மனப்பாங்கில் எண்ணினர் யோவானின் சீடர்கள். ஆனால் யோவானோ இயேசுதான் மெசியா என அறிந்திருந்ததால் இயேசுவின் செல்வாக்கு உயர வேண்டும் என மொழிகிறார்.அவருடைய தாழ்ச்சி இன்றும் நம்மை அவரைப் பற்றி பேச வைக்கிறது அல்லவா. ஆம் கடவுளின் மகிமைக்காய் நாம் செய்யும் அனைத்தும் தாழ்ச்சியின் வடிவங்களே. அத்தாழ்ச்சி நம்மை நிச்சயம் உயர்த்தும்.

அன்பு சகோதர சகோதரிகளே நாம் செய்கின்ற எத்தகைய செயலையும் நமக்கு அச்செயலை செய்ய ஆற்றலையும் திறமையையும் வழங்கிய கடவுளின் மகிமைக்காக நாம் செய்ய வேண்டும். நம்மை விடப் பிறரைத் தாழ்வாக எண்ணக்  கூடாது. அவர்களின் செயல்களைக் தரக்குறைவாக விமர்சனப்படுத்தக்கூடாது.  நம்மை விட பெயர் எடுத்து விடுவார்களோ என்று பொறாமையால் அவர்களைத் தடுக்கவும் கூடாது. இவற்றை நாம் கடைபிடித்தால் தாழ்ச்சியோடு வாழ்ந்தவர்களின் பெயர்பட்டியலில் நாமும் இடம்பெறலாம். தாழ்ச்சி என்ற உயர்ப் பண்பை வாழ்வாக்க முயற்சி செய்வோமா?

இறைவேண்டல் 
இறைவா!  எம் மனதில் பிறரைப் பற்றி நாங்கள் கொண்டுள்ள தாழ்வான எண்ணங்களை மாற்றி, எத்தனை பெரிய சாதனைகளைச் செய்தாலும் அவற்றை தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு உம் மகிமைக்காய் செய்ய வரமருளும். ஆமென்.

Add new comment

16 + 3 =