செக்கரியாவின் புகழ்ச்சி பாடல் | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


திருவருகைக் காலம் நான்காம் வெள்ளி
I : 2 சாமு:  7: 1-5,8-12,16
II: திபா: 89: 1-2. 3-4. 26,28
III : லூக்: 1: 67-79

இன்றைய நாளில் நற்செய்தியின் வழியாக செக்கரியாவின் புகழ்ச்சி பாடலைப் பற்றி வாசிக்கிறோம். கடவுள் செக்கரியாவுக்கு செய்த நன்மைகளை பார்த்து புகழ் பாடுகிறார். இந்த புகழ்ச்சிப் பாடலை தாய்த்திரு அவையானது ஒவ்வொருநாள் செபிக்கின்ற திருப்புகழ்மாலை காலை செபத்தில் பாடி செபிக்க அழைப்பு விடுக்கின்றது. இந்த புகழ்ச்சிப் பாடல் திருமுழுக்கு யோவானை கிறிஸ்துவின் முன்னோடியாக சுட்டிக்காட்டுகிறது. கிறிஸ்து விண்ணினின்று  நம்மைத் தேடி வந்த விடியல் என்ற கருத்தையும் சுட்டிக்காட்டுகிறது. மேலும் கிறிஸ்து வழி இறைவன் நம்மிடையே உலவுகிறார் என்ற கருத்தையும் சுட்டிக்காட்டு விதமாக இருக்கின்றது. ஆக இந்த புகழ்ச்சி பாடல் செக்கரியாவின் நன்றியை வெளிப்படுத்தும் விதமாகவும் நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்கின்றன.

செக்கரியா  தான் பெற்றுக்கொண்ட நன்மைகளை நினைத்துப் பார்த்து நன்றி கூறியுள்ளார்.  அவருக்குக் குழந்தை பாக்கியம் இல்லை என்பது ஒரு மிகுந்த வருத்தமான ஒன்றாக இருந்தது. ஆனால் கடவுள் செக்கரியாவின் மீதும் எலிசபெத்தம்மாள் மீதும் தன்னுடைய  இரக்கத்தை நிறைவாகப் பொழிந்து  திருமுழுக்கு யோவானை கொடையாக இவர்களுக்கு  கொடுத்தார்.

எனவே கடவுளுக்கு தனது நன்றியை வெளிப்படுத்தும் விதமாக தன்னுடைய புகழ்ச்சி பாடலை  சமர்பித்தார். அதிலும் திருமுழுக்கு யோவானின் தந்தை செக்கரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரத்த குரலில் இறைவாக்குரைத்து  தனது புகழ்ச்சியையும் நன்றியையும் நம்பிக்கையும் வெளிப்படுத்தினார்.

தொடக்கத்தில் கடவுளைப் போற்றி புகழ்ந்து கடவுள் மனுவுரு எடுத்து மக்களை தேடி வந்து மீட்க வந்ததை தன்னுடைய  பாடலில் வெளிப்படுத்தியுள்ளார். ஆண்டவர் இயேசு நமக்காக நம்முடைய அகப்புற விடுதலைக்காக ஒரு மனிதனாக பிறந்து நம்மை மீட்க வந்துள்ளார் என்ற ஆழமான சிந்தனையை இப்பாடல் வழியாக வெளிப்படுத்தியுள்ளார். இறைவாக்கினர் வழியாகக் கடவுள் கொடுத்த வாக்குறுதியை ஆண்டவர் இயேசு இம்மண்ணுலகத்தில் பிறந்ததன் வழியாக வெளிப்படுத்தியுள்ளார். நம்முடைய பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போரிடமிருந்தும் மீட்பவராக கடவுள் இருக்கிறார் என்பதை இப்பாடல் வழியாக கடவுள் வெளிப்படுத்தியுள்ளார்.

கடவுள் மூதாதையரான இஸ்ராயேல் சமூகத்திற்கு இரக்கம் காட்டியது பற்றியும் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குறுதியை ஆண்டவர் இயேசுவின் பிறப்பின் வழியாக வெளிப்படுத்தியுள்ள மேன்மையான செயலை இந்தப் பாடலின் வழியாக வெளிப்படுத்தியுள்ளார். இருளின் பிடியில் இருப்பவருக்கு  ஒளி நிறைந்த வாழ்வை கொடுப்பவராக கடவுள் இருக்கிறார் என்ற சிந்தனையையும் இப்பாடலில் சுட்டிக்காட்டியுள்ளார். கடவுளுடைய நம்முடைய கால்களை அமைதி வழி நடக்கச் செய்து விடியலைக் கொடுப்பவராக நம்மைத் தேடி வந்திருக்கிறார்  என்ற கருத்தைஇப்பாடலில் அறிய வருகிறோம். இறுதியாக இந்த பாடலில் கடவுள் நம்பிக்கைக்குரியவர் நன்மைக்குரியவர் என்ற ஆழமான சிந்தனையை அறிந்து கொள்ளும் வகையில் இருக்கின்றது.

இந்தப் பாடல் நமக்கு நம்பிக்கையும் கடவுள் நம்மைத் தேடி வந்த நோக்கத்தைப் பற்றியும் அவர் தருகின்ற ஆசீர்வாதங்களைப் பற்றியும் அறிந்துகொள்ள வழிகாட்டுகிறது. எனவே செக்கரியா கடவுளிடமிருந்து பெற்ற நன்மைகளுக்கு நன்றி கூறி நம்பிக்கைக்குரியவராக வாழ்ந்ததைப் போல, நம்முடைய அன்றாட வாழ்விலும் கடவுள் அளப்பரிய நன்மைகளை செய்து வருகிறார். நாம் அவருக்கு நம்பிக்கைக்குரியவராக வாழ்கிறோமா?  என சிந்தித்துப் பார்க்க அழைக்கப்பட்டுள்ளோம். எனவே செக்கரியாவைப் போல   பெற்ற நன்மைகளுக்கு நன்றி செலுத்துபவர்களாகவும் கடவுளின் அளப்பரிய நன்மைகளை நினைத்து பார்ப்பவர்களாகவும் எந்நாளும் கடவுளைப் போற்றிப்  புகழ்பவர்களாகவும் வாழ்ந்திட அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல்

வல்லமையுள்ள இறைவா!  எங்களுடைய கிறிஸ்தவ வாழ்விலே செக்கரியாவைப் போல எந்நாளும் இறைநம்பிக்கைக்கு சான்று பகர்ந்து, பெற்ற நன்மைகளுக்காகக் கடவுளைப் போற்றிப் புகழ தூய உள்ளத்தையும் நல்ல மனதையும் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

8 + 3 =