குழந்தை மனம் வேண்டும் | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


இன்றைய வாசகங்கள் (26.02.2022)
ஆண்டின் பொதுக்காலத்தின்  ஏழாம் சனி
மு.வா:யாக்கோபு:  5: 13-20
ப.பா :  திபா 141: 1-2. 3,8
ந.வா:  மாற்கு:  10: 13-16

 

நான் பணி செய்த ஒரு பங்கில் குடும்பத்தலைவர் ஒருவர் குடிநோயினால் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார். யாராலும் அவரை திருத்த  முடியவில்லை. எனவே என்ன செய்வதென்றே தெரியாமல் குடும்பத்தினர் திகைத்து நின்றனர். ஆனால் ஒரு நாள் அவரின் குழந்தையின் கண்ணீர் அவர் இதயத்தை மாற்றியது. ஒரு முறை குடிக்க அந்த குடும்பத் தலைவர் மனைவியின் தாலியை  கேட்டு அடித்து துன்புறுத்தினார். அப்பொழுது அவரின் மகள் தன் அப்பாவிடம் "அப்பா குடிப்பதற்கு அம்மாவை அடிக்க வேண்டாம். என்னுடைய கொலுசை வெகுநேரம் உங்களுக்கு கொடுக்க கழற்றி கொண்டிருக்கிறேன். ஆனால் கழற்ற முடியவில்லை. இதை கழற்றி  குடித்து கொள்ளுங்கள்" என்று கூறியது. .  இதைக் கேட்ட அந்த குடிகாரர் தன்னை நினைத்து மிகவும் வருந்தினார். செய்த தவறுக்காக மனம் நொந்து அழுதார். தன் குழந்தையிடம் மன்னிப்பு கேட்டார்.

குழந்தைகள் கடவுளின் கொடைகள். கல்லான இதயம் கூட குழந்தைகளின் நல்ல செயல்களின் வழியாக கனிவுள்ள இதயமாக மாறும். இன்றைய நற்செய்தியில் குழந்தை போல் மாறுவதால் இறையாட்சிக்கு நாம் உரிமை உள்ளவர்களாக மாறுகிறோம் என்று சுட்டிக்காட்டுகின்றது.

யூத சமூகத்தில் குழந்தைகள் அக்காலத்தில் ரபியிடம் ஆசி பெறுவது வழக்கம். அந்தப் பின்னணியில் ஆண்டவர் இயேசுவும் குழந்தைகளை ஆசீர்வதிக்க திருவுளம் கொண்டார். குழந்தை உள்ளம் தான் இறையாட்சியின்  மதிப்பீடுகளோடு வாழ அழைப்பு விடுக்கின்றது. 

குழந்தைகளிடமிருந்து எண்ணற்ற நற்பண்புகளை நமதாக்க முடியும். அது நல்ல பண்புகளில் ஒரு சிலவற்றை இப்போது தியானிப்போம். முதலாவதாக மாசின்மை. தூய உள்ளத்தோடு குழந்தைகள் இருப்பர். இறையாட்சியினுடைய மதிப்பீடுகளை வாழ்வதற்கு தூய உள்ளம் அவசியமான ஒன்றாகும்.

இரண்டாவதாக,  கபடின்மை. கபடு மனநிலை இறையாட்சிக்குள் நுழைவதற்கு   தடையாக இருக்கின்றது. எனவே கபடு இல்லாத மனநிலையில் வாழும் பொழுது, நம் வாழ்வில்  இறையாட்சிக்குள் உட்புக முடியும். குழந்தைகளின் உள்ளம் பயமின்மை, கவலையின்மை, மகிழ்ச்சி, மற்றும் தாழ்ச்சி   போன்ற நல்ல மதிப்பீடுகள் கொண்டதாக இருக்கும். 

இப்படிப்பட்ட மனநிலைகள் தான் குழந்தைகளின் சிறந்த மனநிலைகளாக கருதப்படுகின்றன. இந்த மனநிலைகள்  ஒவ்வொரு மனிதரிடத்திலும் காணும்பொழுது,  வாழ்வில் வளமையும் செழுமையும் காணமுடியும். இறையாட்சிக்கு உகந்த  வாழ்வு வாழ முடியும். எனவே தான் ஆண்டவர் இறையாட்சியை சிறுபிள்ளைப் போல்  ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். எனவே  குழந்தைகள் கொண்டிருந்த நல்ல மதிப்பீடுகளை நாமும்  கொண்டிருக்க தேவையான அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் குழந்தை  மனநிலையை பெற்று இறையாட்சிக்கு உகந்த வாழ்வு வாழ்திட அருளைத் தாரும். ஆமென்.

Add new comment

9 + 10 =