கடவுளோடு இணையான எண்ணங்களோடு


God's intention

பொதுக்காலத்தின் 25 ஆம் ஞாயிறு - I. எசா: 55:6-9, II. திபா: 145:2-3,8-9,17-18, III. பிலி: 1:20-24,27, IV. மத்: 20:1-16

தேர்வுகள் முடிவுற்று விடுமுறை முடிந்து பள்ளிக்கு மாணவர்கள் மீண்டும் வந்த போது  விடைத்தாள்கள் கொடுக்கப்பட்டன. விடைத்தாள்களை வாங்கியபின் வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் சரிபார்த்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு பார்க்கத் தொடங்கினர். அச்சமயத்தில் இரு மாணவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு மாணவன் மற்றொருவரைப் பார்த்து ஆசிரியருக்கு அந்த மாணவரைப் பிடித்ததால் அதிக மதிப்பெண் வழங்கியதாகவும் தன்னை பிடிக்காததால் வேண்டுமென்றே குறைவான மதிப்பெண்கள் தந்ததாகவும் குற்றம் சாட்டினான். இதை அறிந்து கொண்ட ஆசிரியர் அந்த மாணவரை அழைத்து அன்புடன் பேசினார். அப்போது தனக்கு எல்லா மாணவர்களும் சமம் எனவும் அனைவரும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதே தன்விருப்பம் என்று கூறினார். வகுப்பறையில் அனைவருக்கும் ஒன்றுபோல் தான் பாடம் எடுக்கப்படுகிறது. தனிப்பட்ட முறையில் யாருக்கும் பாடம் சொல்லித்தரப்படவில்லை. ஒவ்வொருவரின் தனிப்பட்ட முயற்சியாலேயே வெற்றியும் தோல்வியும் அமையும் என்பதை தெளிவாக எடுத்துக்கூறி மாணவரைப் புரியவைத்தார். தன் தவறை உணர்ந்த மாணவன் இனிமேல் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை பயன்படுத்தி நல்ல மதிப்பெண் எடுப்பதாகக் கூறிச்சென்றான்.

இன்றைய வழிபாடு கடவுளைப்போன்ற எண்ணம் கொண்டவர்களாய் வாழ நம் ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுக்கிறது. அவரைப்போன்ற சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள முதலில் கடவுளை நாம் அறிய வேண்டும். நற்செய்தியில் கூறப்பட்ட திராட்சைத் தோட்ட பணியாளர் உவமை  கடவுள் பாராபட்சம் பார்க்காமல் அனைவரையும் சமமாக அன்பு செய்கிறார், தாராள மனமுடன் இருக்கிறார் என்று நாம் ஏற்கனவே தியானித்திருக்கின்றோம்.

அப்படியானால் ஏன்  பல ஏற்றத்தாழ்வுகள் இவ்வுலகில்? பணம்படைத்த மக்கள் ஒருபுறம்.கால் வயிற்றுக் கஞ்சிக்கு கூட வழியில்லாதவர் மறுபுறம். ஆரோக்கியமாக வாழ்பவர் ஒருபுறம் இருக்க நோயால் தினம் தினம் செத்துப்பிழைக்கும் மனிதர்களை நாம் பார்க்கிறோம்.  சிலர் அறிவில் சிறந்திருக்க பலர் குறைவுடையவராய் இருக்கிறார்கள். இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம். செல்வம், ஆரோக்கியம்,அறிவு, மகிழ்ச்சி இவை அனைத்தையும் அருள்பவர் இறைவனன்றி வேறில்லை. ஆனால் நல்லோர் மேலும் தீயோர் மேலும் ஒன்றாக மழை பொழியும் கடவுள் ஏன் இவற்றை யெல்லாம் சமமாக கொடுக்கவில்லை என்ற கேள்வி நம்முள் எழலாம். கடவுளை அறிந்து கொள்வதற்கு இக்கேள்விகள் முட்டுக்கட்டையாக தோன்றலாம்.

ஆனால் உண்மை என்ன?கடவுள் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளைத் தருகிறார். அந்த வாய்ப்புகளைப் சிறந்த முறையில் பயன்படுத்தும் போது அதற்கான தகுந்த ஊதியத்தை நாம் பெறுகிறோம். ஆனால் பல சமயங்களில் இப்படிப்பட்ட சரியான புரிதல் நம்மிடம் இருப்பதில்லை.  நாம் விரும்பியவை நிறைவேற வேண்டும் என்ற எண்ணம் நம்மிடையே உயர்ந்து நிற்கிறது.அதனால் நம் வாழ்வின் நிகழ்வுகளில் நம் எண்ணங்கள் நிறைவேறாத போது துவண்டு விடுகிறோம். கடவுளின் திட்டம் என்ன என்பதை உணர தவறுகிறோம்.

இன்று நாம் தியானிக்கும் நற்செய்தியில் திராட்சைத் தோட்ட உரிமையாளர் பணிக்கு அமர்த்தப்படாமல் இருந்த வேலையாளர்களுக்கு நல்ல வாய்ப்பைத் தருகிறார்.ஏனெனில் அவர்கள் தங்களை யாரும் வேலைக்கு அமர்த்தவில்லை என்று எண்ணி வீடுகளுக்கு சென்று உறங்கவில்லை. மாறாக சரியான வாய்ப்பைக் கண்டறிய காத்திருந்தனர். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி உழைத்து ஊதியமும் பெற்றனர். வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற மனநிலையை மாற்றி சரியான வாய்ப்பை பெற காத்திருந்து முயற்சி செய்ய வேண்டும் என்பதையே இந்நிகழ்வு நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் "என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல. உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல" என்ற வார்த்தைகளை நாம் வாசிக்கின்றோம்.
ஆங்கிலத்தில் Man proposes God disposes என்ற பழமொழி உள்ளது. நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்பதே அதன் பொருள். இது நமக்குத் தெரிந்திருந்தாலும் வாழ்க்கை அனுபவங்களில் அதை பொருத்திப்பார்க்க தவறுகிறோம். அப்போதுதான் நம்மிடையே ஒப்பிடுதலும் ஏற்றத்தாழ்வுகளும் வளர்கின்றன.   இதுவே நம் எண்ணங்களையும் கடவுளைய எண்ணங்களையும் வேறுபடுத்துகிறது.வாழ்வில் இத்கைய சரியான புரிதலும் உயரிய எண்ணங்களும் இல்லாததாலேயே நாம் பல நெருக்கடிகளுக்கு உள்ளாகிறோம்.

மேலும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் "நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே" என்று கூறுகிறார். ஆம் நாம் நம் சொந்த எண்ணங்களுக்கும் புரிதல்களுக்கும் பிறருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கத்திற்கும் இறக்க வேண்டும். அப்போது கடவுளின் எண்ணங்களை உய்த்துணர இயலும்.எனவே நம் வாழ்வில் நம் எண்ணங்களையும் புரிதல்களையும் கடவுளுடையதைப்போல மாற்ற முயலுவோம் கடவுளின் திட்டங்களை ஏற்று கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் முன்னேறி கடவுளின் பாரபட்சமில்லா அன்புக்கு  சாட்சிகளாகும் வரம் வேண்டுவோம்.

இறைவேண்டல்

அனைவரையும் அன்புசெய்யும் இறைவா எங்கள் சிந்தையில் எழும் எண்ணங்கள் யாவும் உம் எண்ணங்களைப்போல மாற்றும். இதனால் நாங்கள் எங்கள் வாழ்விலும் சமூகத்திலும் நடந்தேறும் நிகழ்வுகளை சரியாகப் புரிந்து கொண்டு கிடைக்கப்பெறும் வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் முன்னேறவும் வரம் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 0 =