Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தந்தையாம் கடவுளை நம்மில் பிரதிபலிக்கிறோமா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பாஸ்கா காலம் -மூன்றாம் செவ்வாய்
திருத்தூதர்களான புனித பிலிப்பு, யாக்கோபு
I : 1 கொரி: 15: 1-8
II : தி.பா: 19: 1-2. 3-4
III : யோவான்: 14: 6-14
இன்றைய நாளில் நம் தாய்த்திருஅவையோடு இணைந்து திருத்தூதர்களான புனித பிலிப்பு மற்றும் புனித யாக்கோபுவின் விழாவினைக் கொண்டாடுகின்றோம். இந்தப் புனிதர்களின் வாழ்வு நம்மைக் கடவுளை நம் வாழ்வில் பிரதிபலிக்க வழிகாட்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த உலகத்தில் பிறந்த மனிதர்களாகிய நாம் நம்மை பலவாறு பிறர்முன் காட்டிக்கொள்ள முனைகிறோம். நம்முடைய அழகை,அறிவை,திறமைகளை, நம்முடைய அந்தஸ்த்தை, பதவியை பிறர்முன் பகிரங்கமாக வெளிப்படுத்த எண்ணுகிறோம். நம்மைப் பற்றி பலர் "நீ உன் அம்மாவைப் போல இருக்கிறாய் என்றாலோ, அல்லது உன் மகன் உன்னைப்போல இருக்கிறான் என சொன்னாலோ நாம் அடையும் ஆனந்தத்திற்கு அளவில்லை. இன்றைய காலகட்டத்தில் பல இளைஞர்கள் தங்கள் தோற்றத்தையும் திறமைகளையும் பெயர்பெற்ற நடிகர் நடிகைகள் அல்லது விளையாட்டு வீரர்களோடு ஒப்பிட்டு பாராட்டப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். ஆனால் கடவுளின் சாயலை நாம் வெளிக்காட்ட வேண்டுமென்ற ஆன்மீக தேடல் நம்மிடம் இல்லாமல் போய்விட்டதுதான் வேதனை அளிக்கிறது.இந்த மனநிலையை மாற்ற இன்று நாம் அழைக்கப்படுகிறோம்.
திருத்தூதர் பிலிப்பு இயேசுவிடம் "'ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்' என்றார். இது பிலிப்பின் ஆன்மீகத் தேடலை சுட்டிக்காட்டுகின்றது.ஆனால் இந்த தேடல் பிலிப்பின் மேலோட்டமான நம்பிக்கையையும் அனுபவத்தையும் சுட்டிக்காட்டுவதாக உள்ளது.ஏனெனில் இயேசுவில் தந்தையைக் காணும் தெளிவான கண்கள் அவரிடம் இல்லாமல் போயிற்று. ஆனால் இயேசு பிலிப்புவின் இந்தக் கேள்வியைப் புறக்கணிக்காமல் ''பிலிப்பே,... நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா?...'' (யோவான் 14:8,10) என்று பதில் கேள்வி கேட்டார்.
என்னைக் காண்பவன் தந்தையைக் காண்கிறான் என்ற வார்த்தையைக் கூறி இயேசு தன்னையும் தந்தையையும் ஒன்றாக்குகிறார். தந்தையின் சாயலை தனது ஞானத்தில் தனது அன்பில் தனது இரக்கத்தில் தனது வழிகாட்டுதலில் தனது அரவணைப்பில் இயேசு வெளிப்படுத்துகிறார் என்பதை தன் சீடர்களுக்கு உணர்த்துகிறார். இவ்வெளிப்படுத்துதலால் சீடர்களையும் அவர்கள் வாயிலாக நம்மையும் தந்தையோடு இணைந்தவர்களாய் வாழ்ந்து அவரை நம் வாழ்க்கையில் பிறருக்குக் காட்டச்சொல்கிறார். நம்முடைய ஞானம் அன்பு அரவணைப்பு வழிகாட்டுதல் இரக்கம் போன்ற நற்குணங்களின் மூலம் மற்றவருக்கு கடவுள் தன்மையை வெளிக்காட்டவே நாம் இன்று அழைக்கப்படுகிறோம்.
எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் இந்த இரு புனிதர்களைப் போல தந்தையாம் கடவுளை இயேசுவிடம் கண்டு அனுபவித்து அவரின் மதிப்பீடுகளின் படி வாழ முயற்சி செய்வதோடு இயேசுவைப்போல தந்தைக் கடவுளை நம்மில் பிரதிபலிக்க முயற்சிசெய்வோம். அப்பொழுது நாம் வாழும் வாழ்வை கிறிஸ்துவின் மனநிலையில் வாழ முடியும். . தேடல் உள்ளவர்தான் உண்மையை அறிந்து கொள்வார். கடவுளை நாம் தேடி செல்லும் பொழுது தான் கடவுள் தரும் இறை அனுபவத்தை நாம் பெற முடியும். அந்த இறை அனுபவத்தைப் பெற்றால்தான் பிறருக்கும் அதனை வழங்க முடியும். பிறருக்கு நாம் பெற்ற இறைஅனுபவத்தை நற்செய்தியாக வழங்கும் பொழுது நாம் தந்தையை உலகிற்கு காட்டுகிறோம்.தந்தை கடவுளைப் போல இயேசுவைப் போல மாறுகிறோம். தந்தையை உலகிற்கு நம்மூலம் காட்டத் தயாரா?
இறைவேண்டல்
அன்பு தெய்வமே! நீயாக நாங்கள் மாறி உம்மை எங்கள் வாழ்வின் மூலம் பிறருக்கு காட்டிட வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்,
த.சூசையப்பர்பட்டணம் பங்கு,
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment