கடவுள் அன்பாய் இருப்பதைப் போல நாமும் அன்பாய் இருக்கத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


திருக்காட்சி விழாவுக்குப் பின் செவ்வாய்
I: 1 யோ:  4: 7-10
II : திபா 72: 1-2. 3-4ab. 7-8 
III: மாற் 6: 34-44

 கடவுள் அன்பாய் இருப்பதைப் போல நாமும் அன்பாய் இருக்கத் தயாரா? 

இன்றைய முதல் வாசகமானது கடவுள் அன்பாய் இருக்கிறார் என்ற யோவானின் திருமடலின் வார்த்தைகளாகும். கடவுள் அன்பே உருவாய் இருக்கிறார். அன்பு செய்பவர்கள் அனைவருமே கடவுளிடமிருந்து பிறந்தவர்கள் என்று கூறும் யோவானின் வார்த்தைகள் அன்பின் தெய்வீகத்தன்மையை நமக்கு விளக்குகிறது. அன்பு கடவுளின் உடனிருப்பின் அடையாளம். ஏனெனில் அன்பிலிருந்தே எல்லா நற்குணங்களும் தோன்றுகின்றன. கடவுளே எல்லா நன்மைக்கும் ஊற்றானவர் என்பதை நாம் அறிவோம். அவ்வாறெனில் கடவுள் அன்பாயிருக்கிறார். அன்பே கடவுள் என்று கூற்று எத்துணை உண்மை என்பது நமக்கு விளங்கும். மேலும் நாம் கடவுள் மேல் அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, கடவுள் நம்மேல் கொண்ட அன்பினால் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார் என்பதிலேயே அன்பின் உண்மைத் தன்மை விளங்குகிறது என்ற வார்த்தைகள் நமது அன்பின் உண்மைத் தன்மையை சோதித்தறிய அழைப்பு விடுக்கிறது. ஆம் பிறருக்காக நம்மை சிறிதளவேனும் இழக்கத் தயாரானால் அங்கே அன்பு உண்மையாகிறது. தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு இல்லை என்றார் இயேசு. ஆம் நாம் அன்பாயிருக்க வேண்டுமெனில் கடவுள் தன் ஒரே மகனை நமக்காய் இழந்ததைப் போல, இயேசு தன்னையே நமக்காய் இழந்ததைப் போல நாமும் இழக்க அல்லது கொடுக்க வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகம் இக்கருத்தை நமக்கு இன்னும் சிறப்பாக விளக்கும் விதமாக அன்பின் பல பரிமாணங்களை விளக்குகிறது. ஐந்து அப்பங்களைச் பலுகச் செய்த இயேசுவின் வல்ல செயலே இன்றைய நற்செய்திப் பகுதி. இப்பகுதியை நாம் பலகோணங்களில் தியானித்திருப்போம். இன்று அன்பின் அடிப்படையில் தியானிப்போம்.

முதலாவதாக தன்னுடைய வார்த்தைகளைக் கேட்க வந்த மக்களைக் கண்டு இயேசு பரிவு கொள்கிறார். இப்பண்பு அவருடைய அன்பின் வெளிப்பாடே ஆகும். 
நாள் முழுதும் இயேசுவின் போதனையைக் கேட்ட மக்கள் பசியாய் இருப்பார்கள் என அவர்களை அனுப்பிடச் சொன்ன சீடர்களுக்கும் அன்பு உணர்வு இருந்ததை நாம் மறுக்க முடியாது.ஒருபுறம் மக்களுக்கு உணவு பரிமாறுவதிலிருந்து தாங்கள் தப்பிக்க எண்ணினாலும் அவர்கள் பசியாய் இருக்கிறார்கள் என உணர்ந்து அவர்களுக்காக பரிந்து பேசியது கூட ஒருவகை அன்புதான். 

தன்னிடமுள்ள ஐந்து அப்பங்களையும் இரு மீன்களையும் மனமுவந்து இழக்கத் துணிந்த அச்சிறுவனின் அன்பு பாராட்டுதற்குரியது. ஏனெனில் தனக்குப் பற்றாக்குறை ஆகிவிடுமே என எண்ணாமல் அதை பிறருக்காகக் கொடுத்தான் அச்சிறுவன். இறுதியில் அனைவருமே தங்களிடமுள்ளதைப் பகிர்ந்ததால் அங்கே? அப்பங்கள் மட்டுமல்ல மாறாக அன்பு பலுகிப் பெருகியது.

அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. அதாவது அன்புடையவர் எதையும் தனக்கெனக்கொள்வதில்லை என்றார் வள்ளுவர். கடவுளின் பிள்ளைகளான நாமும் அவரைப் போல அன்பாயிருக்க வேண்டுமெனில் கொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இழக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு நாம் இழப்பது இழப்பல்ல. அதற்கான வெகுமதியை அன்பின் உருவாம் நம் கடவுள் அருள்வார். அவரைப் போல அன்புடையவர்களாய் மட்டுமல்ல அன்பாகனே இருக்கத் தயாரா?

 இறைவேண்டல் 
அன்பே இறைவா!
உம்மைப் போல நாங்களும் அன்பாய் இருக்க வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

4 + 10 =