Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கவனமாய் இருப்போமா! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் ஆறாம் செவ்வாய் - I. தொநூ: 6:5-8;7:1-5,10; II. தி.பா: 29:1,2. 3-4.3b,9b,10; III. மாற்: 8:14-21
கவனமாக இருத்தல் என்பது மனித வாழ்வில் முக்கியமான பண்பாக இருக்கின்றது. ஒரு முறை ஒரு இளைஞர் நேர்முகத் தேர்வுக்காக சென்றிருக்கிறார். அவர் மிகுந்த ஏழ்மையான குடும்பத்தில் படித்து வேலை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் அந்த தேர்வுக்கு சென்றார். தொடர்வண்டியில் பயணம் செய்வதற்காக தொடர்வண்டி நிலையத்தில் அமர்ந்திருந்தார். அவர் காத்திருந்த தொடர்வண்டியை விட்டுவிட்டால், நேர்முகத்தேர்வுக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாது என்பதை அவர் அறிந்திருந்தார். இருந்தபோதிலும் சற்று கவனக் குறைவோடு தான் காத்திருந்த தொடர்வண்டியை கூட கவனிக்காமல், அலைபேசியில் விளையாடிக் கொண்டிருந்தார். இறுதியில் அந்த தொடர்வண்டியை விட்டுவிட்டார். தொடர்வண்டி சென்ற பிறகுதான் அவர் தனது விளையாட்டை முடித்தார். அங்குள்ள அலுவலரிடம் தொடர்வண்டி எப்போது வரும் என்று கேட்டபொழுது, 'ஏற்கனவே தொடர்வண்டி சென்றுவிட்டது' என்று கூறினார். தன்னுடைய கவனக் குறைவால் தனக்கு கிடைத்த வேலைவாய்ப்பு கைவிட்டு சென்று விட்டதே என்று கதறி அழுதார்.
நம்முடைய வாழ்க்கையிலும் பல நேரங்களில் கவனக் குறைவால் நமக்கு அருகில் கிடைத்ததை கைவிட்டு விடுகிறோம். இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கவனமுள்ளவர்களாய் இருக்க நமக்கு அழைப்பு விடுக்கிறார். "இன்னும் உங்களுக்கு புரியவில்லையா? " என்று ஆண்டவர் இயேசு சீடர்களைப் பார்த்து கேட்டதற்கு காரணம் அவர்களின் கவனம் குறைபாடாகும். இயேசுவின் அரும்பெரும் செயல்களை அவர்கள் கண்டும் தங்களுக்கு அப்பம் இல்லையே என்று நம்பிக்கையற்ற தன்மையோடு ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். எனவே இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு ஐயாயிரம் பேருக்கும் நாலாயிரம் பேருக்கும் அப்பம் பிட்டு உணவளித்ததைக் கவனத்தோடு நினைவுகூர்ந்து, இவ்வுலகம் சார்ந்த தேவைகளைப் பற்றி கவலைப்படாமல் இறையாட்சி சார்ந்த தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க இயேசு அழைப்பு விடுத்தார். எனவேதான் இயேசு "பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவை குறித்து மிகவும் கவனமாய் இருங்கள்" என்று சீடர்களுக்கு கட்டளையிட்டுள்ளார். இதற்கு காரணம் இந்த இரண்டு குழுவினரும் இறையாட்சி சார்ந்தவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், இம்மண்ணுலக ஆட்சிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.
பரிசேயர்கள் மெசியா வந்து எதிரிகளை அழித்துத் தங்களை விடுவித்து தங்களை அரசாட்சியில் அமர வைப்பார் என்று பகல் கனவு கண்டு கொண்டிருந்தனர். அதேபோல ஏரோதியரும் தங்களுடைய அரசாட்சியை தக்கவைத்துக் கொள்ள எதையும் செய்யத் துணிந்தனர். இருவர் மனநிலையும் இம் மண்ணுலக ஆட்சி சார்ந்த மனநிலை. இந்த மனநிலைதான் இயேசுவின் வல்லசெயல்களையும் போதனைகளையும் கண்டும் கேட்டும் அனுபவித்த சீடர்களும் கொண்டிருந்தனர். எனவேதான் தங்களிடையே அப்பம் இல்லை என பேசிக் கொண்டனர். இதற்கு அவர்களின் கவனக்குறைவே காரணம் எனக் கூறலாம். அவர்கள் இயேசுவை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. இறையாட்சியின் மதிப்பீடுகளை அவர்கள் மேலோட்டமாகப் புரிந்து கொண்டனர். எனவேதான் இயேசு சீடர்களைப் பார்த்து, "இன்னும் உங்களுக்கு புரியவில்லையா?" என்று கூறி இறையாட்சி மதிப்பீட்டிற்கு கவனத்தோடு முக்கியத்துவம் கொடுக்க அழைப்புவிடுத்தார்.
இன்றைய முதல் வாசகத்திலும் கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்களின் கவனக் குறைவை அறியமுடிகின்றது. கடவுள் இந்த உலகத்தை படைத்த பொழுது அனைத்தையும் நல்லதெனக் கண்டார். ஆனால் மண்ணுலகில் மனிதர் தங்களுடைய கவனக் குறைவின் காரணமாக தீமைகளைச் செய்தனர். எனவே ஆண்டவர் அதைக் கண்டு மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது. எனவே அனைவரையும் அழிப்பேன் என்று ஆண்டவர் திட்டமிட்டாலும் அந்த காலத்தில் வாழ்ந்த நோவா மட்டும் வாழ கடவுள் வாய்ப்புக் கொடுக்கிறார். இதற்கு காரணம் நோவாவின் நேர்மையான வாழ்வு. மிகுந்த கவனத்தோடு கடவுளுக்கு உகந்த வாழ்க்கையை அவரும் அவர் குடும்பத்தினரும் வாழ்ந்தனர். கடவுளின் இரக்கப் பார்வை அவர்களுக்கு கிடைத்தது. அனைவரையும் அழித்த கடவுள் நேர்மையாளரான நோவாவும் அவரது குடும்பத்தினரும் மட்டும் பிழைக்க வாய்ப்பு கொடுத்தார். இது அவரது கவனம் நிறைந்த நேர்மை வாழ்வுக்கு கிடைத்த பரிசாக இருக்கின்றது.
எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் கடவுள் நம்மை அவரின் இயல்பைக் கொண்டு இறையாட்சி மதிப்பீட்டிற்கு சான்று பகர அடைந்துள்ளார். சீடர்களைப் போல இயேசுவின் இறையாட்சி மதிப்பீடுகளை மேலோட்டமாக புரிந்து கொள்ளாமல், ஆழமாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். அதன்படி கவனத்தோடு வாழ முயற்சி செய்வோம். அப்பொழுது கடவுளின் நிறைவான அருளையும் ஆசீர்வாதத்தையும் நாமும் பிறரும் பெறமுடியும்.
கவனத்தோடு நம் வாழ்வை வாழ நாம் யார்? என்ற தெளிவைப் பெற்றிருக்க வேண்டும். கடவுளுக்கும் நமக்குமான உறவை வலுப்படுத்த வேண்டும். கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களோடு நல்லுறவு கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இந்த சமூகத்தில் நம்மால் இயன்ற மனித நேயப்பணிகளை செய்து கவனத்தோடு நற்செய்தி மதிப்பீட்டுக்குச் சான்று பகர முயற்சி செய்ய வேண்டும். அப்படி இருக்கின்ற பொழுது நிச்சயமாக கவனத்தோடும் விழிப்போடும் இறையாட்சி பணியை நாம் செய்ய முடியும். அதற்குத் தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்
அன்பான ஆண்டவரே! நாங்கள் செய்யும் அனைத்து செயல்களையும் கவனத்தோடும் நேர்மையோடும் செய்து உம்முடைய இறையாட்சி மதிப்பீட்டிற்குச் சான்று பகரத் தேவையான ஞானத்தையும் அருளையும் தாரும். ஆமென்.
Add new comment