Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கடவுளின் தலைமுறையினரா நாம்? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
திருவருகைக் காலம் மூன்றாம் வெள்ளி
I : தொநூ: 49: 1-2, 8-10
II: திபா: திபா 72: 1-2. 3-4. 7-8. 17
III : மத் : 1: 1-17
கிறிஸ்துபிறப்பு விழாவை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இன்று நமக்கு இயேசுவின் மூதாதையர் பட்டியல் நற்செய்தி வாசகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியை நாம் வாசிக்கும் போது தியானிப்பதற்கு எதுவுமே இல்லாதது போல நமக்குத் தோன்றலாம். ஆனால் கடவுளின் வல்லமை மிக்க செயல்களை நம் மனக் கண்முன் படம்பிடித்துக் காட்டுவதாக இப்பகுதி அமைந்துள்ளது. மீட்பின் வரலாற்றை நமக்கு நினைவூட்டுவதாக இருக்கிறது.
முதலாவதாக அன்னை மரியா தன் பாடலில் கூறியுள்ள
"மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்”. என்ற வார்த்தைகளின் படி கடவுள் அவருடைய இரக்கத்தை தலைமுறைதோறும் காட்டி வந்துள்ளார். இன்றைய நற்செய்தில் 42 தலைமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை எண்ணிப் பார்க்கும் போது கடவுளுடைய இரக்கம் எத்தனை தலைமுறைக்கும் மாறாதது. அது நிலைத்து நிற்கக் கூடியது என்ற நம்பிக்கையை இப்பகுதி நமக்குத் தருவதாக உள்ளது.
இரண்டாவதாக நம் கடவுள் வாக்குறுதியின் கடவுள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையை நமக்குத் தருகிறது இவ்வாசகப்பகுதி. கடவுள் தாவீதுக்கு அளித்த வாக்கின் படி இஸ்ரயேலை அரசரசாக இருந்து என்றென்றும் ஆள தாவீது குலத்திலிருந்தே இயேசுவை பிறக்கச் செய்து தனது வாக்கை அவர் நிறைவேற்றினார்.
மூன்றவதாக கடவுள் தன் மீட்புத் திட்டத்திற்காக ரூத்து போன்ற பிற இனத்தவரையும் உரியாவின் மனைவியாக இருந்து பின் தாவீதின் மனைவியான பெயர்சபா போன்ற பலவீனமுள்ளவர்களைக் கூட தேர்ந்தெடுத்துள்ளார். ஏன் தாவீது கடவுள் விரும்பாததைச் செய்த போதும் மனம் மாறி மன்னிப்பு கேட்ட போது மன்னித்து அவருடைய குலத்திலிருந்தே மீட்பரையும் தோன்றச் செய்துள்ளார்.
மேற்கண்ட இந்த மூன்று செய்திகளும் நமக்கு தரும் சிந்தனை என்ன? நாமும் கடவுளின் தலைமுறையினராக வாழ வேண்டும் என்பதே. கடவுளின் தலைமுறையினர் என்ற பட்டியலில் நமது பெயரும் இடம் பெற நாம் செய்ய வேண்டிய காரியங்கள் மூன்று. அவை 1. கடவுளின் இரக்கத்தை நம்புதல்
2.இறைவார்த்தை வழியாக அவர் நமக்குத் தந்த வாக்குறுதிகளை நம்புதல்
3. மனம் மாறியவர்களாய் கடவுளின் திட்டத்திற்குப் பயன்படுதல்.
இம்மூன்று செயல்களையும் நாம் செய்யும் போது நாமும் கடவுளின் தலைமுறையினராய் நிச்சயம் விளங்க முடியும். கடவுளின் மக்களாய் பெயர்பட்டியலில் இடம்பெற நம்மையே தயாரிக்க முயல்வோமா?
இறைவேண்டல்
கடவுளே! நீரே எங்கள் தொடக்கமும் முடிவுமாய் இருக்கிறீர். உம்முடைய தலைமுறையைச் சார்ந்தவர்களாக நாங்கள் வாழ்ந்து உம் மீட்புத் திட்டத்தில் பங்கேற்க உமதருள் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment