செல்லுமிடமெல்லாம் நற்செய்தியாவோம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம் மூன்றாம் புதன்
மு.வா:தி ப :8:1-8
ப.பா :  தி பா:65:1-7
ந.வா: யோவான் 6:35-40

நான் ஒருமுறை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பரைச் சந்தித்து செபிப்பதற்காகச் சென்றிருந்தேன். சந்தித்துவிட்டு வெளியே வரும் போது பிறசபையைச் சேர்ந்த ஒரு மனிதர் அம்மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளைச் சந்தித்து ஒரு பேப்பர் கொடுத்துக் கொண்டிருந்தார். அதில் இயேசுவை நம்புங்கள் குணமடைவீர்கள் என எழுதியிருந்தது. என்னிடமும் வந்து ஒரு தாளை நீட்டினார். நான் அதை வாங்காமல் வந்துவிட்டேன். இல்லத்திற்கு திரும்பி வந்த பிறகு அந்த நிகழ்வை நான் யோசித்துப் பார்த்தேன். எனக்கு அந்நிகழ்வு ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நான் என் நண்பனைக் காணச் சென்றேன் ;வந்துவிட்டேன்; ஆனால் அங்கு இன்னும் பலரைச் சந்தித்தபோதும் நான் இயேசுவை அவர்களுக்கு வழங்கவில்லையே. நான் அதற்காகத் தானே அழைக்கப்பட்டுள்ளேன் என்ற எண்ணம் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அதிலிருந்து எப்போது எங்கு சென்றாலும் யாரைப்பார்த்தாலும் கிறிஸ்துவை அவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும் என்ற உறுதியை மனதில் ஏற்றேன். 

ஆம். அன்புக்குரியவர்களே! நற்செய்தியை அறிவிப்பது என்பது திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள தலையாய கடமையாகும். அதை நாம் செய்ய  நேரமோ, இடமோ நாம் ஒதுக்கத் தேவையில்லை. எல்லா இடங்களிலும் எல்லா நேரத்திலும் எல்லாச் சூழ்நிலையிலும் நற்செய்தி அறிவிக்கக் கூடியவர்களாக ஏன் நாமே நற்செய்தியாக விளங்க வேண்டுமென்பதே நம் ஆண்டவர் நமக்கு கொடுத்த அழைப்பு.

இன்றைய முதல் வாசகத்தில் எருசலேம் நகர கிறிஸ்தவர்கள் அனைவரும் சிதறடிக்கப்ட்டனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நம்பிக்கையாளர்கள் அனைவரும் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்தனர் என நாம் வாசிக்கிறோம். சிதறடிக்கப்பட்ட நம்பிக்கையாளர்கள் தங்கள் உடைமைகளை இழந்து தங்கள் பாதுகாப்பை இழந்து தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த வேளையிலும் கூட நற்செய்தியை அறிவித்தார்கள் என்றால் அவர்கள் கிறிஸ்துவின் மேல் எவ்வளவு ஆழமான நம்பிக்கை கொண்டிருந்திருப்பார்கள். உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள் என்ற இயேசுவின் கட்டளையை அவர்கள் மனதார ஏற்று இயேசு என்னும் நற்செய்தியை வாழ்வாக்கி அவர்களே நற்செய்தியாகத் திகழ்ந்தார்கள் எனச் சொன்னாலும் அது மிகையாகாது. 

நற்செய்தி வாசகத்தில் "தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் என்னிடம் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்."
என்று இயேசு கூறியுள்ளார். இதை சாத்தியமாக்கவே இயேசு தம் சீடர்களையும் நம்பிக்கையாளர்களையும் நற்செய்தி அறிவிப்பாளர்களாகப் பயன்படுத்தினார். நாமும் அவ்வாறே நற்செய்தியை அறிவித்து பலரை இயேசுவிடம் கொண்டுசேர்க்க பணிக்கப்பட்டுள்ளோம். நாம் ஒருநாளில் பலரைச் சந்திக்கிறோம்.பல இடங்களுக்குச் செல்கிறோம். நாம் வாழும் பகுதியில் நமக்கு இயேசுவை அறிவிக்க பல வாய்ப்புகள் உள்ளன. ஓரளவு சுதந்திரம் உள்ளது. ஊடகங்களின் உதவியும் உள்ளது.j இவற்றை பயன்படுத்தி நற்செய்தியை எந்த அளவுக்கு அறிவிக்கிறோம் என சிந்தித்துப்பார்ப்போம். இதுவரை அறிவிக்காவிடில் இனி முயற்சி செய்வோம். இனிவரும் காலங்களில்  நமக்கு நற்செய்தி அறிவிக்க பல தடைகள் ஏற்படலாம். நாம் சிதறடிக்கப்படலாம். அந்த நிலையிலும் கூட நமது நம்பிக்கையை நாம் இழந்துவிடாமல் நற்செய்தியாக வாழ முயலவேண்டும். ஒருவர் மற்றவருடைய நம்பிக்கையை ஆழப்படுத்தவும் இயேசுவை செல்லுமிடமெல்லாம் வழங்கும் நற்செய்தியாக நாம் வாழவும் இயேசுவின் துணையை நாம் நாடுவோம்.

 இறைவேண்டல் 
உலகிற்கெல்லாம் மாபெரும் நற்செய்தியான இயேசுவே! செல்லுமிடமெல்லாம் உம்மைப் பிறருக்கு வழங்கும் நற்செய்தியாக நாங்கள் வாழ அருள்புரியும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

3 + 2 =