கடவுளின் பெயரால் செல்பவர்களா நாம்? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


ஆண்டின் பொதுக்காலத்தின் இரண்டாம் புதன் 
I: 1 சாமு: 17: 32-33, 37, 40-50
II : திபா 144: 1. 2. 9-10
III: மாற்:   3: 1-6

கடவுளின் பெயர் வலிமை வாய்ந்தது. ஆற்றலும் வல்லமையும் உடையது. நாம் வாழும் இந்த உலகத்தில் மனத் துணிவோடும் முழு ஈடுபாட்டோடும் நம் வாழ்வை வாழ வேண்டுமெனில் கடவுளின் துணை நமக்குத் தேவை. கடவுளே துணையோடு அவர் பெயரால் நாம் செல்லுகிற பொழுது, வெற்றி நமக்கு நிச்சயம் உண்டு.இஸ்ரயேல் மக்களை மீட்க மோசே சென்ற போது இருக்கின்றவராக இருக்கின்றவர் நாமே என்ற கடவுளின் பெயரைத் தாங்கிச் சென்றலேயே அத்தனை இடர்களுக்கு மத்தியிலும் இஸ்ரயேலருக்கு எகிப்திலிருந்து விடுதலை பெற அவருக்கு வலிமை கிடைத்தது. 

இதேபோன்ற ஒரு நிகழ்வையே நாம் தாவீது  வாழ்வில் பார்க்கிறோம். தாவீது கோலியாத்து மீது கொண்ட வெற்றியை இன்றைய முதல் வாசகம் சுட்டிக் காட்டுகிறது. பெலிஸ்தியனாகிய கோலியாத்து இஸ்ராயேல் மக்களை இழிவுபடுத்தும் விதமாக பேசி, தன்னை வெற்றி கொள்ள வருமாறு சவால் விடுத்தான். அனைவரும் பயந்து ஒடுங்கிய அந்தச் சூழலிலும் கூட தாவீது சிறுவனாக இருந்த போதிலும்,  தன்னுடைய  இஸ்ரயேலைக்  காப்பாற்ற வேண்டும் என்றும் தங்கள் சார்பாக இருக்கக்கூடிய கடவுள் வலிமை வாய்ந்தவர் என்பதையும் வெளிப்படுத்தும் விதமாக துணிந்து கடவுள் பெயரால் சென்றார். தாவீது கடவுளால் தேர்ந்தெடுக்கப்படும் பொழுது சிறுவன் என அறிமுகப்படுத்தப்பட்டார்.  போர்க்களத்திலும் கோலியாத்தோடு போரிட வந்த பொழுது "நீயோ சிறுவன் ; அவனோ இளமை முதல் போரில் பயிற்சி பெற்றவன் " (17: 33) என்று  சவுலால் இகழ்ச்சியாக  குறிப்பிடப்பட்ட தாவீது இறுதியில் கடவுளின் பெயரால் கம்பீரமான  கோலியாத்தை வீழ்த்தினார்.  கோலியாத்தை தாவீது எதிர்கொண்டு வந்த பொழுது "நீ கோலுடன் என்னிடம் வர, நான் என்ன நாயா?" என்று சொல்லித் தன் தெய்வங்களின் பெயரால் தாவீதைச் சபிக்கத் தொடங்கினான். ஆனால் தாவீது துணிவோடு ஆண்டவரின் பெயரால் எளிதாக வீழ்த்தி கடவுள் எப்படிப்பட்டவர் என்பதை அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாக வெளிப்படுத்தினார்.

இன்றைய நற்செய்தியில்ஆண்டவர் இயேசுகை சூம்பியவரை ஓய்வுநாளில் குணப்படுத்தினார்.இயேசுவைப் பொறுத்தவரை தான் செய்வது அனைத்தும் தந்தையின் திருவுளப்படிப் படிதான் நடக்க வேண்டும் என்தில் தெளிவாயிருந்தார்.
அதனால் தான் தந்தையின் மனநிலையில் ஒரு மனிதனுக்கு நிறைவாழ்வு அளிக்க மனமுவந்தார். ஆம் தந்தையின் பெயரால் அவர் செய்த எல்லா காரியங்களும் தந்தை அருளிய மீட்பை மக்களுக்கு நிறைவாகத் தந்தது.
எனவேதான் சட்டத்தின் பெயரால் காரியங்களைச் செய்த  பரிசேயர்களும் மறைவல்லுநர்களும் தந்தையின் பெயரால் வல்ல செயல்கள் செய்த இயேசுவுக்கு முன் வாயடைத்து நிற்கும் நிலை ஏற்பட்டது. ஏனெனில் தந்தையின் பெயருக்கு அத்தகைய வல்லமை உண்டு. 

அன்புக்குரியவர்களே இந்த உலகத்தின் தீமைகளையும் நம்முடைய தீமைகளையும் வேரோடு களைய வேண்டும் என்றால், நிச்சயமாக  கடவுளுடைய திருப்பெயரால் அனைத்தையும் செய்ய வேண்டும்.ஆண்டவரின் பெயரால் தொடங்கும் எக்காரியமும் நம் வாழ்வில் மகிழ்வைத் தரும். வெற்றியைத் தரும். எனவே தான் நம்முடைய செபங்கள், செயல்கள் அனைத்தையும் தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் தொடங்குகிறோம். நிறைவு செய்கிறோம். அதே போல நாம் பிறரிடம் செல்லும் போதும் ஆண்டவருடைய பெயரால் அவருடைய மகன் இயேசுவைப் போல சென்றால் நம் மூலம் பிறருக்கு மகிழ்ச்சியும் நிறைவும் கிடைக்கும். எனவே கடவுளின் பெயரை நம் உள்ளத்தில் பதிப்போம். அவர் பெயரைத் தாங்கியவர்களாய் அனைவருக்கும் நன்மை செய்யப் புறப்படுவோம்.

இறைவேண்டல்

ஆண்டவரே!  உம் பெயரைச் சொல்லும் போதே எமக்கு நம்பிக்கை பிறக்கிறது. வலிமை பிறக்கிறது. இதை ஆழமாக உணர்ந்து உம் பெயரைத் தாங்கிய தூதர்களாய் நாங்கள் நன்மை செய்யப் புறப்பட வரம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

6 + 6 =