Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கடவுள் நம்மோடு! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection
கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா
தவக்காலம் - ஐந்தாம் வியாழன்; I: எசா: 7: 10-14; 8: 10b; II: திபா: 40: 6-7. 7-8. 9. 10; III: எபி: 10: 4-10; IV: லூக்: 1: 26-38
இன்று திருஅவையானது கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழாவைக் கொண்டாடுகிறது. மீட்பு வரலாற்றில் மிக முக்கிய நாளிது. தன் ஒரே மகனை உலக மாந்தரின் மீட்புச் சின்னமாய் தெரிவித்த நாளிது. கடவுளின் கரத்தில் அன்னை மரியா கருவியாக உருமாறிய தினம் இது. எல்லாவற்றிற்கும் மேலாக "நான் என்றும் உன்னோடு "என்று கடவுள் அறுதியிட்டு அறிவித்த புனித நாள் இந்த நாள். இப்பெருவிழா கடவுள் நம்மோடு இருப்பது போல நாமும் கடவுளின் உடனிருப்பை நமது உடனிருப்பின் மூலம் மற்றவருக்கு உணர்த்தவே நம்மை அழைக்கின்றது.
ஒரு அருட்சகோதரி தான் பணிசெய்யும் தளத்தில் தன்னோடு பணிபுரியும் ஒரு பெண் மிகந்த துயரத்தில் ஆழ்ந்திருப்பதை உணர்ந்தார். அப்பெண் யாரிடமும் பேசாமல் தனியாகவே இருப்பதையும்,சரிவர உணவு அருந்தாததையும் இச்சகோதரி கவனித்துக் கொண்டிருந்தார். இப்படியே அவரை விட்டுவிடக்கூடாது என எண்ணிய அருட்சகோதரி அப்பெண் தனியாக இருந்த தருணத்தில் அவரருகில் சென்று உரையாட ஆரம்பித்தார். முதலில் மறைக்க முயற்சித்த அப்பெண் பின்பு தன் மனத்துயரம் அனைத்தையும் கொட்டித் தீர்த்தார். தனக்கென யாருமில்லை, என் சந்தோஷத்தையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்ள இயலவில்லை. என அழுத அப்பெண்ணிடம் அச்சகோதரி தான் இருப்பதாக ஆறுதல் கூறி கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய மன அழுத்தத்திலிருந்து வெளிக்கொணர்ந்தார். சில நாட்களுக்குப் பின் அப்பெண்மணி நல்ல மாற்றத்துடன் காணப்ட்டார். அருட்சகோதரியின் மூலமாக கடவுளின் உடனிருப்பை உணர்ந்ததாகப் பலரிடம் பகிர்ந்து கொண்டார்.
பாவத்தின் பிடியில் சிக்கித் , அடிமைத்தனம் எனும் துயரத்தில் தவித்த இஸ்ரயேல் மக்களுக்கு கடவுள் தன் உடனிருப்பை பலவாறு எடுத்துரைத்தார். எத்தனையோ நீதித்தலைவர்கள்,எத்தனையோ அரசர்கள், பல இறைவாக்கினர்களை அனுப்பியும் கடவுளின் உடனிருப்பை அவர்கள் உணரத் தவறியதால் தானே மக்களோடு இருந்து அவர்களின் துயர் துடைக்க எண்ணினார் இறைவன். தன் ஒரே மகனை மனிதனாய் பிறக்கவைத்து , மனிதனின் சுக துக்கங்களில் உடனிருப்பவராக அனுப்பி வைக்க திருஉளம் கொண்டார் இறைவன்.இயேசுவும் கடவுளின் உடனிருப்பை தன்னுடைய அன்பான வார்த்தைகளால்,இரக்கத்தால், அருஞ்செயல்களால், போதனைகளால் வெளிப்படுத்தினார்.
இன்றைய பெருவிழா நமக்கு உணர்த்தும் செய்தி இதுதான். இன்றைய முதல் வாசகத்தில் எசாய இறைவாக்கினர் "இம்மானுவேல் .கடவுள் நம்மோடு" என வாக்களிக்கிறார். அவ்வாக்கு நிறைவேறும் வண்ணம் நம் அன்னை மரி கடவுளின் வார்த்தையை ஏற்று இயேசு என்னும் மீட்பர் வழியாக உலகம் இறை உடனிருப்பை உணரத் தன்னைக் கையளிக்கிறார் என நற்செய்தியில் வாசிக்கிறோம். இவ்வாறாக அன்னை மரியா கடவுளின் உடனிருப்பை தன் மூலம் பிறருக்கு வெளிப்படுத்துகிறார்.
இதோ ஆண்டவரின் அடிமை என்று இறைவார்த்தைக்குப் பணிந்து இறைவிருப்பத்தை தனது விருப்பமாக ஏற்றார் நம் அன்னை. கடவுளின் உடனிருப்பை நம்மூலம் வெளிப்படுத்த இறை திருஉளத்திற்கு நாம் பணிய வேண்டும் என்பதற்கு மரியா சான்றாகிறார். அதே போல கடவுள் சமூகத்திலே உயர்ந்த அந்தஸ்து உள்ளவர்கள் மூலம் தன்னை வெளிப்படுத்துவதைவிட எளிய சாதாரண சாமானிய மக்களைத் தான் தேர்ந்துகொள்கிறார் என்பதற்கும் மரியா மிகச்சிறந்த உதாரணம். கடவுள் இன்றும் நம்மைப் போன்ற எளிய சாதாரண மக்களைத் தான் எதிர்பார்க்கிறார். நாம் கடவுளின் கரத்தில் கருவிகளாக மாற அழைக்கப்பட்டுள்ளோம் என்பதையும் நாம் உணர அழைக்கப்பட்டுள்ளோம்.
கடவுளுடைய விருப்பத்தின் படி நம் வாழ்வை அமைத்துக் கொள்ளும் போது நமது வாழ்வும் கடவுள் நம்மோடு என்ற நற்செய்தியின் அறிவிப்பாக மாறும். நமது அன்பு கடவுளின் அன்பை வெளிப்படுத்தும். நமது கருணை கடவுளின் கருணைக்குச் சான்றாகும். துன்பம், துயரம்,தனிமை, வேதனை,நோய் போன்றவற்றால் துன்புறும் மக்களுடன் நாம் உடனிருப்பது கடவுளின் உடனிருப்பை நிச்சயம் பிரதிபலிக்கும்.ஆம் அன்பு நண்பர்களே கடவுள் நம்மோடு என நாம் நம்புகிறோம். அதைப் பிறரும் நம்பும் பொருட்டு நம்முடைய உடனிருத்தல் அமைய வேண்டும். நாமும் அன்னைமரியாவைப் போல, இயேசுவைப் போல கடவுளின் பிரசன்னத்தைப் பிறருக்குக் கொடுக்கும் வரத்தை கடவுளிடம்
கேட்போம்.
இறைவேண்டல்
எம்மோடு என்றும் வாழும் இறைவா! நாங்கள் எங்களது உடனிருப்பால் "கடவுள் நம்மோடு" என்ற அனுபவத்தைப் பிறருக்கு வழங்கிட வரம் தாரும். ஆமென்.
Add new comment