சந்தேக ‘தோமா’ அல்ல, நம் அனைவரின் சந்தேகம் ‘தீர்த்த’ தோமா | Fr. Rojar | Sunday Reflection | Divine Mercy Sunday


இறைஇரக்கத்தின்ஞாயிறு | திருத்தூதர்பணி 4:32-35, திருப்பாடல் 117, 1யோவான் 5:1-6 யோவான் 20:19-31

இயேசுவின்திருத்தூதர்களுள்ஒருவரானதிதிம்என்னும்தோமா, ‘சந்தேகத்தோமா’ என்றுபொதுவாகஅறியப்படுகிறார். உண்மையில்அவர் “சந்தேகதோமாவா?” (Was he REALLY a Doubting Thomas?). திருத்தூதர்களுள் ‘தோமா’ மட்டுந்தான், இயேசுவின் உயிர்ப்பைச் சந்தேகித்தவரா? மற்ற சீடர்கள் அனைவரும், இயேசுவைக் ‘காணாமலேயே விசுவசித்த” பேறுபெற்றவர்களா?கிறிஸ்தவ ‘விசுவாச’ வாழ்க்கையில், ‘சந்தேகமில்லாத’ அப்பழுக்கற்ற இறைநம்பிக்கை தான் ‘விசுவாசமா?’ அது சாத்தியமா?கடவுளைப் பற்றிய சந்தேகம் என்பது ‘மனித வாழ்க்கையில்’ எழக்கூடாத ஒன்றா? அப்படியே யாராவது எழுப்பினாலும், அது காலமெல்லாம் களங்கப்படுகிற அளவுக்கு, ‘பழியைச் சுமக்கிற  அளவுக்கு’ விகாரமானதா? சந்தேகப்படாமல் ஒருவர் ஆன்மீக வாழ்க்கையில் ‘உண்மையைக்’ கண்டுபிடிக்க முடியுமா?

‘வாருங்கள், நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்’ என்று சாகிற அளவுக்குத் துணிந்த தோமா, விசுவாச வாழ்வில் ‘சறுக்கக்கூடியவராக’ இருந்திருக்க முடியுமா? “இயேசுவின் உயிர்ப்பை” அவர் சந்தேகித்திருப்பார் என்பது அவருடைய ‘ஆளுமைக்கு’ பொருந்திப் போகிற வார்த்தைகளாக இருக்கிறதா? அப்படியே அவருடைய வார்த்தைகளை “சந்தேக” வார்த்தைகளாக எடுத்துக்கொண்டாலும், அவருடைய ‘சந்தேகம்’ உயிர்ப்பைப் பற்றியதாகத்தான் இருந்திருக்க வேண்டுமா? உண்மையில், இயேசு சொல்கிற ‘காணாமலேயே நம்புவோர் பேறுபெற்றோர்” யார்? ‘கண்டதால் நம்புகிறவர்கள் யார்?” – இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடுவோம்.

தோமா மட்டுந்தான் ‘உயிர்ப்பில்’ நம்பிக்கையற்றவரா?

நற்செய்தி நூல்களில் முதலாவதாக எழுதப்பட்ட மாற்கு நற்செய்தியில், உயிர்த்த இயேசு முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றுகிறார். அதனைச் சீடர்களுக்கு அறிவிக்கிறார். (மாற்கு 16: 9). ஆனால், “இயேசு உயிரோடு இருக்கிறார் என்றும், மரியா அவரைக் ‘கண்டார்’ என்று ‘கேட்டபோதும்’சீடர்கள் நம்பவில்லை (16:11). அதன் பிறகு, “அவர்களுள் இருவர் வயல்வெளிக்குச் சென்றபோது, இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார். அது சீடர்களுக்கு அறிவிக்கப்பட்டபோதும், அவர்கள் நம்பவில்லை” (16: 12-13). இறுதியாக, “பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபோது, அவர்களுக்கு இயேசு தோன்றினார். உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதை நம்பாமல் அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால்,அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார்” (16: 14). இங்கே இரண்டு முக்கியமான குறிப்புக்களை நாம் பார்க்கலாம். முதலாவது, ‘பதினோரு பேருமே’ உயிர்ப்புச் செய்தியைக் “கேட்டு” நம்பவில்லை, பார்த்த பிறகே நம்புகிறார்கள். இங்கு, “சந்தேகம்” என்னும் அடைமொழி தோமாவுக்கு மட்டுமல்ல, “அத்தனை சீடர்களுக்கும்” பொருந்துகிறது என்பது தெள்ளத்தெளிவு.

அதுமட்டுமல்ல, மாற்கு நற்செய்திப்பகுதியில், இயேசு அத்தனை பேரையும் “நம்பிக்கையின்மைக்காகக் கண்டித்தார்” என்றும் வாசிக்கிறோம். ஆனால், யோவான் நற்செய்தியில், தோமா ‘இயேசு சீடர்களுக்குத் தோன்றினார்’ எனபதை நம்பாதபோது, இயேசு அவருடைய ‘நம்பிக்கையின்மையைப்’ பற்றி எதுவுமே கூறவில்லை. மாறாக, ‘கண்ணால் கண்டதால் நம்பினாய், காணாமலேயே நம்புவோர் பேறுபெற்றோர்’ என்றே சொல்கிறார். ஆக, இயேசுவின் வார்த்தைகள் ‘நம்பிக்கை என்றால் என்ன?’ என்பதற்கான விளக்கமாக இருக்கிறதே தவிர, மாற்கு நற்செய்தியில் சீடர்களுக்கான “கண்டிப்பைப்” போல,தோமாவின் “நம்பிக்கையின்மையைப்” பற்றி, எதுவுமே அவர் சொல்லவில்லை. இங்கும், “சந்தேக தோமா” என்கிற வாதத்திற்கு இடமில்லாமல் போகிறது.

மேலும், உயிர்ப்பு நிகழ்ச்சியைப் பற்றிய யோவான் நற்செய்தியிலும், ஆண்டவரின் கல்லறைக்குச் சென்ற பெண்கள், அங்கே இயேசுவின் உடலைக் காணவில்லை என்று சொன்ன போது, பேதுருவும், யோவானும் “நம்பவில்லை”, அவர்கள் கல்லறைக்கு விரைந்து ஓடுகிறார்கள், துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் இயேசுவின் உடலை ‘காணவில்லை’ என்று ‘கண்ட’ பிறகே நம்புகிறார்கள்(யோவான் 20: 1-8). நம்பியவர்கள் எங்கே சென்றார்கள்? மீண்டும் யூதர்களுக்குப் பயந்து போய், அதே மாடி அறையில் ஒளிந்து கொண்டார்கள். ஆக, “கேட்ட” பிறகும் நம்பிக்கையில்லாமல் “பார்த்த பிறகே”, நம்பினார்கள்,ஆனால்,“சில மணிநேரங்களுக்கெல்லாம்”“பார்த்த” நம்பிக்கையும் பறந்து போய், “நம்பிக்கையில்லாதவர்களாக” தங்கள் உள்ளத்தைக் “கடினப்படுத்திக்” கொள்கிறார்கள் என்பதை இந்த நிகழ்ச்சி காட்டுகிறது.

சுருங்கக்கூறின், இயேசுவோடு மூன்று ஆண்டுகள் வாழ்ந்த, இயேசு செய்த அத்தனை புதுமைகளையும் கண்ணால் “பார்த்த”, இயேசுவின் அத்தனை வார்த்தைகளையும் காதால் “கேட்ட”, புரிந்து கொள்ள முடியாத அத்தனை உவமைகளுக்கான விளக்கங்களையும் இயேசுவாலேயே கொடுக்கப்பட்டு “அறிந்து” கொள்ளும் பாக்கியம் பெற்ற அத்தனை சீடர்களும் ‘நம்பிக்கை இல்லாமல்’ தான் இருந்திருக்கிறார்கள்.எனவே, இயேசுவை விட்டு, 2000 ஆண்டுகள் பின்தங்கியிருக்கிற நமக்கு, “நம்பிக்கையின்மை” ஏற்படுவது என்பது பெருங்குற்றம் அல்ல, அது மாபெரும் பாவமுமல்ல. அது ‘ஏற்றுக்கொள்ளக்கூடியதும், புரிந்து கொள்ளக்கூடியதுமான’ ஒன்றாகும்.‘விசுவாசத் தளர்ச்சி’ என்பது எவருக்கும் வரக்கூடியது தான்.அது “குற்றமே” அல்ல. எனவே, ‘இயேசுவை விசுவசிக்கவில்லை என்றால்’ உனக்கு “மீட்பே” கிடையாது என்று சொல்லப்படுகிற வார்த்தைகள் அத்தனையும், “முட்டாள்தனமான,”“மூடநம்பிக்கையான”“காட்டுமிராண்டித்தனமான”வார்த்தைகளாகத்தான் இருக்க முடியுமே தவிர, “அன்பே உருவான” இயேசுவின் வார்த்தைகளாக “இன்றைக்கு”மட்டுமல்ல, “என்றைக்குமே”இருக்க முடியாது.

தோமா ஏன் “உயிர்ப்புச் செய்தியை” நம்பவில்லை?

தோமா இயேசுவோடு இருந்தபோது, “ஒருமுறை” கூட, பேதுருவைப் போல நம்பிக்கையற்றவராக ‘குறிப்பிட்டுச்’ சொல்லப்படவில்லை. மாறாக, இயேசுவின் மீது மாறாத பற்றும், அன்பும், தன் உயிரையும் விட ‘துணிந்தவராகவே’ நற்செய்தியில் சித்தரிக்கப்படுகிறார். முதலாவதாக, யோவான் நற்செய்தியில், இயேசு தன்னுடைய சீடர்களிடம்,“வாருங்கள், யூதேயாவுக்குப் போவோம். இலாசர் நோயுற்றிருக்கிறான்”என்றபோது, மற்ற சீடர்கள், “ஆண்டவரே! இப்போது தானே அங்கே யூதர்கள் கல்லெறிந்து கொல்ல முயன்றார்கள். அதற்குள்ளாக மீண்டும் அங்கே செல்ல வேண்டும் என்று சொல்கிறீர்களே?” என்றபோது, திதிம் என்னும் தோமா தம் உடன் சீடரிடம், “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்”என்று சொல்கிறார் (யோவான் 11: 16). மற்றச் சீடர்கள் தயங்கியபோது, இயேசுவோடு இணைந்து, இயேசுவுக்காக ‘உயிரையும்’ விட துணிந்து முன்வந்தவர் தோமா. அவருக்கு ‘சந்தேகம்’ நிச்சயம் பொருந்திப்போகாது ஒன்றாகத் தானே இருக்க முடியும்?

இரண்டாவதாக, யோவான் 20: 24 “பன்னிருவருள் ஒருவரான திதிம் என்கிற தோமா, இயேசு சீடர்களுக்குத் தோன்றியபோது, அவர்களோடு இல்லை” என்று வாசிக்கிறோம். அவரோடு இல்லை என்றால், தோமா எங்கே போயிருந்தார்? மற்ற சீடர்கள் அங்கே அந்த அறையில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? முதல் கேள்விக்கு பதில் நற்செய்தியில் சொல்லப்படவில்லை என்றாலும், இரண்டாம் கேள்விக்குப் பதில் சொல்லப்பட்டிருக்கிறது. “யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள்” (யோவான் 20: 19). அத்தனை சீடர்களும் “வெளியே” செல்வதற்குப் பயந்து “பதுங்கிக்” கொண்டிருக்கிறார்கள். உயிர் பயம். எங்கே ‘இயேசுவோடு இருந்தவர்கள் என்பது தெரிந்தால், யூதர்கள் கொன்று விடுவார்களோ? என்கிற மரண பயம்’. ஆனால், தோமா அங்கே இல்லை. அதற்கானகாரணத்தை, நற்செய்தியாளர் சொல்லவில்லை என்றாலும், நம்மால் பலவிதங்களில் ஊகிக்க முடியும்.

எல்லாருக்கும் ‘உணவு வாங்க “துணிவுள்ள” ஒற்றை மனிதராக வெளியே சென்றிருக்கலாம். அல்லது மகதலா மரியா, “நான் ஆண்டவரைக் கண்டேன்” (20: 18) என்று சொல்லியிருந்ததால், ஒருவேளை “வெளியே” சென்றால், இயேசுவை நாமும் பார்க்க வாய்ப்பு இருக்குமோ? என்று நினைத்து‘துணிந்து’ போயிருக்கலாம். அது மட்டுமல்லாது, யூதப்பாரம்பரியத்தில் ‘இறப்பு’நிகழ்வின் போதுசொல்லப்படுகிற காரியத்தின் அடிப்படையிலும் சென்றிருக்கலாம். அதாவது,  யூதப் பாரம்பரியத்தில் யாராவது ஒருவர் இறந்து வி்ட்டால், சில நாட்கள் “இறந்த உடலை வைத்து”, துக்கம் கொண்டாடுவதுண்டு. இதற்கான காரணம், இறந்தவரின் உடலிலிருந்து வெளியேறிய ‘ஆவி’, ஒருவேளை மீண்டும் இறந்த‘உடலில்’சோ்வதற்கும் வாய்ப்புண்டு என்கிற “நாட்டுப்புற மக்களின்” நம்பிக்கை. ஆனால், உடல் அழுகிவிட்டால், அந்த ஆவி திரும்ப வந்தாலும் ஆவியால், அந்த உடலை அடையாளம் காண முடியாமல் திரும்பப் போய்விடும். ஆக, உடல் அழுகி விட்டால், மீண்டும் ஆவியானது ‘அந்த உடலில்’திரும்ப வாய்ப்பே இல்லை என்பது அவர்களது நம்பிக்கை. யோவான் நற்செய்தியில், இலாசர் இறந்தபோது, “நான்கு நாள்கள் ஆயிற்று, நாற்றம் அடிக்குமே?”என்கிற மார்த்தாவின் வார்த்தைகள் இங்கே நினைவுகூறத்தக்கவை. அதாவது, இனிமேல் ‘லாசரின் ஆவி திரும்பி’அவர் மீண்டும் பிழைப்பதற்கு கூட வாய்ப்பே இல்லை என்கிற நாட்டுப்புற மக்களின் நம்பிக்கையை, மார்த்தா இங்கே வெளிப்படுத்துகிறார்.

இப்போது இயேசு இறந்து விட்டார். ஆனால், இறந்து “உடனே” அடக்கம் செய்யப்பட்ட இயேசுவின் உடலை, எப்படியாவது கல்லறையிலிருந்து மீட்டால், ஒருவேளை அவர் உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கலாமோ? என்கிற “அதீத அன்பு” கூட, ‘நாட்டுப்புற மக்களின்’எளிய நம்பிக்கை கூட, தோமா இயேசுவின் உடலைத் தேடிச் சென்றிருக்கலாம் என்கிற ஊகம், வலுப்பெறகாரணமாகத் தானே இருக்கிறது? இப்படி பல “ஊகங்களை” நாம் சொல்லலாம் என்றாலும், ஒன்று மட்டும் தெளிவு. தோமா “துணிவோடு” இயேசுவுக்காக அல்லது மற்ற சீடர்களுக்காக, “தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து” ‘வெளியே’ செல்கிறார்.

அப்படியானால், சீடர்கள் ‘உயிர்த்த இயேசுவைக் கண்டோம்’ என்று சொன்னபோது, அவர் ஏன் நம்பவில்லை?தோமா “இயேசுவின் உயிர்ப்பை” கண்டிப்பாக நம்பியிருப்பார். அது ‘எப்படி’, ‘எப்போது’ என்கிற “தெளிவு”ஒருவேளை அவருக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், ‘இயேசு உயிர்ப்பார்’ என்பது தோமாவின் ஆணித்தரமான நம்பிக்கையாகவே இருந்திருக்க வேண்டும்.ஆனால், அவர் “உயிர்ப்புச் செய்தியைச் சொன்ன” சீடர்களை, நம்ப தயாரில்லை. ஒருவேளை பெண்கள் தோமாவிடம் ‘உயிர்ப்புச் செய்தியைச்’ சொல்லியிருந்தால் கூட நம்பியிருக்கலாம், ஆனால், “இந்த சீடர்களை” அவர் நம்புவதற்கு தயாரில்லை. எதற்காக? சீடர்களை ‘நம்பாததற்கு’ தோமாவிற்கு ஏராளமான ‘வலுவான’ காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

முதலாவதாக, ‘பாறை’ என்று இயேசுவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் பேதுரு. திருச்சபையின் தலைவராக இயேசுவே அவரை நியமித்தார். ‘மெசியா’ என்று இயேசுவை முன்மொழிந்து அவருடைய பாராட்டுதலைப் பெற்றவர் பேதுரு. ஆனால், ‘நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்’ என்று இயேசு எச்சரித்திருந்தபோதும், அவர் சொற்படியே ‘மும்முறை’ இயேசுவை மறுதலித்து, தோமாவின் நம்பிக்கையை இழந்தவர் ஆனார் பேதுரு. அது மட்டுமல்ல, இயேசுவின் ‘தனிமையில்’ கூட அவரோடு இருப்பதற்கு ‘சிறப்பாக’ அழைக்கப்பட்டிருந்த சீடர்கள் மூன்று போ். அவர்களில் ஒருவர் பேதுரு. இயேசு கடைசியாக இரவு உணவு முடிந்து ஒலிவ மலைக்குச் சென்றபோது, அவர்களோடு உடன் அழைத்துச் சென்றது இந்த மூன்று பேரையும் தான். இயேசுவைக் கைது செய்தபோது, தங்களை இந்த அளவுக்கு அன்பு செய்த ‘போதகரை’ விட்டு விட்டு, தங்கள் மேலுடையை தவறவிட்டுச் செல்லும் அளவுக்கு, “கோழைகளாக” இருந்த சீடர்கள், இப்போது “உயிர்ப்புச் செய்தியைச்” சொன்னதால், தோமா அவர்களை நம்ப தயாரில்லாமல் இருந்திருக்கலாம்.

இரண்டாவதாக, இயேசுவின் மார்பு மீது சாய்ந்திருக்கும் பாக்கியம் பெற்ற இயேசுவின் அன்புச்சீடராக அறியப்பட்ட யோவான். ‘இயேசுவை யார் முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்கப்போகிறார்’ என்பதை கேட்டு பதில் பெற்றும், ஒன்றும் செய்யாதவராகவே இருக்கிறார். ஒருவேளை அவர் ஏதாவது செய்திருந்தால், இந்த ‘சோகமான முடிவு’ நிகழாமல் தவிர்த்திருக்க முடியும். ஆனால், இயேசுவைக் காப்பாற்றும் ‘வாய்ப்பை’ அவர் தவற விட்டார். எனவே, அவருடைய ‘சான்றையும்’ ஏற்றுக்கொள்ள தோமா தயாரில்லை. அது மட்டுமல்லாது, இயேசு உயிரோடு இருந்தபோதே, தங்களுக்குள்ளாக பதவிக்காக, தங்கள் தாயாரை வைத்து ‘பரிந்து” பேச வைத்து, இயேசுவையும், அவருடைய போதனைகளையும் புரிந்து கொள்ளாதவர்கள், இப்போது ‘உயிர்ப்புச் செய்தியைச்’ சொன்னதால், அவர்களை நம்ப தோமா தயங்கியிருக்கலாம்.

ஒட்டுமொத்தத்தில், ‘உயிர்ப்புச் செய்தியைச்’ “பலவீனமான”“கோழைகளான”“பதவி ஆசையோடு காத்திருந்த” சீடர்கள் அதனைச் சொன்னதால், அவர் அந்த “செய்தியை” நம்பவில்லை. எனவே தான், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்ப மாட்டேன்” என்கிற வார்த்தைகளைச் சொல்கிறார். யோவான் 6: 19 ல், இயேசு கடல் மீது நடந்து வந்தபோதே “அஞ்சியவர்கள்” இப்போதும் பயத்திலிருக்கிறவர்கள், “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்கிற, நினைப்பிலே கூட பிதற்றிக் கொண்டிருக்கலாம், என்று கூட நினைத்திருக்கக் கூடும்.

அப்படியேதோமா “சந்தேகித்திருந்தாலும்”இயேசுவின் உயிர்ப்பை சந்தேககித்திருக்க மாட்டார். மாறாக, “இத்தனை” அன்பு செய்த “தான்” இல்லாதபோது, “இந்த” அன்பிற்கு தகுதியே இல்லாத, “இந்த” சீடர்கள் இருந்தபோது, இயேசு அவர்களுக்குத் தோன்றினார் என்பதை, நம்பவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை, எனவே, சந்தேகித்தார். இது ‘பொறாமையினால்’ எழுந்தது அல்ல, தன் தரப்பில் ‘நியாயம்’ இருப்பதாக நம்பியதால் எழுந்தது. இயேசு “அவர்கள்” அனைவரையும் “சமமாக” அன்பு செய்தார் என்பதனால், “தான் இல்லாத நேரத்தில்” இயேசு தோன்றியிருக்க முடியாது என்று “நம்பினார்”, எனவே, அவர்கள் சொன்தைச் “சந்தேகப்பட்டார்”.

தோமாவின் நியாயமான ‘சந்தேகமும்’ சங்கடமும்”

தோமா ஒரு சாதாரணமான மனிதர். யதார்த்த வாழ்க்கையோடு இணைந்தவர். மிகப்பெரிய அறிவாளி அல்ல. பேதுருவைப் போல ‘இறைத்தந்தையால்’ தூண்டப்பட்டு ‘ஞானத்தோடு’ பேசும் பாக்கியம் பெற்றவர் அல்ல. இயேசு அதிகமாக அன்பு செய்த “மூன்று” சீடர்கள் குழுவில் இடம்பெற்றவரும் அல்ல. ஆனால், எளியவர்களின் “சார்பாக”நின்று எளிய கேள்விகளை எழுப்பியவர். உதாரணமாக, யோவான் நற்செய்தி 14: 3 ல், இயேசு தன் சீடர்களைப் பார்த்து, “நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து, உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது, நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். நான் போகுமிடத்திற்கு வழி உங்களுக்குத் தெரியும்” என்று சொன்னபோது, தோமா, “ஆண்டவரே! நீர் போகுமிடமே எங்களுக்குத் தெரியாதபோது, அதற்கான வழி எப்படித் தெரியும்?”என்கிறார்.

இது “எளிய” மனிதனின் “புரிதலிலிருந்து” எழுப்பப்படுகிற கேள்வி. ஒருவேளை, மற்ற சீடர்கள்“விண்ணரசு பற்றிய மறைபொருளான விளக்கமாக” இதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு, “விசுவாசத்தில்” வளர்ந்திருக்கலாம். ஆனால்தோமா, இயேசுவின் இந்த வார்த்தைகளை“இந்த உலக வாழ்வு” தொடர்பான யதார்த்த “சிந்தனையாகவே” புரிந்து கொள்கிறார். ஏனென்றால், அவர் மிகப்பெரிய “இறையியலாளர்” அல்ல, இவ்வளவு கடினமான “மறைபொருளைப்” புரிந்து கொள்வதற்கு, மாறாக சாதாரணமானவர். ஆனால், அது தான் “வழியும், உண்மையும், வாழ்வும் நானே” என்கிற உன்னதமான வார்த்தைகள், இயேசுவின் நாவிலிருந்து உதிர்வதற்குக் காரணமான “ஆவியால் தூண்டப்பட்ட”கேள்வியாக அமைந்து விடுகிறது, இன்றைய நற்செய்தியில் சொன்ன “என் ஆண்டவரே! என் தேவனே! நீரே என் கடவுள்” என்பது போல.ஞானம் என்பது கடவுளிடமிருந்து “பெற்றுக்கொள்கிற” கொடை அல்ல, மாறாக, வாழ்க்கையின் அனுபவங்களிலிருந்து எழும் யதார்த்தமான கேள்விகளை சுயமாகமூலமும், “இயேசுவை வழியாகவும்”, “ இறைவனை “ஒளியாகவும்” கொண்டு, தூய ஆவியின் துணையால் “தேடி”“கண்டடைகிற” உன்னதமான அனுபவம்.

விவிலியத்தில்தோமா,“கடைசி வரை” இயேசுவுக்குத் துணைநிற்கிற “துணிவுள்ளவராகவே” காட்டப்படுகிறார். அவர் ‘மறுதலிக்கவில்லை’, ‘காட்டிக்கொடுக்கவில்லை’ ‘பதவிக்காக தன் தாயாரை பரிந்து பேசச் சொல்லவில்லை’, ‘தன்னை பெருமை பாராட்டிக்கொள்ளவில்லை’, ‘எப்போதும் மறுத்துப் பேசவில்லை’ – ஆனால், இவ்வளவு தகுதிகள் இருந்தும், தன்னையும், தன்னுடைய சுயநலமற்ற எண்ணத்தையும் முழுமையாக அறிந்த இயேசு,“தான் இல்லாதபோது” தோன்றி விட்டாரே, “தன்னை”மறந்து விட்டாரே!”“தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்”“எவருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படும்” (யோவான் 20: 22) என்கிற ஆசீர்வாதத்தை “அவருக்கு” மட்டும் ‘மறுத்து’ விட்டாரே!” என்று சங்கடப்பட்டிருப்பார். மனம் உடைந்திருப்பார், இயேசுவின் மீது அளவு கடந்த கோபம் கொண்டிருப்பார். “தான் எந்தவிதத்தில் “மற்றவர்களுக்கு” கீழானவன் ஆனேன்?” என்று வெகுண்டு எழுந்திருப்பார். “தான் செய்த தவறு என்ன?” என்று பொங்கியிருப்பார். “தன்னை மட்டும் இயேசு எதற்காக உதாசீனப்படுத்த வேண்டும்?” என்ற கேள்விக்கணையை தனக்குள்ளேயே தொடுத்திருப்பார். ஒருவேளை இயேசுவை மீண்டும் பார்க்க நோ்ந்தால், “இத்தனை கேள்விகளுக்கும் விடை கேட்டே ஆக வேண்டும்” என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்திருப்பார்.

தோமாவுக்கு இயேசுவின் பதில்மொழி:

“இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்!” (யோவான் 20: 27) என்று இயேசு சொன்னபோது, தோமாவிடமிருந்து, கேட்க நினைத்த “கேள்விகள்”எதுவும் எழவில்லை. மாறாக, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்” என்கிற வார்த்தைகள் மட்டுமே எழுகின்றன. காரணம், உயிர்த்த இயேசுவைப் பார்த்த அந்த கணமே, “தோமாவின் அத்தனை கேள்விகளுக்கும் அவருக்கு விடை கிடைத்து விட்டது”. இரண்டு பேரும் ‘எம்மாவு சீடர்களைப் போல’ நீண்ட நேரம் விவாதிக்கவில்லை. உணவு அருந்தவில்லை. இயேசு அப்பத்தை உடைத்துக் கொடுக்கவில்லை. எதையும் அவருக்கு ‘சமைத்துக்’ கொடுக்கிவில்லை. ஆனால், தோமா ‘சரணடைந்து விட்டார்’. காரணம் என்ன? தோமா “கண்டுகொண்டார்”. இயேசு “உண்மையிலேயே” உயிர்த்து விட்டார் என்பதை “அனுபவித்து” விட்டார். எண்ணற்ற கேள்விகளோடு ‘விடை’ தேடினார், இப்போது “கண்டுகொண்டார்”.

தோமாவிற்கு இயேசுவின் உள்ளத்தில் இருந்த பதில், இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். ‘தோமா! நீ இல்லாதபோது மற்றவர்களுக்குத் தோன்றினேன். ஏனென்றால், அவர்களுக்கு உயிர்ப்புச் செய்தி அறிவிக்கப்பட்டும் நம்பவில்லை. எனவே, அவர்களுக்கு என்னைக் “காண்பிப்பது” தேவையாக இருந்தது. ‘மருத்துவர் நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே தேவை’. எனவே தான், அவர்களுக்குத் தோன்றினேன். ஆனால், உன் அன்பு எனக்குத் தெரியும், உன் விசுவாசம் எனக்குத் தெரியும், எனவே தான், நான் உனக்குத் தோன்றவில்லை.இப்போதும், “நீ என்னை சந்தேகிக்கவில்லை என்பதை நானறிவேன். ஆனாலும், நீ சங்கடப்படக்கூடாது என்பதற்காகவே,“உனக்காகவே”,“உனக்காக” மட்டும் தான், இப்போது தோன்றியிருக்கிறேன்”.நீ தேடினாய். இப்போது கண்டுகொண்டாய். ஆனால், இனிமேல் பல தலைமுறைகள் தோன்றும். அவர்கள் உன் வார்த்தைகளை மட்டும் கேட்டு, என்னைக் காணாமலேயே நம்புவார்கள். அவர்கள் நிச்சயம் பேறுபெற்றவர்களாக இருப்பார்கள்’என்று தோமாவின் “நற்செய்தி” வாழ்க்கையைப் பற்றி எதிர்காலத்தில் நடக்கப்போவதை, இயேசுவே அவருக்குச் சான்று பகர்ந்ததை, தோமா உணர்ந்திருப்பார். நிம்மதி அடைந்திருப்பார்.

உண்மையில், தோமாவின் கேள்வி அவருக்கானது அல்ல, “இயேசு உண்மையிலேயே உயிர்த்தாரா? என்கிற “உள்ளளவில்’இன்னமும் சந்தேகம் கொண்டு, ‘உதட்டளவில்’உயிர்த்த இயேசுவைப் பார்த்தோம் என்று, தோமாவிடம் சொன்ன சீடர்கள், “தெளிவு” பெறுவதற்காகவுமே. ‘தான் கேட்கிற கேள்வியால், இந்த உலகம் முடியுமட்டும் ‘சந்தேகத்தோமா’என்கிற அவப்பெயரை தூக்கிச் சுமக்க நேரிடும்” என்கிற போதிலும், இந்த உலகம் என்ன நினைக்கும்? என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், “எளிய விசுவாசம் கொண்ட” மக்கள் சார்பாக நின்று “துணிந்து” கேட்டு, அத்தனை பேருடைய சந்தேகங்களையும் தீர்த்து “உண்மை எது?” என்பதை உணர்த்திய கேள்வி அவருடையது.அவர் “சந்தேக தோமா” அல்ல, நம் “அனைவரின்” சந்தேகம் தீர்த்த தோமா.

இந்த “துணிவு” தான், மற்ற சீடர்கள் ‘குறிப்பிட்ட’எல்லைக்குள்ளாக தங்கள் ‘நற்செய்திப்பணியை’அறிவிக்க சென்றபோது, தோமாவை‘கடல் கடந்து’நீண்ட நெடிய பயணத்திற்கு சாத்தியப்படுத்தியது. உலகின் ‘கடை எல்லையான’இந்தியாவிற்கு வருகிறார். அதே துணிவோடு,‘நற்செய்தியை’அறிவிக்கிறார். இவ்வளவு நீண்ட நெடிய பயணம் மேற்கொண்டு, நற்செய்தியை அறிவித்த தோமாவின் ஒரே நம்பிக்கை “உயிர்த்த இயேசுவும்”,‘கடவுளின் வலக்கரம்’ தன்னை பாதுகாக்கும் என்கிற ‘சாமானியனின்’ எளிய விசுவாசமும் தான்.

இன்றைக்கு எளிய மக்களிடம் கிறிஸ்துவைப் பற்றிய நம்பிக்கையை விதைக்கும் நற்செய்திப் பணியாளர்களாகிய நாம்,முதலில் ‘நம்மிடம் இந்த எளிய விசுவாசம் இருக்கிறதா? என்று கேட்டுப் பார்ப்பது தான், இன்றைய காலக்கட்டத்திற்கு உகந்த கேள்வி என்று நினைக்கிறேன். அடுத்த வேளை சோற்றுக்கும், வைத்தியத்திற்கும் வழியற்று இருக்கிற கோடிக்கணக்கான மக்களின் “விசுவாசத்தோடு”, அருட்பணியாளர்கள் நம் விசுவாசத்தை ஒப்பிட்டால், ‘தலைக்குனிவைத்தான்’ ஏற்படுத்துகிறது. ஆனால், அந்த எளிய பாமர மக்களிடம் இயேசுவை ‘மந்திரவாதியாக’ அறிமுகப்படுத்துவதும், இயேசுவை ‘விசுவசித்தாலே” அத்தனையும் கிடைக்கும் என்று ‘வியாபாரம்’ செய்வதும், தூய ஆவிக்கு எதிரான பாவமே. அதற்கு ‘மன்னிப்பே’ இருக்க முடியாது. ஒருபுறம் ‘அரசியல் நிலைப்பாடு’ என்கிற பெயரில், அத்தனை ‘அழிவுத்திட்டங்களுக்கும், இங்கே நிலவுகிற உயிர்க்கொல்லி நோய்களுக்கும்’ காரணமானவர்களுக்குஆதரவு தெரிவித்து விட்டு, மறுபுறம் இயேசு குணமளிக்கிறார் என்று வெட்கமே இல்லாமல் ‘நற்கருணையைத்” தூக்கிக் கொண்டு, நடந்து வருவது “இயேசுவை” மீண்டும் மீண்டும் சிலுவையில் அறைந்து கொல்வதற்கு சமமானதாகும்.

‘எவன் செத்தாலும் பரவாயில்லை’ ஆனால், திருச்சபையைக் காக்க வேண்டும் என்பதற்காக“அடிப்படை அறமே இல்லாத அரசியல் தீர்மானத்தை வெளியிட்டு”, தங்களை நம்புகிற ஆட்டு மந்தையை‘பலியாடுகளாகப்’ பார்க்கும் கேவலம், தமிழக திருச்சபையில்  மட்டும் தான் நடக்க முடியும் என்று நினைக்கிறேன். ‘கடுகளவு நம்பிக்கை இருந்தால், எதையும் செய்ய முடியும்’ என்கிற வார்த்தைகளை, ஏழைகளும், எளியவர்களும், சாமானியர்களும் ‘நம்புகிற’ அளவுக்குக் கூட, திருச்சபையின் தலைவர்கள் நம்பாதது வெட்கக்கேடு.

“மதம்”என்கிற மகுடி வாசிக்கிறது என்று பிஜேபியை பார்த்து ஒப்பாரி வைக்கும் தமிழக திருச்சபையின் தலைவர்கள் செய்வது “மதவெறி” அரசியல் இல்லையா? ‘கத்தோலிக்கர்கள்’ என்கிற பெயரில் “மதத்தால்”மக்களைப் பிரித்தாளும் ‘சதி’ செய்வது தான், இயேசு கற்றுக்கொடுத்த ‘விழுமியமா?’ எத்தனை பேரை ‘எதிர்க்க’ வேண்டியது வந்தாலும், உண்மைக்காக சான்று பகர்ந்த “இயேசு” எங்கே? “குறைந்த தீமை” என்று, தங்கள் நிறுவனங்களையும், சோ்த்து வைத்திருக்கிற சொத்துக்களையும் காப்பாற்ற, அநீதிக்குத் துணைபோகும்“தமிழக தலத்திருச்சபை” எங்கே? விழுமியத்திற்காக”நின்று,“ஆடுகளுக்காக” தன் உயிரை ஈந்த இயேசு எங்கே? எட்டணா “கேக்” கிடைக்கிறது என்பதற்காக, “ஆடுகளை வெட்டிக் கொன்ற கசாப்புக் கடைக்காரனோடு” கைகோர்த்து திரியும் ஆயர் கூட்டம் எங்கே?

பணம், பொருள், அதிகாரம் என்று எதுவுமே இல்லாமல், “உயிர்த்த இயேசுவின் விசுவாசமும்”, “கடவுளும் நம்பிக்கையும்” மட்டுந்தான், தமிழக மண்ணில் தோமா என்கிற ‘கருவி’ மூலம், திருச்சபை வளர்ந்தது. அந்த வளர்ச்சி “அதிகாரத்தில் இருந்தவர்களோடு கைகோர்த்ததனால் அல்ல”. தோமா தன்னுடைய ‘அறிவால்’ அல்ல, ‘பகுத்தறிவால்’ அல்ல, ‘ஆன்மீகத்தால்’ அல்ல, ஆண்டவரின் “ஆவியால்” திருச்சபையைக் கட்டி எழுப்பினார். மொழி புரியாத “எளிய” மக்களை ஊமையாகவே ‘கவர்ந்திழுத்தார்’.

இயேசுவின் புதைக்கப்பட்ட உடல், ‘உயிர்பெற்று எழுந்தது’வரலாற்று உண்மையானால், அதுதான் தமிழகத்திலிருக்கிற இலட்சக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் நம்பிக்கையானால், “ஏழைகளையும், எளியவர்களையும் சுயநலத்திற்காக, ஒரு சிலரின் அரசியல் ஆதாயத்திற்காக காவு கொடுக்க முயலும்”, திருச்சபையின் தலைவர்கள், “உயிர்த்த இயேசு” மீண்டும் வருகிறபோது, “கணக்கு” கொடுத்தே ஆக வேண்டும். ஆனால், ஒன்று மட்டும் உறுதி: கண்டிப்பாக, ‘நம்பிக்கையின்மையைக்’ கண்டு வெறுமனே “கடிந்து” கொள்கிற நாளாக மட்டும் இருக்காது, “காத்திருந்து கருவருக்கிற” நாளாகவே “அந்த நாள்”இருக்கும். 

Add new comment

5 + 0 =