தவக்காலம் - நம்பிக்கையின் காலமா! | குழந்தை இயேசு பாபு | Sunday Reflection


தவக்காலம் -நான்காம் வாரம் ஞாயிறு; I: குறி:  36:14-16,19-23; II:  திபா: 137:1-2, 3, 4-5, 6.; III: எபே:2:4-10; IV: யோ: 3:14-21

தவக்காலம் நம்பிக்கை நிறைந்த வாழ்வுக்கு வழிகாட்டுகின்றது. நம்பிக்கை இல்லையென்றால் கிறிஸ்துவ வாழ்வே கிடையாது. நம்பிக்கையில் தான் கிறிஸ்தவம் அடங்கியுள்ளது. எனவேதான் ஒரு குழந்தை திருமுழுக்கு பெறுகின்ற பொழுது நம்பிக்கை அறிக்கையை பெற்றோரும் ஞானப் பெற்றோரும்  சொல்லி தங்களுடைய நம்பிக்கை வெளிப்படுத்துகின்றனர். திருஅவையால் நமக்கு கொடுக்கப்பட்ட ஏழு அருள்சாதனங்களும் நாம் நம்பிக்கை நிறைந்த வாழ்வு வாழ நமக்கு வழிகாட்டுகின்றன. "இயேசு தூய ஆவியின் வல்லமையால் கன்னிமரியிடமிருந்து பிறந்தார். 30 ஆண்டுகள் தன்னையே ஆயத்தப்படுத்தி யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். அதன்பிறகு நாற்பது நாட்கள் அலகையால் சோதிக்கப்பட்டார். சோதனையை வென்ற பிறகு மூன்றாண்டுகள் இறையாட்சி பணியினைச் செய்தார். இந்த உலகம் மீட்புப் பெற கொடூரமான சின்னமாகக் கருதப்பட்ட சிலுவைச் சாவை ஏற்றார். இறந்த பிறகு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அவர் விண்ணகம் சென்று தந்தையின் வலப்பக்கத்தில் வீற்றிருந்து வாழ்வோருக்கும் இறந்தவருக்கும் தீர்ப்பினை வழங்க வந்திடுவார்"    போன்றவை கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை நம்பிக்கையாக இருக்கின்றது. மேற்கூறியவற்றை நாம் ஆழமாக நம்பினால் மட்டுமே நாம் கடவுளை முழுமையாக அன்பு செய்து நம்பிக்கை வாழ்வில் நிலைத்திருக்க முடியும்.   

நம்பிக்கை வாழ்வு என்பது பேரளவில்  கிறிஸ்தவராக இருப்பதல்ல; மாறாக,  உயிர்த்துடிப்புள்ள நம்பிக்கையாளராக இருப்பது. நம்முடைய நம்பிக்கை வெறும் கோட்பாடாக மட்டும் இருக்காமல்  செயலாக்கம் பெற வேண்டும். இதைத்தான் திருத்தூதர் யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் "செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம் "என கூறியுள்ளார். நம்முடைய நம்பிக்கை செயலாக்கம் பெற வேண்டும். அதிலும் குறிப்பாக நம்முடைய அன்றாட வாழ்வில் சமூகம், அரசியல், பொருளாதாரம், கல்வி, முழு மனித விடுதலைக்கான செயல்பாடுகள் போன்றவற்றில் நம்முடைய இறைநம்பிக்கை வெளிப்பட வேண்டும்.  தவக்காலத்தில் நம்முடைய நம்பிக்கை வாழ்வை இன்னும் ஆழமாக வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

கொரோனா என்ற தீநுண்மியின் தாக்கத்தின் காரணமாக உலகத்தில் வாழும் எண்ணற்ற மக்கள் கடந்த ஒரு வருடமாக பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். பல நபர்கள் தங்களுடைய உறவுகளை இழந்து, நம்பிக்கையை இழந்து தவித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களின் இயல்பான கற்றல் முறையினை இழந்து, இணையவழி வகுப்பின்  வழியாக  கல்வி கற்று வருகின்றனர். அதனால் இவர்கள் கல்வியில் இன்னும் ஆழப்பட  பற்பல வாய்ப்புகளை இழந்துள்ளனர். இதன் வழியாக நன்றாக படிக்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு பயணித்த மாணவர்களின் அறிவு மழுங்கடிக்கப்பட்டுள்ளது.  எண்ணற்ற மாணவர்கள் தங்களுடைய நம்பிக்கை இழந்து வருகின்றனர்.  சாதாரண ஏழை எளிய மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். ஆளும் அரசுகள் அதிகாரத்தை பயன்படுத்தி ஊரடங்கு என்ற பெயரில்  மக்களை ஒடுக்கி வருகின்றனர். மக்களுக்கு பெருந்தொற்று ஏற்படக்கூடாது என்று அரசுகள் நினைத்தால்,  அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி கொடுப்பது ஏன்? போன்ற சிந்தனைகளை எல்லாம் பாதிப்படைந்த மக்கள் எழுப்புகின்றனர். இவ்வாறாக மக்கள் பலதரப்பட்ட வகையில் நம்பிக்கையிழந்து துன்பப்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் இந்தத் தவக்காலம் நம்மை நம்பிக்கை நிறைந்தவர்களாக வாழ அழைப்பு விடுக்கின்றது.

இன்றைய நற்செய்தியில் "தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்."(யோவான்3:16) என்ற வார்த்தைகளை நாம் வாசிக்கிறோம். இவ்வார்த்தைகளை ஆழ்ந்து தியானித்தால் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் கடவுள் தன் மகன் வாயிலாக நிலைவாழ்வு அளிக்கக் காத்துக்கொண்டிருக்கிறார் என்ற உண்மை புலப்படுகிறது.

ஒருமுறை எனது நண்பர் அவருடைய வாழ்வில் நடந்த இச்சிறுநிகழ்வைப் பகிர்ந்து கொண்டார். அவருடன் பணிபுரியும் ஒரு ஏழைப் பெண்மணி சற்று கவலையாக  தொலைப்பேசியில் பேசிவிட்டு தன்னுடைய வேலையைத் தொடர்ந்தார். அவருடைய கணவர் இரு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு விபத்தின் காரணமாக வேலைக்குச் செல்ல இயலாத நிலையில் இருந்தார். இரு குழந்தைகளின் படிப்பு செலவு, கணவரின் மருந்து செலவுகள், வீட்டுத் தேவை அனைத்தையும் தான் வாங்கும் சிறு சம்பளத்தைக் கொண்டு சமாளிக்க மிகவும் திணறினார் அப்பெண்மணி.திடீரென அவரையே அறியாமல் அவருடைய சேமிப்பிலிருந்து ஒரு சிறு தொகையை அப்பெண்ணிடம் கொடுத்தார் என் நண்பர். கண்களில் கண்ணீருடன் "நாளை என் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்கக்கூட பணமில்லாமல் இருந்தேன். சாலையில் நடந்து வரும் போது ஆண்டவரே நீர்தான் எனக்கு வழிகாட்டவேண்டும். நான் வீட்டிற்கு செல்லும் போது ஏதாவது ஒரு வகையில் நீர் உதவ வேண்டும் என்று நம்பிக்கையோடு ஜெபித்துக்கொண்டு வந்தேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. நான் கேட்காமலேயே நீங்கள் உதவியிருக்கிறீர்கள் "எனச் சொல்லி நன்றியுடன் அத்தொகையைப் பெற்றுக்கொண்டார். அன்று அப்பெண்மணியின் நம்பிக்கை அவருக்குப் பாடமாக இருந்ததாகத் தன் பகிர்வினை நிறைவு செய்தார்.

கடவுள் மீது நம்பிக்கை கொள்பவர்கள் மட்டுமே கடவுளின் அன்பையும் அருளையும் இரக்கத்தையும் மகிழ்ச்சியையும் நிறைவாகப் பெறமுடியும். பழைய ஏற்பாட்டில் நம்பிக்கை நிறைந்த வாழ்வுக்கு பல உதாரணங்களைக் கூறலாம். குறிப்பாக நோவா நம்பிக்கை நிறைந்த வாழ்வுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். நோவாவின் காலத்தில் அவர் காலத்து மக்கள் கடவுளுக்கு எதிராக பல பாவங்கள் செய்து,  கடவுளின் அருளை இழந்தனர். எனவே கடவுள் இந்த உலகத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்த பொழுது, நோவாவின் நம்பிக்கையும் நேர்மையும் கடவுளின் பார்வையில் உயர்ந்ததாய் இருந்தது. எனவே கடவுள் நோவாவையும் அவரின் குடும்பத்தையும் காப்பாற்றினார். நம்பிக்கை நிறைந்த வாழ்வுக்கு ஆபிரகாம் மிகச் சிறந்த உதாரணம் ஆவார். ஆபிரகாமின் நம்பிக்கையின் உச்சம் தன்னுடைய ஒரே மகன் ஈசாக்கை பலியிட முன்வருவதன் வழியாக வெளிப்படுகின்றது. பல ஆண்டுகளாக காத்திருந்து, வயதான தன்னுடைய மனைவி சாராவின் வழியாகக் கொடையாகப் பெற்ற தன் மகன் ஈசாக்கை கடவுள் பலியாக கேட்டபொழுது,  ஒரு தந்தையாக துன்பப்பட்டாலும்  கடவுளின் நம்பிக்கையாளராக பலியிட முன்வந்தார். எனவே கடவுள் ஆபிரகாமையும் அவரின் வழிமரபையும்  மென்மேலும் ஆசீர்வதித்தார். இதன் வழியாக நாம் அறிந்து கொள்வது ஆழமான நம்பிக்கைதான், நமக்கு நிறைவான ஆசீர்வாதத்தை கொடுக்கும் என்பதே. ஆனால் அந்த நிறைவான ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ள, துன்பத்தின் மத்தியிலும் சோதனைகளை வென்று நம்பிக்கைக்குச் சான்று பகர வேண்டும்.  தாவீது நம்பிக்கை நிறைந்த வாழ்வுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். கோலியாத்தை எதிர்த்துப் போராட பயந்து நடுங்கிய இஸ்ரயேல் மக்கள் மத்தியில், சிறுவன் தாவீது கடவுள் மீது ஆழமான நம்பிக்கை வைத்து கடவுளின் ஆற்றலால் வலிமை வாய்ந்த கோலியாத்தை வீழ்த்தினார்.  இதைப்போல
புதிய ஏற்பாட்டிலும் நம்பிக்கை நிறைந்த வாழ்வுக்குப் பல நபர்கள் முன்னுதாரணமாக இருக்கின்றனர்.நூற்றுவர் தலைவன், பெரும்பாடு பட்டு இயேசுவின் ஆடைவிளிம்பைத் தொட்டு குணமான பெண், இயேசுவின் பெயரால் அருஞ்செயல்கள் புரிந்த திருத்தூதர்கள் என வரிசைப்படுத்திக்கொண்டே செல்லலாம். அதே வேளையில் இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளாததால் அவருடைய சொந்த ஊர் மக்களிடையே  இயேசு அருஞ்செயல்கள் புரியவில்லை எனவும் நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம்.

நம்பிக்கை கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை.
நம்பிக்கை நிறைந்த வாழ்வு மட்டுமே எத்தகைய துன்பங்களும்,இடர்களும், பெருந்தொற்றுகளும்
நம் வாழ்வில் வந்தாலும்,  அதை முறியடிக்கக் கூடிய ஆற்றலைக் கொடுக்கும்.நம்பிக்கை நமக்கு நிலைவாழ்வைக்கொடுக்கும். எனவே கடவுள் நம்மை அன்பு செய்கிறார் என உணர்ந்து, அவ்வன்பை தன் மகன் வாயிலாக நமக்கு வெளிப்படுத்தி நமக்கு நிலையான நிறைவான வாழ்வை வாக்களிக்க காத்திருக்கிறார் என நம்பி நம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம்.

இறைவேண்டல்

அன்பு இறைவா நாங்கள் உம்மேல் கொண்டுள்ள நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் ஆழப்பட அருள் தாரும். ஆமென்.

Add new comment

1 + 5 =