Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
சவால்களை முறியடித்த இயேசு! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
ஆண்டின் பொதுக்காலத்தின் நான்காம் திங்கள்
I: 2 சாமு: 15: 13-14, 30;16: 5-13
II : திபா 3: 1-2. 3-4. 5-7
III: மாற்: 5: 1-20
இந்த உலகத்தில் சவால்களே வேண்டாம் என்று விரும்பிய இளைஞர் ஒருவர் துறவு மடத்திற்குச் சென்றார். அங்கு பற்பல சவால்கள் இருந்தன. எனவே துறவு மடத்தை விட்டு விட்டு வெளியே வந்து திருமணம் செய்தார். அங்கும் பல சவால்களைச் சந்தித்தார். எனவே மீண்டும் ஆலோசனை கேட்பதற்காக ஒரு துறவு மடத்தில் முனிவரிடம் "சவால்களே இல்லாத வாழ்க்கையை வாழ்வது எப்படி? " என்று கேட்டார். அதற்கு அந்த முனிவர் " சவால்களே இல்லாத வாழ்க்கை வேண்டுமென்றால், நீ இறந்து விடு " என்று கூறினார்.
நம்முடைய வாழ்வு என்பது சவால்களால் பின்னிப்பிணைந்து. எத்தகைய சூழல் வந்தாலும் துணிச்சலோடு அனைத்தையும் எதிர்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். இதைத்தான் நம்முடைய முன்மாதிரி ஆண்டவர் இயேசு நமக்கு கற்றுக் கொடுக்கிறார். அவர் வாழ்ந்த முப்பத்தி மூன்று ஆண்டுகளும் பற்பல சவால்களை சந்தித்தார். பற்பல வடிவங்களில் சவால்களைச் சந்தித்தார். அவற்றில் சிலவற்றை இப்போது காண்போம்.
இயேசு பணிவாழ்வுக்காகத் தன்னை தயாரித்த போது பிறகு அலகையின் சோதனை என்ற சவால் அவவரைத் தேடி வந்தது.மூன்று முறை இயேசு அலகையால் சோதிக்கப்பட்டார். ஆனால் அவற்றை முறியடித்து வெற்றிகொண்டார்.
இரண்டாவதாக இயேசு ஆதிக்க வர்க்கத்தினர் வழியாக பற்பல சவால்களை எதிர்கொண்டார். அதிலும் குறிப்பாக பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள், சதுசேயர்கள் போன்றவர்களால் பற்பல சவால்களை சந்தித்தார்.அவர் என்ன செய்தாலும் குறைகூறிய அவர்களுக்குப் பதிலடி கொடுப்பது இயேசுவுக்கு சவாலாகவே இருந்தது. உச்சகட்டமாக தன் உயிரையே சிலுவையில் இழக்கும் அளவுக்கு சவால்களை எதிர்கொண்டார்.
மூன்றாவதாக இயேசு தன் பணி வாழ்வின் போது இயற்கையின் வழியாக சவால்களை எதிர்கொண்டார். பயணம் செய்த பொழுது கடலில் புயலும் காற்றும் சவாலாக இருந்தது. அவற்றையெல்லாம் துணிச்சலோடு எதிர்கொண்டு இலக்கு நோக்கிப் பயணமானார்.
நான்காவதாக சவால்களை எதிர்கொண்டவர்களுக்கு உதவி செய்தார்.சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள், பாவிகள், நோயாளிகள் என வாழ்க்கையே சவாலாக சமாளிக்கத் திணறியவர்களுக்கு இயேசு உதவினார். அதுவும் அவருக்கு சவால்தான். அவ்வரிசையில் இன்றைய நற்செய்தியில்
தீயசக்தி பிடித்திருந்த கெரசேனர் பகுதி இளைஞரின் தீய ஆவியை ஓட்டி நலமாக்கினார் இயேசு. தீய ஆவியின் பிடியில் சிக்கி கல்லறைகளில் வாழ்ந்து வந்த அந்த மனிதர் தன் வாழ்வில் எத்தனை சவால்களைச் சந்தித்திருப்பார். குடும்பத்தை விட்டு கல்லறைகளில் வாழ்ந்தார். நிச்சயம் அவரைக் கண்டு பொதுமக்கள் பயந்து விலகி வாழ்ந்திருக்கக் கூடும். அத்தீய ஆவியின் கொடுமையால் அம்மனிதரும் அவரைச் சுற்றி வாழும் மற்றவர்களும் பெருமளவு துன்புற்றிருப்பார்கள்.அம்மனிதரின் வாழ்க்கைப் போராட்டத்தை இயேசு வெற்றியாக மாற்றினார்.
இவ்வாறாக இயேசுவின் பணி வாழ்வில் வந்த சவால்கள் ஏராளம். ஆனால் அவற்றையெல்லாம் துணிச்சலோடு எதிர்கொண்டு அவர் கண்ட இறையாட்சி கனவை இந்த மண்ணில் நனவாக்கினார். சவால்களைக் கண்டு அஞ்சுவது அல்ல நம் வாழ்வு; மாறாக, துணிச்சலோடு அதை வெற்றி கொள்வது தான் சிறந்த வாழ்வு. அதைத்தான் நம் முன் மாதிரி ஆண்டவர் இயேசு செய்து காட்டினார். எனவே பற்பல சவால்களால் நாம் வாழும் இந்த உலகத்தில் எத்தனையோ நபர்கள் துன்பப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு நாம் நம்பிக்கை கொடுப்பவர்களாக ஆண்டவர் இயேசுவை போல செயல்படுவோம். மேலும் நம்முடைய சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய ஞானத்தையும் முன் மதியையும் நம் இறைவனிடம் வேண்டுவோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! சவால்களைக் கண்டு துவண்டுவிடாமல், துணிச்சலுடன் எதிர்கொள்ளும் ஆற்றலையும் வல்லமையையும் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment