கண்டு கொள்வோமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


திருவருகைக் காலம் இரண்டாம் சனி
I : சீஞா:   48:1-4, 9-11
II: திபா: 80: 1,2, 14-15, 17-18
III : மத்: 17: 10-13

நாம் வாழும் இந்த உலகத்தில் ஒருவர் ஒருவரை ஏற்றுக்கொண்டு அன்பு செய்து வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இந்த உலகத்தில் மனிதநேயமில்லாத செயல் என்று சொன்னால் அது கண்டுகொள்ளப்படாமையாகும். எனவேதான் புனித அன்னை தெரசா  கண்டுகொள்ளப்படாமை மிகவும் கொடிய நோய் என்று கூறியுள்ளார். ஆனால்  நாம் வாழ்கின்ற இந்த சமூகத்தில் இந்த கண்டுகொள்ளப்படாமை என்ற நோயானது தலைவிரித்தாடுகின்றது. அந்த நோயை குணப்படுத்த ஒரே வழி ஏற்றுக்கொண்டு அன்பு செய்வது. அதில்தான் வாழ்வின் முழுமையையும் நிறைவையும் காணமுடியும்.

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசுவிடம்  சீடர்கள் "எலியா தான் முதலில் வர வேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே,  அது எப்படி?" என்று கேட்டார்கள்.  இந்தக் கேள்வி யூத சமூகத்தினர் கொண்டிருந்த மனநிலையை பிரதிபலிக்கின்றது. ஆண்டவர் இயேசு அவர்களுக்குப் பதில் கொடுக்கும் விதமாக "எலியா வந்து எல்லாவற்றையும் சீர்படுத்த போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் : எலியா ஏற்கனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிட மகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள் " என்று இயேசு பதிலளித்தார்.  இந்த பதில் மூலம் எலியாவின் மறுவுருவமாக ஆண்டவரின் பணியை மிகச் சிறப்பாக செய்து இயேசுவின் வருகைக்காக ஆயத்தப்படுத்திய திருமுழுக்கு யோவானை கண்டுகொள்ளாத மனநிலையை இயேசு வெளிப்படுத்தினார்.  

கடவுள் ஒவ்வொரு முறையும் பாவங்களிலிருந்து மனம் மாறி நற்செய்தியை நம்பி மீட்புப் பெற வேண்டும் என்பதற்காக பல வாய்ப்புகள் கொடுத்த போதிலும் கண்டுகொள்ளாத தன்மையால் கடவுள் நமக்கு வழங்கும் மீட்பினை இழந்து வருகிறோம். கடவுள் நமக்குத் தாயாகவும் தந்தையாகவும் உற்ற நண்பராகவும் உடன் பயணித்தாலும் அவரின் அன்பையும் அருளையும் கண்டுகொள்ளாமல் திசைமாறிய பாவ வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். இத்தகைய மனநிலையைக் களைந்து ஆண்டவர் இயேசுவின் வார்த்தைக்கு முழுமையாக செவிமெடுத்து    இறைநம்பிக்கைக்கு சான்று பகர அழைக்கப்பட்டுள்ளோம். 

திருவருகைக் காலத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்ற நாம் ஆண்டவரின் வார்த்தையை நம்பி அவரின் வருகைக்காக மனம் மாறி நம்மையே ஆயத்தப்படுத்துவோம். இந்த உலகத்தில் கண்டுகொள்ளப்படாமலிருக்கும்  நோயாளர்கள், கைம்பெண்கள், அனாதைகள், ஏழைகள், ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டோர் ஒவ்வொருவரையும் அன்பு செய்து அவர்களின் வாழ்வு வளம் பெற உழைக்க முன்வருவோம். அடையாளம் காணப்படாத நபர்களை அடையாளம் காண முயலுவோம். வாழ்வில் எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும் நபர்களை ஊக்கமூட்டி உற்சாகமூட்டி தன்னம்பிக்கையோடு வாழ வழிகாட்டுவோம். அப்பொழுது நாம்  கொண்டாடவிருக்கும் இந்த கிறிஸ்து பிறப்பு விழாவும் இரண்டாம் வருகைக்கான ஆயத்தமும் பொருள் நிறைந்ததாக இருக்கும். எனவே ஆண்டவருடைய வார்த்தையைக் கண்டுகொண்டு வாழ்வு பெறுவோம். கண்டுகொள்ளப்படாத நபர்களை அன்பு செய்து அவர்களில் இயேசுவைக் காண முயற்சி செய்வோம். அத்தகைய நல்ல மனநிலையை வேண்டித் தேவையான அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல்
வல்லமையுள்ள ஆண்டவரே!  ஒவ்வொருவருக்கும் நீரே உமது அருளையும் ஆற்றலையும் தருவீராக. குறிப்பாக இந்த சமூகத்தில் கண்டுகொள்ளப்படாத நிலையிலிருந்து கண்டு கொள்ளக் கூடிய உயர்ந்த நிலைக்கு நாங்கள் செல்ல அருளைத் தாரும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 0 =