கண்முன் துயருறும் அயலாருக்கு ஆறுதலா நாம்! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


தவக்காலம் - இரண்டாம் வியாழன் - I. எரே: 17:5-10; II. தி.பா: 1:1-2.3.4,6; III. லூக்: 16:19-31

சில நாட்களுக்கு முன் இணையத்தில் நான் கண்ட குறும்படம் இவ்வாறாக அமைகிறது. ஒரு ஏழைச்சிறுமி பணக்கார வீட்டில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். உடல் நிலை சரியில்லாத தாய், பள்ளிக்குச் செல்லும் சிறு வயது தம்பி இவர்களின்  தேவையை நிறைவேற்ற சிறுவயதிலேயே தன் படிப்பை ஓரங்கட்டிவிட்டு வீட்டு வேலைக்குச் சென்றாள். ஒரு நாள் அவ்வீட்டில் ஏதோ விழா  நடைபெற்றது. வருகிற அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. பல நாள் பட்டினியாய் இருந்த அந்த சிறுமி அன்று முதலாளி தனக்கு பிரியாணி தருவார் என்ற நம்பிக்கையில் இருந்தார். விருந்தினர்கள் அனைவரும் சென்றவுடன் முதலாளி அம்மாவின் கட்டளைப்படி எச்சி இலைகளையெல்லாம் அப்புறப்படுத்தி, வீட்டைச் சுத்தம் செய்து வேலைகளையெல்லாம் முடித்த சமயத்தில், தன்னை அழைத்த முதலாளி அம்மாவின் குரலைக் கேட்டு மகிழ்ச்சியுடன் ஓடினாள், தனக்கு பிரியாணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில். முதலாளியம்மாவும் ஒரு தட்டில் பாத்திரத்தில் மிச்சமிருந்த எல்லா பிரியாணியையும் பரிமாறினார். எல்லாவற்றையும் சாப்பிட முடியுமா என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் அந்த பிரியாணியைக் கொண்டுபோய் தன் வீட்டு நாய்க்கு வைக்கச் சொன்னார் அந்த முதலாளி அம்மா. அந்த நாயை விட தனது தரம் குறைந்துவிட்டதை எண்ணி கண்ணீரோடு அந்த உணவை நாய்க்குக் கொடுத்துவிட்டு, குளிர்சாதனப் பெட்டியிலிருந்து முதலாளி அம்மா எடுத்து வைத்திருந்த பழைய சாதத்தை உண்ணத் தயாரானாள் அச்சிறுமி.

இந்நிகழ்ச்சி நம் கண்களில் நிச்சயம் கண்ணீர் வரவைக்கலாம் அல்லது இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? என்ற கேள்வியையும் எழுப்பலாம். இன்றைய நற்செய்தியில் நாம் காணும் ஏழை இலாசர் மற்றும் செல்வந்தரைப் பற்றிய உவமை இக்குறும்படத்தை ஒத்ததாக இருப்பதை நம்மால் உணரமுடிகிறது. உவமையில் செல்வந்தரும், குறும்படத்தில் உள்ள முதலாளியம்மாவும்  தவறு ஒன்றும் செய்துவிடவில்லை. ஆனால் உள்ளதைப் பகிரும் மனமில்லாமையே அவர்களின் பெருங்குற்றமாகச் இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. தங்கள் முன்னிலையில் துயருறுபவர்களைக் கண்டு கொள்ளாமல் தாங்கள் மட்டும் மகிழ்ந்திருப்பது மனித நேயமில்லை என்பதைத் தெளிவாக விளக்குகிறது.

"உடையது விளம்பேல்" என்று ஆத்திச்சூடியில் ஔவையார் கூறியிருக்கிறார். அதன் உண்மையான பொருளை நாம் உணர்ந்திருக்கிறோமா? இல்லாதவர்முன் நம்மிடம் இருக்கின்றவற்றை பற்றி பெருமையாய் பேசுவதும், அவர்கள் வருத்தமடையும் அளவுக்கு பகட்டாய் நடந்துகொள்வதும் கூடாது என்பது தான் அதன் பொருள். நம் வாழ்விலும் இத்தகைய செயல்கள் நடக்கத்தான் செய்கின்றன. அப்படி நாம் நடந்து கொள்ளும் சமயங்களில் இல்லாதவர்கள் நிலையில் நம்மை வைத்துப் பார்த்தால்தான் அவர்களுடைய வலியையும் வேதனையையும் நம்மால் உணர முடியும். அப்படி ஒரு வலியைத்தான் ஏழை இலாசர் அனுபவித்திருப்பார்.

இவ்வுவமை மூலம் இயேசு கூறும் செய்தி இதுதான். நமக்கு அருகில் ஒருவர் துயரப்படும் போது நாம் மகிழ்ந்திருப்பது முறையல்ல. நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து இருவரும் மகிழ்வாக இருப்பதே சிறந்தது. அதுவே மனித நேயம். இக் கருத்தை ஆழமாக உணர்ந்து பகிர்ந்து வாழும் வரத்தை இறைவனிடம் வேண்டுவோம்.

இறைவேண்டல்

அனைத்தையும் எமக்காய் இழந்த இறைவா! எம் கண்முன் துன்புறும் அயலாருக்கு உதவும் மனம் தாரும் ஆமென்.

Add new comment

8 + 5 =