கடவுளின் தூய ஆலயங்கள் நாமே! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 32 ஆம்  செவ்வாய்: I: எசேக்கியேல் 47:1-2,8-9,12:II: திபா: 45:2-3,5-6,8-9:III: 1 கொரி 3:9-11,16-17; IV: யோவான் 2:13-22
 

ஆலயம் என்றால் என்ன?
ஆ’ என்றால் ஆன்மாக்கள்.  ’லயம்’ என்றால் ஒருமைப்படுதல். உயிர்கள் மனம் ஒன்றி லயிக்கும் இடமே ஆலயம். மனம் சோர்வடையும்போது. புத்துணர்ச்சி அளிக்கும் இடம் ஆலயம் என்றும் பொருள் கொள்ளலாம். இன்னும் ஆழமாகச் சொன்னால்  ஆன்மாவினுள் பயணம் சென்று கடவுள் தருகின்ற அருளை அனுபவிக்கும் இடமே ஆலயம். மனித வாழ்வில் ஆலயம் அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. "கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் " என பழமொழி உள்ளது அல்லவா. 
அப்படிப்பட்ட ஆலயத்தை நாம் தூய்மையாக வைத்துக்கொள்வதுதானே அவ்வாலயத்தில் உறையும் கடவுளுக்கு நாம் அளிக்கும் மரியாதையும் அன்பும்.

வளர்ந்து வரும் இன்றைய கால மக்களிடையே ஆலயத்தைப் பற்றிய எண்ணம் எவ்வாறு இருக்கிறது? ஞாயிறு திருப்பலிக்கு செல்ல நமது இளைய தலைமுறையினர் தங்களை எவ்வாறெல்லாம் தயாரிக்கின்றனர் தெரியுமா?  உடுத்தும் உடை, அலங்காரப் பொருட்கள், காலணிகள் என அனைத்தும் இரு நாட்களுக்கு முன்பே தயாராகின்றன. தங்களின் புறத்தூய்மையையும் தோற்றத்தையும் சிறப்பாக அமைக்க மெனக்கெடும் இக்காலத் தலைமுறையினர் தங்கள் உள்ளத்தை தூய்மையாக்க எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என யோசிக்கும் போது மிஞ்சுவது ஏமாற்றமே. இளைய தலைமுறையினரை மட்டும் சொல்லிக்கொண்டு நாம் ஒதுங்கிவிட முடியாது. நாமும் பல வேளைகளில் நம் உள்ளமாகிய
ஆலயத்தை உதாசீனப் படுத்துகிறோம்.

அன்புக்குரியவர்களே இன்றைய நற்செய்தியில் நாம் இயேசு கோவிலை சுத்தம் செய்யும் நிகழ்வை வாசிக்கிறோம்.  நம் ஆண்டவர் இயேசு தன்னுடைய மிகுந்த கோபத்தை இந்நிகழ்வில் வெளிப்படுத்துகிறார்.வியாபரிகளையும் நாணயம் மாற்றுவோரையும் சாட்டையால் அடித்து விரட்டுகிறார்.

 அவருடைய கோபத்திற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா ? எல்லா மனிதரும் ஒன்று கூடி இறையருளை பெறுகின்ற சந்நிதானத்தை கூறுபோட்டு பணத்தின் அடிப்படையிலும் இனத்தின் அடிப்படையிலும் மக்களை மட்டப்படுத்திய யூதர்களின் மனநிலையே. பணக்கார யூதர்களின் இந்த மனநிலைதான் கோவிலைத் தீட்டுப்படுத்தியது.
இம்மனநிலையை இந்த ஒடுக்கு முறையை இயேசு கோபத்துடன்  விரட்டுகிறார்.

 நாம் எல்லாரும் ஆலயங்கள். நாம் புறத்திலும் தூய்மையாய் இருக்கவேண்டும். அகத்தில் இன்னும் அதிகம் தூய்மையாய் இருக்க வேண்டும். பிறரைப் பற்றிய சிறு தவறான எண்ணமோ, அன்பில்லா மனநிலையோ , பகையோ நம் உள்ளத்தை கரைபடுத்தும். நம் ஆன்மா இறைவனை சந்திப்பதற்கு தடையை ஏற்படுத்தும். ஆகவே லாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும் இந்நாளில் நாம் கடவுளைத் தொழும் ஆலயத்தையும் கடவுள் வந்து தங்கும் நம் உள்ளமாகிய ஆலயத்தையும் பேணிக் காப்போம். தூய்மையான ஆலயங்களாய்த் திகழ முயற்சிப்போம்.

 இறைவேண்டல் 
எங்களில் வாழும் இறைவா ! உம்மைத் தாங்கி வாழும் தூய ஆலயங்களாக நாங்கள் திகழ அருள் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

9 + 7 =