கர்வத்தை களைந்து கடவுளின் கருணையைப் பெறுவோமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் பனிரெண்டாம் சனி; I: தொநூ: 18: 1-15; II  : லூக் 1: 47. 48-49. 50,53. 54-55; III: மத்:  8: 5-17

நாம் வாழும் இந்த உலகத்தில் கர்வம் என்ற பண்பு அதிகமாகக் காணப்படுகின்றது. மற்றவரை விட  தான் மட்டுமே எல்லாம் தெரிந்தவர் என்ற பார்வை நம்மிடம் அதிகம் இருக்கின்றது. இந்த உலகத்தில் அதிகமான வீழ்ச்சியைச் சந்தித்தவர்கள் கர்வம் நிறைந்த மனிதர்கள். தொடக்க நூலில் பாபேல் கோபுரம்  கட்டப்பட்ட நிகழ்வை வாசிக்கிறோம். இது அந்த மக்களின் கர்வம் நிறைந்த மனநிலைக்கு உதாரணம். பிறர் தங்களை உயர்வாக கருத வேண்டும் என்று எண்ணி கர்வத்தோடு அந்த கோபுரத்தை கட்டியெழுப்பினர். ஆனால் கடவுள் அந்த கர்வத்தை  உடைத்தெறிந்தார். இஸ்ரேல் நாட்டின் முதல் அரசர் சவுல் கர்வத்தோடு செயல்பட்டார். எனவே கடவுள் அவரின் அரசபதவியை இழக்கச்  செய்தார். 

அதேபோல புதிய ஏற்பாட்டில்   கர்வத்தோடு வாழ்ந்த ஏரோது அரசன் தன் வாழ்வின்  முழுமையை இழந்தான். கர்வத்தோடு இயேசுவைப் பின்பற்றிய யூதாசு இறுதியில் தன் வாழ்வை இழந்தான். ஆனால் கர்வம் இல்லாமல் வாழ்ந்த எத்தனையோ மனிதர்கள் மாமனிதர்களாகவும் புனிதர்களாகவும் மாறியுள்ளனர்.

கர்வம்  இல்லாத மனநிலை தான் கடவுளின் அருளைப் பெற்றுக் கொள்ள வழிகாட்டும். கடவுளின் அருளைப் பெற்றுக் கொள்வதற்கு தடையாக இருப்பது நம்முடைய தற்பெருமையும் ஆணவமும் ஆகும்.

கர்வம் இல்லாமல் கடவுளின் அருளைப் பெறுவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. அதேபோல திருமுழுக்கு யோவான் கர்வம் இல்லாத மனநிலைக்கு மிகச் சிறந்த உதாரணம் ஆவார். திருமுழுக்கு யோவான் நினைத்திருந்தால் தன்னை மெசியாவாக வெளிப்படுத்தி எல்லா பெயரையும்  புகழையும் பெற்றிருக்கலாம். ஆனால் ஆண்டவர் இயேசுவின் வருகையைச் செம்மைப்படுத்தி அவரைச் சுட்டிக்காட்டினார். இது கர்வமில்லா மனநிலைக்கு   உதாரணம்.

எனவே நம்முடைய வாழ்வின் முழுமையை அடைந்து கடவுளின் கருணையைப் பெற்றுக்கொள்ள நம்மிடமிருக்கும் தற்பெருமை கர்வம் போன்ற தீய பண்புகளை நம்மிடமிருந்து அகற்ற முயற்சி செய்வோம். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மிக அருமையான நிகழ்வு ஒன்றை வாசிக்கிறோம். நூற்றுவத் தலைவரின் பணியாளர் முடக்குவாதத்திலிருந்து விடுதலை பெறும் நிகழ்வு. நூற்றுவத் தலைவர் அதிகாரமும் பணபலமும் உடையவர். ஆனால் அவர் தன்னுடைய அதிகாரத்தையும் பணபலத்தையும் உயர்த்திப் பிடிக்காமல், கர்வமில்லா உள்ளத்தோடு வாழ்ந்தார். தாழ்ச்சியோடு ஆண்டவர் இயேசுவிடம் தன் பணியாளரைக் குணமாக்குமாறு வேண்டினார். ஆண்டவர் இயேசுவும் நூற்றுவத் தலைவரின் நம்பிக்கையின் பொருட்டும் கர்வமமில்லா தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தின் பொருட்டும் அவரின் பணியாளருக்கு நலமளித்தார். கடவுளின் கருணையைக் கனிவோடு பெற்றுக்கொள்ள நம்மிடமுள்ள கர்வத்தை வேரறுப்போம். கல்லான இதயத்தை கனிவுள்ள இதயமாக மாற்றுவோம். அப்பொழுது கடவுளின் அருளையும் ஆசியையும் நிறைவாகப் பெறமுடியும்.

இறைவேண்டல் :
கருணையின் தெய்வமே இறைவா! எங்கள் வாழ்வில் கர்வத்தை அகற்றி தாழ்ச்சியோடு அனைவரையும் மதித்து நடக்கத் தேவையான அருளைத் தாரும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

7 + 2 =