செபம் நம் வாழ்வின் அடித்தளமா? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


தவக்காலம் -முதல் செவ்வாய் 
I: எசா:   55: 10-11
II:  தி.பா: 34: 3-4. 5-6. 15-16. 17-18
III: மத்: 6: 7-15

சிவகங்கை மறைமாவட்டத்தில் அமைதியகம் என்ற தியான மையம் தேவகோட்டைக்கு அருகில் இருக்கின்றது. அங்கு வயதான அருட்சகோதரி ஒருவர் இருந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் விண்ணக பிறப்பு அடைந்துள்ளார். அவர் வாழ்வு செப வாழ்வுக்கும் புனிதத்துவ வாழ்வுக்கும் ஓர் முன்னுதாரணம். தன் வாழ்நாள் முழுவதும் அவர்  செபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். உண்ணா நோன்பிருந்து இறை ஆற்றலோடு வாழ்ந்தார். கிட்டத்தட்ட முப்பது  ஆண்டுகளுக்கு மேலாக திட உணவை உண்ணாமல் திரவ உணவை மட்டும் உண்டு தன் வாழ்வில் ஒறுத்தல் செய்தவர். அப்படிப்பட்ட புனிதம் நிறைந்த அருட்சகோதரியை ஒருமுறை சந்திக்க நான் கல்லூரி படிக்கும் பொழுது வாய்ப்பு கிடைத்தது.அவரிடம் பேசிய பொழுது" செபம் தான் நம் வாழ்வின் அடித்தளம். நான் உண்ணும் உணவு  எனக்கு வலிமை கொடுப்பதைவிட செபம்  தான் என் உடலுக்கும் உள்ளத்திற்கும் வலிமை கொடுக்கின்றது. இந்த வலிமையால் தான் உண்ணா நோன்பிருந்து என்னால் இறைவனின் கருவியாக வாழ முடிகின்றது " என்று கூறினார். 

இந்த உண்மை நிகழ்வு நம் வாழ்வின் அடித்தளமாக இருக்கக்கூடிய செபத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க நமக்கு அழைப்பு விடுக்கின்றது.  ஒரு வீடு நிலையானதாக இருக்க அதன் அடித்தளம் மிகவும்  அவசியம். அடித்தளம் சரியாக இல்லாத மணல் மீது வீடு கட்டினால்,  பெரும் காற்றும் மழையும் வரும்பொழுது அது இடிய கூடும். வீட்டின் அடித்தளம் பாறையின் மேல் அமைக்கப்பட்டால், எந்த  இயற்கை சீற்றங்களும் வீட்டை   அழிக்க முடியாது. இத்தகைய அடித்தளம் தான் நாம் வாழ்வின் முழுமைக்கு அடிப்படை. செபம் நம் வாழ்வின் அடித்தளமாக இருக்கும் பொழுது வாழ்க்கையில் சாதனைகள் பல புரிய முடியும்.  இதற்கு மிகச்சிறந்த உதாரணம் தான் நான் மேற்கூறிய உண்மை நிகழ்வு.

இயேசு செப வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.  கடவுளுடைய மகனாக இருந்த போதிலும் செபத்தின் வழியாகத்தான் தந்தையின் திருவுளத்தை முழுமையாக அறிந்து,   இம்மண்ணுலகில் மீட்பினை கொடூரமான சிலுவைச் சாவின் வழியாகக் கொடுத்தார்.  மனித இயல்போடு வாழ்ந்த இயேசுவுக்கு சிலுவைச் சாவு என்பது கொடூரமான துன்பம் தரக்கூடியது.  இருந்தபோதிலும் செபத்தின் வழியாக தந்தையின் வலிமையைப் பெற்று மீட்பை இவ்வுலகிற்கு கொடுத்துள்ளார்.  இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம்முடைய செபம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்  என்பதை இயேசு தெளிவுபடுத்தியுள்ளார்.

''இயேசு, 'நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்; 
மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் 
கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்' என்றார்'' (மத்தேயு 6:7). இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் புறவினத்தார் மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே செல்வது தான் உண்மையான செபம் என்று கருதினர். அதைக் கண்ட யூதர்களும் மக்கள் பார்க்கும்படி மிகுதியானச் சொற்களைக் கொண்டு செபித்தனர். இத்தகைய செபம் முறையான ஒன்றல்ல என்று இயேசு சுட்டிக்காட்டியுள்ளார். ஏனெனில் நாம் செபிப்பதற்கு முன்பாகவே   தந்தையாம் கடவுள் அனைத்தையும் அறிந்துள்ளார் என்பதையும் இயேசு  சுட்டிக்காட்டியுள்ளார். இது எதை சுட்டிக்காட்டுகின்றது என்றால் இயேசுவைப் போல நாமும் அமைதியில் இறை தந்தையோடு உறவாட வேண்டும். இறைத் தந்தையோடு உறவாடி அவரின் திருவுளத்தை அறிந்து நாம் பணி செய்யக் கடமைப்பட்டுள்ளோம். அவ்வாறு கடவுளின் திருவுளத்தை அறிந்து பணி செய்கின்ற பொழுது நம் வாழ்வுக்கு தேவையான அனைத்தையுமே  கடவுள் நிச்சயமாகக் கொடுப்பார். 

இயேசு கற்றுத் தந்த இறைவேண்டலில் மூன்று முக்கியமான சிந்தனைகளைக் கொடுத்துள்ளார். முதலாவதாக செபத்தின் தொடக்கத்தில் `விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக!' என்று பார்க்கிறோம். செபம் என்பது நமது வேண்டுதல்களை கேட்பது மட்டுமல்ல ; தந்தையாம் கடவுளை புகழ்வதும் கூட செபம் தான். இறைத் தந்தையின் திருப்பெயர் நமக்கு வாழ்வையும் புது மாற்றத்தையும் அருளையும் தருகின்றது. அந்தப் பெயரை ஒவ்வொரு நாளும் புகழ்கின்ற பொழுது, நம் வாழ்வு உயரும். எனவேதான் திருவழிபாட்டின் உச்சமாக கருதப்படுகின்ற திருப்பலியும் திருப்புகழ் மாலையும் இறைபுகழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. எனவே இன்றைய நாளில் கடவுளை ஒவ்வொரு நாளும்  எல்லா நேரமும் புகழ்ந்து,  அவரின் வழிநடக்க அழைக்கப்பட்டுள்ளோம்.

இரண்டாவதாக இயேசு தான் கற்றுக் கொடுத்த இறைவேண்டலில் 'உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்' என்று செபிக்க அழைப்பு விடுக்கிறார்.  நம் வாழ்வின் அடித்தளமாக இருக்கக்கூடிய செபமானது இறை திருவுளத்தை அறியும் மிகப்பெரிய கருவியாகும். இறை திருவுளத்தை அறிந்து நம் வாழ்விலே பயணிக்கின்ற பொழுது,  நம் வாழ்வில் கடவுளின் அருளையும் ஆசீரையும் வழிகாட்டுதலையும் அனுபவிக்க முடியும். ஆண்டவர் இயேசு செபத்தின் வழியாகத்தான் இறை திருவுளத்தை அறிந்து இந்த உலகத்திற்கு மீட்பினை வழங்கினார்.

மூன்றாவதாக இயேசு கற்றுத் தந்த இறைவேண்டல் ' எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும்' என்று பிறரை மன்னிக்க அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்தவ வாழ்வின் உண்மையான இயல்பு என்பது நமக்கு எதிராக தவறு செய்பவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை ஆகும். நமக்கு துன்பம் வரவைப்பவர்களுக்கும் நாம் செபிக்கும் பொழுது, நாம் கடவுளின் இறையாட்சி மதிப்பீட்டிற்குச் சான்று பகர முடியும்.  மன்னித்தல் என்பது பிறருக்கு மன்னிப்பு தேவைப்படுகிறது என்பதற்காக அல்ல ; மாறாக,  நாம் மன அமைதியை பெற வேண்டும் என்பதற்காக. மன்னித்தல்தான்  நமக்கு முழுமையான மன அமைதியைக் கொடுக்கும். எனவே மன்னித்தல் என்ற பண்பை வாழ்வாக்க இறைவேண்டலின் வழியாக இயேசு அழைப்பு விடுக்கிறார்.

இவ்வாறாக இயேசு கற்றுத் தந்த இறைவேண்டல் நமக்கு கிறிஸ்தவ வாழ்வியல் மதிப்பீட்டை சுட்டிக்காட்டுகின்றது. எனவே ஒவ்வொரு நாளும் செபத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம். வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே செபத்தை வெளிவேடத்தோடு செய்யாமல்,  மறைவாயுள்ள விண்ணகத் தந்தையை நோக்கி இறைவேண்டல்  செய்ய நாம் அழைக்கப்பட்டுள்ளோம். ஒவ்வொரு நாளும் தந்தையாம் கடவுளைப் புகழ்ந்து அவரது திருவுளத்தை நிறைவேற்றி பிறரை மன்னித்து உண்மையான கிறிஸ்தவ வாழ்வை வாழ்ந்திடத் தேவையான அருளையும் ஞானத்தையும் வேண்டுவோம்.

இறைவேண்டல் :

வல்லமையுள்ள இறைவா!  நாங்கள் எந்நாளும் உம்மைப் போற்றவும் உம்முடைய திருவுளத்தை அறிந்து செயல்படவும் பிறரை மன்னித்து ஏற்றுக் கொள்ளவும் வேண்டிய அருளைத் தாரும். ஆமென்.

Add new comment

4 + 1 =