தலைநிமிர்ந்து கடவுளைப் புகழ்வோமா? | குழந்தைஇயேசு பாபு


இன்றைய வாசகங்கள் (26.10.2020) பொதுக்காலத்தின்  30 ஆம் திங்கள்-I: எபே:   4:32-5:8; II: திபா 1:1-2,3,4,6 ; III: லூக்:  13: 10-17

 

ஒரு ஊரில் ஏழைக்குடும்பம் ஒன்று வசித்து வந்தது. அந்தக் குடும்பத்தின் ஏழ்மை நிலைக்குக் காரணம் குடும்பத்தலைவரின் தீய நடத்தைகளே. தகாத நட்புறவுகள், குடி, சுதாட்டம் போன்ற பழக்கங்களால் தான் சம்பாதிக்கும் சிறிதளவு வருமானத்தையும் வீட்டிற்குக் கொடுக்காமல் அழித்தார் அவர். அவ்வூரில் அனைவரும் அவரைக் கண்டாலே விலகி ஓடுவர். குடும்பத்தலைவரின் இவ்வித நடத்தைகளால் குடும்பமே பெரிய அவமானத்தையும் தலைகுனிவையும் சந்தித்தது. ஒருநாள் அவருடைய மகள் தன் தோழிகளுடன் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்துகொண்டிருந்த போது தன் தந்தை குடிபோதையில் ஆடைகள் அவிழ்ந்தது கூட தெரியாத அளவிற்கு சாக்கடையில் விழுந்து கிடந்ததைக் கண்டார். அதைக்கண்ட தன்னுடைய தோழிகள் சிரித்துக் கொண்டு தன் தந்தையை மிகக் கேவலமாக பேசியதைக் கண்டு மனம் வருந்தி அழுதார். பெரிய அவமானமாய் இருந்தது. தன் தோழிகளின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அன்றிலிருந்து தன் தந்தையிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். தன் பிள்ளைகள் கூட தன்னிடம் பேச விரும்பாத அளவிற்கு தான் இருப்பதை உணர்ந்த அக்குடும்பத்தலைவர் மிகவும் மனம் வருந்தி குடிப்பழக்கத்தை விட்டு விடத் தீர்மானித்தார். மிகவும் சிரமப்பட்டார். அவருடைய மாற்றத்தை கவனித்த வீட்டிலுள்ளவர்களும் அவரை உற்சாகப்படுத்தவும் அவருக்கு உதவவும் தொடங்கினர். அக்குடும்பத்தலைவர் தன் தீய பழக்கங்களிலிருந்து முற்றிலும் திருந்தினார். நல்ல மனிதரானார். அக்குடும்பம் தலைநிமிர ஆரம்பித்தது.

இன்றைய நற்செய்தியில் தீய ஆவியால் பதினெட்டு ஆண்டுகளாக நோயுற்றிருந்த பெண் இயேசுவால் குணமடைகிறார். நோயுற்றிருந்த போது அவரால் நிமிர்ந்து இயேசுவைக் காணமுடியாத வண்ணம் கூன் விழுந்த நிலையில் இருந்ததாகவும் நலமடைந்தவுடன் நிமிர்ந்து பார்த்து கடவுளைப் புகழ்ந்ததாகவும்   கூறப்பட்டுள்ளது. இவ்வார்த்தைகள் நம்முடைய வாழ்வை அலசிப்பார்க்க நம்மை அழைக்கின்றன. 

பல சமயங்களில் நம்முடைய தீய செயல்களால் கடவுளை நிமிர்ந்து பார்க்க இயலாத நிலையில் தான் நாமிருக்கிறோம். ஒருவர் மற்றவரை அன்பு செய்யாமை,மன்னிக்க இயலாமை, சுயநலம்,பேராசை,
உலக நாட்டங்களினிடைய கடவுளை மறத்தல், போன்ற காரியங்களில் நாம் அனைவருமே ஏதாவது ஒரு வகையில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறோம் என்பதை யாராலும் மறுக்க இயலாது. இத்தகைய செயல்பாடுகள் நம் ஆன்மாவை வலுவிழக்கச்செய்து கடவுளை ஏறெடுத்துப் பார்க்க இயலாதவர்களாய் நம்மை மாற்றிவிடுகிறது.

ஆயினும் கடவுள் நம்மை குணமாக்க முன்வருகிறார். நாம் அவரை நிமிர்ந்து பார்த்து நன்றி சொல்லவும் புகழவும் நமக்கு வழிசொல்லித்தருகிறார்.இன்றைய முதல்வாசகத்தில் புனித பவுலின் வார்த்தைகள் மூலம் நாம் கடவுளின் பிள்ளைகளாக வாழவும் அவரைப்போல மாறவும் நமக்கு அறிவுறுத்துகிறார். தீய நாட்டங்களையெல்லாம் விடுத்து நன்றி சொல்லும் மக்களாக வாழ நம்மை அழைக்கிறார். தீய செயல்களால் நாம் இருளின் மக்களாய் வாழ்ந்த போதும் கடவுள் நம்மை மன்னித்து ஒளியின் மக்களாய் மாற்றியுள்ளார் என்று கூறும் புனித பவுல் இயேசு கூறிய அன்புக்கட்டளையை நமக்கு நினைவூட்டி கடவுள் கிறிஸ்து வழியாக நம்மை மன்னித்தது போல நாமும் மற்றவரை மன்னிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

எனவே அன்புக்குரியவர்களே இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் இவ்வழைப்பை உணர்ந்தவர்களாய் தீய நாட்டங்களையும் தீய ஆவி தருகிற தலைகுனிவான வாழ்வையும் விடுத்து இறைவன் தருகின்ற நலமான வாழ்வை பெற்றுக்கொள்ள நம் வாழ்வை சீரமைப்போம். தலைநிமிர்ந்து கடவுளைப் போற்றவும் ஒளியின் மக்களாய் வாழவும் அவரருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்

எங்கள் தலைவரே இறைவா உம்மைப் போல  நற்பண்புடையவர்களாய் தலைநிமிர்ந்து வாழ எம்மை நீர் அழைத்துள்ளீர். நாங்கள் எங்களைச் சூழ்ந்துள்ள தீய ஆவியீன் சூழ்ச்சிகளில் சிக்காமல் உமது வார்த்தையின் வழிகாட்டுதலின் படி வாழ்ந்து ஒளியின் மக்களாய்த் திகழ வரம் தாரும். ஆமென்.

 

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 10 =