கடவுளின் பிள்ளைகளாய் சோதனையை வென்றிடுவோமா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


ஆண்டின் பொதுக்காலத்தின் ஆறாம் செவ்வாய்
I: யாக்கோபு  1: 12-18
II :  திபா: 94: 12-13ய. 14-15. 18-19
III:  மாற்கு: 8: 14-21

ஒரு வயதான பாட்டி கோவிலின் வாசலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். அவ்வாறு அழுது கொண்டிருக்கும் போது ஒரு இளைஞன் அப்பாட்டியிடம் ஏன் அழுகிறீர்கள் என வினவ அப்பாட்டி  "ஏனப்பா கேட்கிறாய். கடவுள் என்ன ரொம்பவே சோதிக்கிறார்! "என்று சொல்லிக் கொண்டே மெதுவாக எழுந்து அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டார். அந்த இளைஞனும் தன்னுடைய கேள்விக்கு சரியான பதில் கிடைக்காததால் எழுந்து தன்னுடைய வேலைக்குச் சென்றுவிட்டான்.

இன்று நம்மிலே பலருடைய எண்ணமும் இதுதான். நமக்கு கஷ்டங்கள் வந்துவிட்டால் நாம் சொல்வது " கடவுள் என்ன ரொம்ப சோதிக்கிறார்" என்பதுதான். ஆனால்  நாம் ஆராய்ந்து நாம் படும் துன்பங்களுக்கு நாம்தான் காரணாமாக இருப்போம்.  புத்தர் சொன்னார் " ஆசையே துன்பத்திற்கு காரணம் " என்று. இன்றைய முதல் வாசகத்திலும் புனித யாக்கோபு கூறுவதும் இதுவே. ஆசைகளே நம்மைப் பாவம் செய்யத் தூண்டுகிறது. அப்பாவத்தால் நாம் பலவித சோதனைகளுக்கு உள்ளாகிறோம். இதை உணராமல் கடவுள் சோதிக்கிறார் எனக் கூறக்கூடாது. ஏனெனில் கடவுளிடமிருந்து நன்மை மட்டுமே வருகிறது. தீமைகள் அவரிடமிருந்து தொலைவில் இருக்கின்றன.

நம்முடைய ஆடம்பர வாழ்க்கையினால் வறுமைநிலைக்கு தள்ளப்பட்டோமெனில் அது கடவுள் தந்த துன்பமாகுமா? நம்முடைய பதவி பண ஆசைகளால் செய்யக் கூடாத காரியங்களைச் செய்துவிட்டு சிறை தண்டனை அனுபவித்தால் அது கடவுள் சோதிப்பதாகிவிடுமா? படிக்கின்ற நேரத்தில் கேளிக்கைகளை விரும்பிவிட்டு தேர்வில் தேர்ச்சிபெற இயலாமல் போனால் கடவுள் மேல் அக்குற்றத்தை சுமத்த இயலுமா? இவ்வாறாக நாம் படும் துன்பங்களுக்கெல்லாம் நாம் தானே காரணமாகிறோம். இவற்றிலிருந்து விடுபட நாம் செய்ய வேண்டியவை என்னவெனில் கடவுளின் பிள்ளைகளாய்,அவர் தந்த நன்மைகளில் நிலைத்திருந்து நம் ஆசைகளையும் விருப்பங்களையும் குறித்து கவனத்துடன் வாழ்வதே.

இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு இச்செய்தியை தெளிவாய் உணர்த்துகிறது. இயேசு சீடர்களிடம் பரிசேயரைக் குறித்து கவனமாயிருங்கள். அவர்களின் வழியில் செல்லாமல், அவர்களின் வலையில் விழாமல் இருங்கள் என அறிவுரை கூறுகின்றார். ஆனால் அவர்களின் எண்ணம் எல்லாம் உணவில் மேல் இருக்கின்றது. அதனால் இயேசு அவர்களைச் சாடுகிறார். உங்கள் கண்கள் காண்பதில்லையா? காதுகள் கேட்பதில்லையா? என கோபமுடன் பேசுகிறார்.

எனவே அன்புக்குரியவர்களே நம்முடைய அன்றாட வாழ்வில் மிகக் கவனமுடன் வாழ்ந்து கடவுள் நமக்குத் தந்த நல்லவற்றை பயன்படுத்தி பாவத்திற்கு காரணமாகும் ஆசைகளைத் துறக்கக் கற்றுக்கொள்வோம். அப்படிச் செய்தால் தேவையற்ற சோதனைகளிலிருந்து நாம் விடுபடுவது திண்ணம். சிந்தித்து செயல்படுவோமா!

 இறைவேண்டல் 
நன்மைகளின் ஊற்றே!  தேவையற்ற ஆசைகளைக் களைந்து சோதனைகளை வென்றிடத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

15 + 4 =