கிறிஸ்தவ வாழ்வுக்குச் சாட்சியம் பகிர்வோமா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


திருவருகைக் காலம் மூன்றாம் வியாழன்
I : எசாயா: 54: 1-10
II: திபா: 29: 2,4-6,11-13
III : லூக் 7: 24-30

திருமுழுக்கு யோவான் யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு கொடுத்த மாமுனி ஆவார்.  அவர் தனக்குக் கொடுத்த கடமைகளையும் பொறுப்புகளையும் மிகச் சிறப்பாக செய்தார். எந்த நோக்கத்திற்காக அவர் அழைக்கப்பட்டாரோ, அதை மிக அருமையாகச் செய்தார். திருமுழுக்கு யோவானின் பணி மிகச் சிறந்த பணியாக இருந்தது. அவர் பணியை குறித்து இறைவாக்கினர் மலாக்கி "இதோ என் தூதனை அனுப்புகிறேன். அவர் நமக்குமுன் வழியை ஆயத்தம் செய்வார் " (மலா: 3:1) எழுதியுள்ளார்.  இன்றைய  நற்செய்தியில் ஆண்டவர் இயேசு திருமுழுக்கு யோவானை புகழ்கிறார். காரணம் யூத  மக்கள்  யோவானை மெசியாவின் தூதராக ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் அனைவரும் யோவானை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே புகழாரம் சூட்டுகிறார். யோவானின் வாழ்விலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும்?  எவ்வாறு இவரின் வாழ்வு ஆண்டவரின் வருகைக்காக ஆயத்தப் படுத்த உதவுகிறது? என்பது பற்றி சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.

திருமுழுக்கு யோவான் இறையாட்சி மதிப்பீட்டிற்குச் சாட்சியம் பகர்ந்தார். தன் வாழ்வு முழுவதும் உண்மையோடும் நேர்மையோடும் நீதியோடும் வாழ்ந்தார். ஏரோது அரசரின் நெறிகெட்ட வாழ்வை கண்டித்ததால்,  தன்னுடைய தலை வெட்டப்படும் அளவுக்கு உள்ளானார்.  ஆண்டவர் இயேசுவினுடைய வருகைக்காக சிறப்பாக தயாரிப்பு செய்தார். அவர் வந்தபின் "இவரே உலகின் பாவங்களைப் போக்கும் செம்மறி" என்று சுட்டிக்காட்டினார். தாழ்ச்சியோடு  அவரின் மிதியடி வாரை அவிழ்க்க கூட தகுதி இல்லை என்று கூறும் அளவிற்கு ஆண்டவருடைய வருகைக்காகத் தன்னையும் பிறரையும்  ஆயத்தப்படுத்தினார்.  இறையரசில் பங்கேற்க  மக்களை தயார் செய்தார். இறையாட்சி மதிப்பீடுகளான உண்மை, அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மதிப்பீடுகளை வாழ்வதற்கு வழி காட்டினார். இவ்வாறாக தன்னிடம்  ஒப்படைக்கப்பட்ட கடமைகளை  மிகச் சிறப்பாக திருமுழுக்கு யோவான் செய்தார். எனவே இயேசுவால் புகழப்பட்டார்.

அன்றாட வாழ்க்கையிலும் வாழுகின்ற கிறிஸ்தவ வாழ்வை சிறப்பாக வாழ அடைக்கப்பட்டுள்ளோம். அவ்வாறு சிறப்பாக வாழும் பொழுது நிச்சயமாக இயேசு திருமுழுக்கு யோவானை பாராட்டியதைப்  போல, நம்மையும் நிச்சயமாக பாராட்டுவார். எனவே பெயரளவு  கிறிஸ்தவர்களாக இல்லாமல், இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி வாழும் கிறிஸ்தவர்களாகவும் ஆண்டவரின் வருகைக்காக எந்நாளும் தங்களையே தகுதிப்படுத்தும் கிறிஸ்தவர்களாகவும் வாழ முயற்சி செய்வோம்.  அதற்குத் தேவையான அருளை வேண்டி   இறையாட்சி மதிப்பீட்டுக்குச் சான்று பகர முயற்சி செய்வோம்.

 இறைவேண்டல்

வல்லமையுள்ள  ஆண்டவரே! இறையாட்சி மதிப்பீட்டிற்கு எந்நாளும் திருமுழுக்கு யோவானை போல  சான்று பகர்ந்து    உம் திருமகனின்  வருகைக்காக ஆயத்தப்படுத்த அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

5 + 3 =