Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கடவுளின் அழைப்பு அகம் சார்ந்தது | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
ஆண்டின் பொதுக்காலத்தின் இரண்டாம் வெள்ளி
I: 1 சாமு: 24: 2-20
II : திபா 57: 1. 2-3. 5,10
III: மாற்: 3: 13-19
நாம் வாழும் இந்த உலகத்தில் பல நேரங்களில் விளம்பரங்களைக் கண்டு மயங்குகிறோம். தரமில்லாத பொருளை விளம்பரத்தில் கண்டவுடன் அவற்றை வாங்க வேண்டுமென துடிக்கின்றோம். ஆனால் விளம்பரம் இல்லாத தரமான பொருளை வாங்குவதற்குத் தயங்குகிறோம். அதேபோல வெளிப்புறத்தில் அலங்காரம் செய்த மனிதர்களை மதிக்கின்றோம். ஆனால் சாதாரண பாமரர்களை, ஏழை எளிய மக்களை மதிக்கத் தவறி விடுகிறோம். காரணம் நம்மில் பலர் அகத்தைப் பார்ப்பதைவிட புறத்தைப் பார்க்கிறோம். கடவுள் புறத்தைப் பார்ப்பதைவிட அகத்தைப் பார்க்கிறான்.இயேசு தன்னுடைய பணியைச் செய்வதற்காகப் படிக்காத பாமரர்களைத் தன்னுடைய சீடர்களாகத் தேர்ந்தெடுத்துள்ளார்.
நான் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் வரை குருவாக படிக்கச் செல்வேன் என்று நினைத்தது கூட கிடையாது. நான் பள்ளியில் படிக்கின்ற பொழுது அந்தளவுக்கு நன்றாக படிக்கக்கூடிய மாணவரும் கிடையாது. பெரிய திறமை என்று சொல்வதற்கு ஒன்றும் கிடையாது. ஆனால் கடவுள் என்னையும் அழைத்து திடப்படுத்தி அவருக்கு உகந்த வகையில் குருவாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார். கடவுள் என்னுடைய திறமைகளைப் பார்த்திருந்தால் நிச்சயம் அழைத்திருக்க மாட்டார். கடவுள் என்னுடைய அகத்தை பார்த்தார். எனவேதான் என்னை அழைத்துள்ளார்.
இஸ்ராயேல் நாட்டுக்குச் சவுலுக்கு பிறகு அரசரைத் தேர்ந்தெடுக்க சிறியவன் தாவீதை கடவுள் தேர்ந்தெடுத்தார். ஏனெனில் கடவுள் புறத்தைப் பார்ப்பவர் அல்ல ;மாறாக அகத்தைப் பார்ப்பவர். இந்த வரிசையில்தான் ஆண்டவர் இயேசுவினுடைய செயல்பாட்டைப் பார்க்கிறோம். தன்னுடைய பணியினைச் செய்து தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் 12 சீடர்களை அழைத்தார். அவர்களில் யாருமே பெரிதாகச் சொல்லும் அளவுக்கு கல்வி கற்கவில்லை. ஆனால் இயேசு அவர்கள் உள்ளத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த ஒளியைக் கண்டார். அகத்தைப் பார்த்தவராய் தன் பணிக்கென அவர்களை அழைத்தார்.
எனவே நாம் வாழும் இந்த சூழலில் இந்த உலகம் சார்ந்த ஜாதி, பணம், பெயர், புகழ், நிறம் , படிப்பு போன்ற பாகுபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அகம் சார்ந்த நல்ல உள்ளத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம். எல்லோரையும் சமமாக ஏற்றுக் கொள்ள முயற்சி செய்வோம். யாரையும் தரக்குறைவாக எடைப் போடக்கூடிய மனநிலையை விட்டொழிப்போம். இத்தகைய மதிப்பீடுகளோடு வாழும் பொழுது, நிச்சயமாக நம் ஆண்டவர் இயேசு நம்மை மென்மேலும் திடப்படுத்தி நம்மை அவருக்கு உகந்த கருவியாக உருமாற்றுவார். ஏனெனில் கடவுள் நம்முடைய அகத்தை பார்க்கிறார்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள ஆண்டவரே! உமது பணியைச் செய்ய உம் சீடர்களை அழைத்த பொழுது அகம் சார்ந்த பார்வையில் அணுகியதைப் போல நாங்களும் பிறரின் அகத்தை உற்று நோக்காமல் புறத்தை உற்றுநோக்கும் ஞானத்தைத் தருவீராக. ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment