Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தயக்கமின்றி இயேசுவை ஏற்றுக்கொள்கின்றோமா நாம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
திருவருகைக் காலம் மூன்றாம் புதன்
I : எசாயா 45: 6b-8, 18, 21b-25
II: திபா 85: 8ab-9. 10-11. 12-13
III : லூக் 7: 19-23
தயக்கம் என்ற உணர்வு பொதுவாக நம் எல்லாருக்குமே வரக்கூடியது. புதிய இடத்திற்கு செல்லும் போது தயக்கம் வரலாம். தனியாக வேலைகள் செய்து முடிக்க வேண்டிய நேரத்தில் தயக்கம் வரலாம். புதிதாக வந்த மனிதர்களிடம் பேசும் போது தயக்கம் வரலாம். தேவைக்காக பிறரை அணுகி உதவி கேட்கும் போது தயக்கம் வரலாம்.
மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் தயக்கம் வருகிறது. ஏன் நாம் மிக நெருக்கமாக உரிமையாகப் பழகும் நண்பர்களிடத்தில் கூட ஒரு சில காரியங்களைப் பற்றி மனம்திறந்து பேசுவதற்கோ, அல்லது உதவி கேட்பதற்கோ, ஏன் அன்பாய் அக்கறையாய் அறிவுரை கூறுவதற்கோ கூட நாம் தயங்குகிறோம்.
இத்தகைய தயக்கம் என்ற உணர்வு நம்மிடையே எழக் காரணம் என்னவென்று முதலில் சிந்திக்க வேண்டும்.தயக்கம், அதே பொருள் கொண்ட மற்றொரு வார்த்தை கலக்கம். இதற்கு முக்கியக் காரணம் அறியாமை. ஒருவரைப் பற்றிய சரியான தெளிவான அறிதல் இல்லையெனில் அம்மனிதரை அணுக யாராயினும் சில தயக்கங்கள் உண்டாகும்.
இரண்டாவதாக நம்பிக்கையின்மை. என்னதான் நாம் ஒருவரைப் பற்றி அறிந்திருந்தாலும் அதை நம்பாவிடில் அவரைக்குறித்த சில அச்சங்களும் தயக்கங்களும் நம்மில் நிச்சயமாக எழும். இவ்விரு பண்புகளும் பிறரை ஏற்றுக்கொள்ள நமக்கு முட்டுக்கட்டையாக அமைகிறது.
ஆம் அன்புக்குறியவர்களே தயக்கத்தை வெல்ல நமக்கு தெளிவான அறிதலும் நம்பிக்கையும் அவசியமாகிறது. இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் தன் சீடர்களை அனுப்பி இயேசுதான் மெசியாவா எனக் கண்டறிந்து வரச்சொன்னார். அப்போது அவர்களுக்கு இயேசுவின் அருஞ்செயல்கள் அடையாளங்களாய் அமைந்தன. இருந்த போதும் அவர்கள் நம்பத் தயங்கியதால் இயேசு " என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்” என்றார். அன்று யோவானின் சீடர்களுக்குக் கூறிய அதே வார்த்தைகளைத்தான் இன்று இயேசு நமக்கும் கூறுகின்றார்.
இயேசுவை நம் இறைவேண்டலிலும் வாழ்வில் நடந்த பல்வேறு நிகழ்வுகளிலும் திருவிருந்து மற்றும் இறைவார்த்தைகள் வழியாகவும் பலமுறை அறிந்து அனுபவித்த போதிலும் நம்முடைய நம்பிக்கைக் குறைவினால் அவரை நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம் அல்லவா. இன்றும் நம் நடுவில் பிற தெய்வங்களைத் தேடிச் செல்வோர் எத்தனையோ பேர் இருக்கின்றனர். துன்ப வேளைகளில் இயேசுவை ஆண்டவராக ஏற்று அவரை நம்பி அடுத்த அடி எடுத்து வைக்க நாம் தயங்கத் தானே செய்கிறோம். இத்தகைய நிலையாற இயேசுவைப்பற்றிய நம்முடைய அறிதலையும் அவர்மேல் நாம் கொண்டுள்ள நம்பிக்கையையும் இன்னும் ஆழப்படுத்த வேண்டும். அத்தகைய ஆழ்ந்த அறிவோடும் நம்பிக்கையோடும் தயக்கமின்றி இயேசுவை ஏற்றுக்கொண்டு பேறுபெற்றோராவோம்.
இறைவேண்டல்
அன்பு இயேசுவே நீரே ஆண்டவர் என தயக்கமின்றி ஏற்றுக்கொள்ள எங்களுக்கு உம்மைப் பற்றிய ஆழமான அறிவையும் நம்பிக்கையையும் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment