கடவுளின் பிள்ளைகளாய் பாவத்தைத் தவிர்த்து நிமிர்ந்து நிற்கத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 30 ஆம்  திங்கள்; I: உரோ:  8:12-17; II: திபா:67:2,4,6-7,20-21; III : லூக்: 13:10-17

எல்லோரும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்றுதான் விரும்புவர். அதற்காக பணத்தையும், பதவியையும், படிப்பையும், அந்தஸ்தையும்  தனைக்குப்பின் ஒரு கூட்டத்தையும் தேடிச் செல்வோர் பலர். ஆனால் நாம் தலை நிமிர்ந்து வாழ இவையெல்லாம் தேவையில்லை. நாம் உலகின் முன்னும் ஆண்டவர் முன்னும் நிமிர்ந்து நிற்க பாவமில்லாத வாழ்வை வாழ வேண்டும். இக்கருத்தையே இன்றைய வாசகங்கள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல் ஊனியல்புக்கு நாம் அடிமைப்பட்டவர்கள் அல்ல என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். அவ்வாறு ஊனியல்பின் படி பாவ வாழ்வு வாழ்ந்தால் நாம் மடிந்து போவோம் எனவும் மாறாக நாம் தூய ஆவியின் துணையோடு ஊனியல்பை வெல்லும் போது நிலைவாழ்வு அடைவோம் என்பதையும் அவல் தெள்ளத் தெளிவாக  விளக்குகிறார். ஊனியல்பை வெல்ல நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். மனம் மாறியவர்களாய் தூயஆவியாரின் துணையோடு அப்பா தந்தாய் என அழைக்கும் போது ஊனியல்பின் அடிமைத் தனத்திலிருந்து நம்மால் நிச்சயம் விடுதலை பெறமுடியும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பதினெட்டு ஆண்டுகளாக தீய ஆவியால் பீடிக்கப்பட்டு நோயால் வருந்திய பெண்ணை இயேசு குணமாக்கும் நிகழ்வை நாம் காண்கிறோம். அப்பெண் நிமிர்ந்து பார்க்கக் கூட முடியாமல் கூன் விழுந்தவராய் இருந்தார். இயேசு அப்பெண்ணை தாமாக முன்வந்து அழைத்து குணமாக்கி னார். தம் இரக்கத்தால் அப்பெண்ணை தலை நிமிர்ந்து நிற்கச் செய்தார். இயேசு இந்நற்செயலை ஓய்வு நாளில் செய்ததால் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் இயேசுவைக் குறைகூறினர். இச்செயலால் அவர்கள் உள்ளம் குறுகி மனதால் கூன் விழுந்தவராயினர். ஆம்.  தீய எண்ணாங்களும், அவற்றால் விளையும் செயல்களும் நம்மை கூன்விழுந்தவர்களாக மாற்றுகின்றன.

அன்புக்குரியவர்களே  பாவமற்ற மனமும் நோயற்ற உடலுமே நம் அனைவரையும் தலைநிமிர்ந்து வாழச்செய்கிறது. நம் ஆன்மா ஊனியல்பின் இச்சைகளைக் களைந்து தூயதாக இருக்கும் போது நமது உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே பாவ இயல்புகளைக் களைந்து தூய ஆவியின் துணையோடு கடவுளை நோக்கிச் செல்வோம். தலை  நிமிர்ந்து வாழ்வோம்.

இறைவேண்டல்

அன்பு இறைவா, ! உமது இரக்கத்தால் நாங்கள் பாவத்தைக் களையவும் ,உமது பிள்ளைகளாய் தலைநிமிர்ந்து வாழவும் அருள் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 1 =